Wednesday 23 October 2013

Tagged Under:

சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி!

By: Unknown On: 18:13
  • Share The Gag
  • சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி
    த்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் பெருமை மிக்க நகரம் பதேபூர் சிக்ரி. இதை உருவாக்கியவர் மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர். பதேபூர் சிக்ரி 1571- 1585ம் ஆண்டு வரை மொகலாயப் பேரரசின் தலைநகரமாகவும் திகழ்ந்-துள்ளது. இதன் பின்னணி, சென்டிமென்ட் கலந்த சுவாரஸ்யம்.
     
    1560ம் ஆண்டு வரை ஆக்ரா கோட்டைதான் மொகலாயப் பேரரசின் தலைநகரம். அப்போது ராஜபுத்திர இளவரசியான இந்துப்பெண் ஹர்கா பாய் என்பவரை மணந்து கொண்டார் அக்பர். ஹர்காபாய்தான் பின்னாளில் மரியம்-உல்- ஷமானி பேகம் (ஜோதாபாய் அக்பர்) ஆனார். 

    அக்பர்- மரியம் உல் ஷமானி பேகம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டும் குழந்தைப்-பருவத்திலேயே இறந்து விட்டன. சோகத்தில் இருந்த அக்பருக்கு சூஃபி ஞானி சலீம் சிஷ்டி என்பவர் ஆறுதல் கூறினார். இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு உண்டு என ஆசீர்வதித்தார்.

    அவர் சொன்னது போலவே அக்பர் தம்பதிக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியிடைந்த அக்பர் அந்த ஞானியின் நினைவாக குழந்தைக்கு நூருதீன் சலீம் ஜஹாங்கீர் என பெயரிட்டார். அந்தக்குழந்தைதான் பின்னாளில் ஜஹாங்கீர் சக்கரவர்த்தி ஆனது.

    மேலும் ஞானி சலீமை கவுரவப்படுத்தும் வகையில் சலீம் வசித்து வந்த பதேபூரில், அரண்மனையையும் நகரையும் உருவாக்கினார் அக்பர். புதிய கட்டடங்கள் கலைநயத்துடன் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து மொகலாயப் பேரரசின் தலைநகரையும் பதேபூர் சிக்ரிக்கு மாற்றினார் அக்பர். அக்பரின் அமைச்சரவையில் நவரத்னங்களாகப் போற்றப்பட்ட பீர்பால் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களின் ராஜாங்கமும் இங்குதான் நடந்துள்ளது.

    இவற்றையெல்லாம் நினைவு கூறும் வகையில்தான் அழகும், கலைத்திறனும் கூடிய கட்டடங்கள் இன்றளவும் பதேபூர் சிக்ரியில் பளபளத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பொதுமக்களை மன்னர் சந்திக்கும் திவான்-ஐ-ஆம் ஹால், பிரதிநிதிகளை சந்திக்கும் திவான்-ஐ- காஸ் ஹால், பீர்பால் ஹவுஸ், மரியம் உல் ஷமானி (ஜோதா அக்பர்) அரண்மனை, ஐந்தடுக்கு மாளிகையான பஞ்ச் மஹால், ஜும்மா மஸ்ஜித், டாம்ப் ஆப் சலீம் சிஷ்டி, புலந்த் தர்வாஸா போன்ற கட்டடங்கள் முக்கியமானவை. பதேபூர் சிக்ரியை 1986ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
     
    எப்படிப் போகலாம்?
     
    ஆக்ராவில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் பதேபூர் சிக்ரி நகரம் உள்ளது. சாலை மார்க்கமாவும் செல்லலாம். ஆக்ராவில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆக்ராவில் இருந்து ரயிலிலும் போகலாம். ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது.

    0 comments:

    Post a Comment