“'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ரிலீஸாக போகிறது, 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி' இறுதிகட்ட பணிகளில் நடைபெறுகிறது, 'சங்குதேவன்' ஷுட்டிங் கிளம்புறேன், அதுக்கு அப்புறம் 'வன்மம்', சீனுராமசாமி இயக்கத்தில் 'இடம் பொருள் ஏவல்', எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம், 'மெல்லிசை'...” என நடிக்கவிருக்கும் படங்களின் லிஸ்ட்டை அடுக்கி மலைக்க வைக்கிறார் விஜய் சேதுபதி. பிஸியோ பிஸி விஜய் சேதுபதியிடம் 'உங்களது பேட்டி வேண்டும்' என்றவுடன் “காரில் தான் போய்க் கொண்டிருக்கிறேன் தாராளமாக பேசலாம்” என்றார். 



2015 டிசம்பர் வைக்கும் கால்ஷுட் இல்லயாமே.?

  
யார் சொன்னது டிசம்பர் 2015 வரைக்கும் என் கால்ஷுட் ஃபுல்னு. அப்படியெல்லம் ஒன்னுமில்லை. 6 படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கேன். அதனால புதுப்படங்களுக்கு கதை கேக்கல. ஒத்துக்கிட்ட 6 படங்களுமே எப்போ முடியும்னு தெரியாது. ஒத்துக்கிட்ட படங்கள் லேட்டாச்சுன்னா, கதை கேட்கிற படங்களில் நடிக்க தாமதமாகும். 2015 வரைக்கும் கால்ஷுட் ஃபுல் அப்படினு சொல்றது எல்லாம் ரொம்ப ஓவர். 


'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்'னு நடிச்ச படங்கள் எல்லாமே வித்தியாசமான ஜானர். இந்த மாதிரி படங்கள் ரீச்சாகும் அப்படினு எப்படி முடிவு பண்றீங்க?

 
இயக்குனர்கள் என்கிட்ட கதை சொல்லும்போது கதையில ஏதாவது வித்தியாசம் இருக்கணும். 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்' படங்கள் எல்லாமே அப்படி நான் நடிச்ச படங்கள் தான். இப்ப நான் நடிக்க ஒத்துக்கிட்ட படங்களும் அப்படித்தான். கதை புதுசா இருந்தா மக்கள்கிட்ட ரீச் ஆகும் அப்படினு எனக்கு நம்பிக்கை இருக்கு.


துணை நடிகரா இருக்கும் போது நிறைய அவமானங்களை சந்தித்து இருப்பீர்களே?

 
சார்... அதை ஏன் அவமானம்னு நினைக்கணும். ஒரு நாள் ஷுட்டிங்க்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகுது. படப்பிடிப்பு சமயத்துல சரியா நடிக்கல அப்படின்னா நிறைய ரீ-டேக் போகும். நம்மளால சுத்தி இருக்குறவங்களுக்கு கஷ்டம். 'என்னடா இது இவனுக்கு நடிப்பே வர மாட்டேங்குது'னு மனசுக்குள்ள நினைப்பாங்க. அதனால சிலநேரம் டென்ஷனா இருக்கும்.. நான் அவமானம் அப்படினு நினைக்கவே மாட்டேன். 


துணை நடிகர்ல இருந்து நடிகராகிருக்கேன்றது எனக்கு சந்தோஷம் தான். எந்த ஒரு படத்தையுமே நானா போய் கேட்கல. துணை நடிகராக இருக்கும் போது என்னோட நடிப்பைப் பார்த்து வந்த வாய்ப்புகள் தான். 'வர்ணம்' அப்படினு ஒரு படம், அதுல ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சேன். அந்தப் படத்துக்கு பஜ்ஜி (பாலாஜி தரணிதரன்) தான் வசனம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தோட கதையை பாலாஜி தயார் பண்ணப்போ, உதவி இயக்குநர் ஒருவர் என்னை சிபாரிசு பண்ணினார். இப்படி தான் எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஏன், 'பீட்சா', 'தென்மேற்கு பருவக்காற்று' இதெல்லாம் கூட இப்படி வந்தது தான். 


'சங்குதேவன்' படத்தயாரிப்புல இருந்து விலகிட்டீங்கனு சொல்றாங்களே?

 
'சங்குதேவன்' படத்தை இப்போ நான் தான் தயாரிக்கிறேன். முதல்ல ஜே.எஸ்.கே நிறுவனத்திற்கு ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் நான் பண்றதா இருக்கும் போது சில விஷயங்கள் ஒத்துப் போகல. இப்போ ஒத்துப் போச்சு.. தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன்.


உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வர்றதே இல்லயே.. அது எப்படி?

 
( சிரித்து.. நீண்ட யோசனைக்கு பின்).. ம்ம்ம்ம்... இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றததுன்னு தெரியலயே. 


குறும்பட இயக்குனர்களின் படங்களே நடிக்கிறீங்க. குறும்பட இயக்குநர்களால், வெள்ளித்திரை படங்களை இயக்க முடியுமான்னு பயம் எதுவும் இல்லையா உங்களுக்கு?

 
பயமா.. ஏன் சார் பயப்படணும்.. குறும்படமும், பெரிய படமும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். பெரிய படத்துக்கான வேலைகள் எல்லாமே குறும்படத்துலயும் கிட்டத்தட்ட செய்ஞ்சாகணும்.. அது கம்மி பட்ஜெட், கம்மி நேரம்.. இதுல பட்ஜெட் கொஞ்சம் பெரிசு, வேலையும் அதிகம். அவ்ளோதான்.. மத்தபடி, குறும்படத்துலயே ஜெயிச்சு காட்டிட்டாங்கன்னா, பெரிய படத்துல ஜெயிக்கறது சுலபம் தான்!