Thursday 31 October 2013

Tagged Under:

தமிழ் பெயர் படங்களுக்கும கேளிக்கை வரி -ஹைகோர்ட்டில் வழக்கு!

By: Unknown On: 16:51
  • Share The Gag
  • தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது என்றும், வரிச்சலுகை வழங்கிய படத்திற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.

    31 - cine tax

    கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாள் தமிழக மக்கள் உரிமைக் கழக இணை செயலாளர் புகழேந்தி பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “சினிமா படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 22.7.2006-ல் உத்தரவை பிறப்பித்தது.


     இதன் பின்னர் 4 மாதம் கழித்து மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. பழைய படம், புது படம் எது வேண்டுமானாலும் தமிழ் பெயர் இருந்தால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில் 1950-ம் ஆண்டு எடுக்கப்பட்ட “ரத்தக்கண்ணீர்”, “மனோகரா” உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் “மன்மதன்”, “போக்கிரி” ஆகிய படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டன.


    அரசு உத்தரவு எதிரொலியாக ஜில்லுன்னு ஒரு காதல், தமிழ் எம்.ஏ., எம்டன் மகன் ஆகிய பெயர் கொண்ட படங்கள் வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக “சில்லுன்னு ஒரு காதல்”, “கற்றது தமிழ்”, “எம்மகன்” என்று தமிழில் பெயரை மாற்றி வைத்து வரி விலக்கை பெற்று விட்டனர். இந்த வரி சலுகை என்பது படங்களிடையே பாரபட்சமாக உள்ளது. பொதுநலன் கருதிதான் வரிச் சலுகை வழங்க வேண்டும். மற்றபடி வரி சலுகை வழங்க சினிமா சட்டத்தில் இடமில்லை. தமிழ் பெயர் படங்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, சமுதாய வளர்ச்சிக்கோ பயன்படும் வகையில் இல்லை.


    இவ்வாறு வீணாக வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை கேளிக்கை வரி இழப்பு ஏற்படுகிறது. 2003-2004-ல் மட்டும் ரூ.75 கோடியே 7 ஆயிரம் கேளிக்கை வரி கிடைத்தது. ஆனால் 2006-ம் ஆண்டு இது 16 கோடியே 35 ஆயிரமாக குறைந்து விட்டது. தமிழ் பெயர் என்பதற்காக வரி சலுகை வழங்குவது அரசுக்கு வரி இழப்பு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே தமிழ் பெயர் கொண்ட படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.”என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.


    இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். “எந்த படங்களுக்கு வரி சலுகை அளிப்பது, எதற்கு அளிக்க தேவையில்லை என்பதை முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றும், இதில் கோர்ட்டு தலையிட முடியாது” என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் இது குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது என்றும் தீர்ப்பில் கூறியிருந்தனர்.


    இந்நிலையில் மற்றொரு வழக்கறிஞர் மோட்சம் இப்போது தாக்கல் செய்துள்ள இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment