மிகப் பெரிய ஆளுமைகள் என்று நாம் கொண்டாடுபவர்கள் தங்கள் உறவினர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள். இதோ ஒரு சுவையான பதிவு.


எடிசன் வாங்கிய 'பல்பு'

வெகுகாலம் முயன்று மின்சார பல்பை வெகு நேரம் எரிய வைக்கும் இழையை கண்டறிந்துவிட்டு எடிசன் குதூகலித்துக்கொண்டு இருந்தார். யாரிடமாவது தன்னுடைய சாதனையைக் காட்டவேண்டும் என்று கைகள் பரபரத்தன. வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் மனைவியைத் தவிர வேறு யாரை எழுப்புவது? அவரை எழுப்பி, “டியர் எத்தனை அளப்பரிய சாதனை செய்திருக்கிறேன் நான் பார்!” என்று சொன்னதும், அவரின் மனைவி, “நடுராத்திரியில விளக்கை இப்படியா எரியவிடுவீங்க? கண்ணெல்லாம் எரியுது. தூங்கவிடுங்க!” என்று சொன்னபோது, எடிசனின் முகம் எப்படி ஆகி இருக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.


புத்தரின் உறுதிமொழி


புத்தர், சித்தார்த்தனாக இருந்த காலத்தில், அவரோடு பிணைந்திருந்த உறவுகளைக் காண நேரிட்டது. அவரின் தந்தை சுத்தோததனரை கண்டு வெகு இயல்பாக அவர் பேசினார். யசோதையை மனைவியாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதும், புன்னகை மாறாமல் தன்னை நோக்கி வந்த யசோதையை புத்தத் துறவியாக தீட்சை கொடுத்துவிட்டு, “அன்னையே!” என்று அழைத்தார். கூடவே, கூடுதல் இணைப்பாக மிக இளைய சிறுவனான ராகுலனுக்கும் துறவை அவர் கொடுத்து விடவே, “இனி நான் என் அரசை ஆள எனக்குப்பின் யாரிருக்கிறார்? புத்தரே எனக்கொரு வாக்கு கொடுங்கள்... இனிமேலே பெற்றோரின் அனுமதி இல்லாமல் இளையவர்களுக்கு துறவு தரமாட்டீர்கள் என்கிற உறுதியை நீங்கள் எனக்குத் தர வேண்டும்!” என்று அவர் கதற, புத்தர் அதற்கு பின் அவ்வாறே நடந்துகொண்டார்.


ஐன்ஸ்டீனும் நிலாவும்


ஐன்ஸ்டீன் புது மாப்பிள்ளை ஆனார். கல்யாணம் முடிந்த சில நாட்களில் அவர் கைகளில் ஒரு தாளை அவரின் இளம் மனைவி திணித்தார். “நிலவைப் பற்றிய கவிதை இது!” என்று அவர் சொல்ல, ஐன்ஸ்டீன் அதை வாங்கி சலனமில்லாமல் படித்தார். ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும். உதட்டை பிதுக்கிவிட்டு, “என்ன இப்படி ஆஹா ஓஹோ அப்படின்னு நிலாவை புகழ்ந்து இருக்கே? நிலாவில் காற்றில்லை, முழுக்க மலைகள்தான். அங்கே ஒருத்தரும் வாழ முடியாது. முழுக்க அலங்கோலம். அதைப்போய் அழகு என்று கவிதை வேறு! என்ன பொண்ணுமா நீ?” என்று கடிந்துகொண்டார் ஐன்ஸ்டீன்.