Sunday 13 October 2013

Tagged Under: ,

நாடு வளம்பெற காடுகளை காப்போம்!!

By: Unknown On: 09:50
  • Share The Gag
  • திருவள்ளுவர் “நாடு’ அதிகாரத்தில் மலையைப் பற்றி “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது, ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள். தென் மேற்கு பருவமழையின் போது தமிழகம், கேரளாவிற்கு இடையில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பாக நின்று கேரளாவிற்கு அதிக மழையை தருகிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நீலகிரி, கோவையின் சில பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையால் பயனடைகிறது.


                                       13 - save_our_forest_

     


    உலகில் ஆறுகள் அனைத்தும் பனிமலை அல்லது மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன. பனிமலை( இமயமலை)யில் கங்கை உற்பத்தியாகிறது.காவிரி, பெரியாறு, வைகை, தாமிரபரணி போன்றவை மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. மழைப்பொழிவு ஏற்படும் அனைத்து நிலப்பகுதியும் நீர்ப்பிடிப்பு பகுதிகள். இதில் பெய்யும் மழை நீர் காடாக இருந்தால், அது பூமியில் உள்ளிழுக்கப்பட்டு சிறு, சிறு நீருற்றுகளாக வெளிப்படும். பின், அவை ஓரிடத்தில் ஒன்று கூடி சிற்றோடைகளாகவும், அவை நீரோடையாகவும், பல ஒன்று சேர்ந்து ஆறாகவும் மாறுகிறது. இந்த மழை நீர் பாறை அல்லது விவசாய நிலத்தில் விழுந்தால், மழை பெய்த அன்றே (நிலத்தில் உறிஞ்சியது போக மீதம்) வடிந்து நீரோடை வழியாக ஓடி, நீர் நிலையை சென்றடைகிறது.



    காடுகள் ஒரு வங்கியில் இருக்கும் முதலீடு போல் செயல்படுகிறது. காலப்போக்கில் நாம் பெறும் பயன் (வட்டி) போல், வற்றாத நீரோடை, ஆறுகளை தருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்பது நெறிமுறை
    அத்துவானக் காட்டுக்குள்ளே ஒரு சிங்கம் இருந்ததாம். அந்தச் சிங்கம் அந்தக் காட்டில் கம்பீரமாக நடந்து வருமாம். இது நமக்கு பாட்டி சொன்ன ஒரு கதையின் தொடக்கப் பகுதி. மீசைக்கார அண்ணாச்சி ஒருவர் சுமார் 600 சதுர கி.மீ. காட்டுப் பகுதியில் ஒளிந்து இருந்ததாகவும், அப் பகுதியில் நிலத்தில் சூரிய வெளிச்சம் படாத அளவுக்கு காடுகள் அடர்ந்து இருந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இன்றைய காடுகளின் நிலை என்ன?


    நீலகிரி மாவட்டத்தில் நிலச் சரிவால் போக்குவரத்து பாதிப்பு. கேரளம் – தமிழகச் சாலையில் நிலச் சரிவால் போக்குவரத்து பாதிப்பு. ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் போக்குவரத்து நிறுத்தம் போன்ற செய்திகளை அடிக்கடி பத்திரிகைகளில் படித்து வருகிறோம். ஏன் இந்த நிலை? நாம் நமது சுயநலத்துக்காகவும் தேவைக்காகவும் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, நிலச் சரிவு, காட்டுத் தீ, புவி வெப்பமடைதல் போன்றவை நிகழ்கின்றன.
    “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்’ என திருவள்ளுவர் கூறியுள்ளார். நீல மணிபோன்ற நீரையுடைய அகழியும் வெட்ட வெளியான நிலப்பரப்பும் உயரமான மலையும் மரநிழல் செறிந்த காடுகளும் கொண்டுள்ளதே அரண் என்பது இதன் பொருளாகும்.


    சர்வதேச அளவில் இந்தியாவில் காடுகளின் வளத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அடர்த்தியான பல்லுயிர்ப் பெருக்க காட்டுப் பகுதிகள் உலகில் 25 உள்ளதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 இந்தியாவில் உள்ளன. கிழக்கு இமயமலைத் தொடர், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் மேற்கு இமயமலைத் தொடர் ஆகியவையே இம்மூன்றாகும். மேலும், உலகில் காணப்படும் பன்னிரண்டு பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், சமீப காலமாக இந்தியாவில் காடுகளின் வளம் குறைந்து வருகிறது.


    இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் காடுவளம் 60 சதவீதமாக இருந்தது. 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் காடுகளின் பரப்பு 23.41 சதவீதமாகும். நாட்டில் பாதிக்கு மேல் உள்ள காடுகளை கடந்த 66 ஆண்டுகளில் அழித்து விட்டோம். கட்டடம் கட்டுவது, சாலைகள் அமைப்பது, தொழிற்சாலைகள் அமைப்பது என பலவற்றுக்காகவும் நாம் காடுகளை அழித்துவிட்டோம். நாட்டின் வளர்ச்சிப் பணி என்பது முக்கியமானதுதான். அதற்காக பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை அன்னை கழுத்தை நெரிக்கலாமா?


    அழிக்கப்பட்ட காடுகளுக்கு சமமாக தரிசு நிலங்களில் காடுகளை உருவாக்கத் தவறி விட்டோம். தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.


    தேசிய அளவில் தமிழகத்தின் காடு வளம் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் மொத்த காட்டுப் பகுதி 22,877 சதுர கி.மீ. ஆகும். இது மாநில நிலப்பரப்பில் 17.59 சதவீதமாகும்.
    ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீதம் காடு வளம் இருக்க வேண்டும். எனினும், தமிழகத்தில் 5 தேசிய பூங்காக்கள், 10 வனவிலங்கு சரணாலயங்கள், 14 பறவைகள் சரணாலயங்கள், 4 புலிகள் காப்பகங்கள், 4 யானை பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.


    தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்தான் காடுகளின் பரப்பு உள்ளது. இந்த மாவட்டத்தில் காடுகளின் பரப்பு 81.84 சதவீதமாகும். இந்தியாவில் காணப்படும் 17,672 பூக்கும் தாவரங்களில் 5,640 தாவரங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இந்த தாவரங்களில் பெரும்பாலானவை மிகவும் அரிதானவையாகும்.


    மேற்கு தொடர்ச்சி மலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை மற்றும் பழனி மலைத் தொடர்களில் எண்ணிலடங்கா மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. காடுகளைக் காப்பது நமது தலையாய கடமையாகும்.
    மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுத்து, காடுகளைக் காக்க வேண்டும். ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவனிடம், “காடுகளை காப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?’ எனக் கேட்டார். அதற்கு அந்த மாணவன், “சும்மா இருந்தாலே போதும் சார்’ என பதில் கூறினான். மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். ஆனால் ஆசிரியர், “இவன் கூறியது சரியான பதில்தான். காடுகளைப் பாதுகாக்க, நாம் காடுகளை அழிக்காமல் சும்மா இருந்தால் போதுமானது என்பது அதன் பொருளாகும்’ என்றார். மற்ற மாணவர்கள் புரிந்து கொண்டார்கள். நாமும் புரிந்துகொள்ள வேண்டும்!

    0 comments:

    Post a Comment