Tuesday 8 October 2013

Tagged Under: ,

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம்!

By: Unknown On: 11:41
  • Share The Gag
  • கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் (அக்.8, 1959) 


    தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே சங்கம் படைத்தான் காடு என்னும் சிறிய ஊரில் அருணாச்சலனார்-விசாலட்சி தம்பதியருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு பிறந்தார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலனாரும் கவி பாடும் திறமை கொண்டவர். இவருக்கு கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும், வேதாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.


    எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிப்படிப்பை மட்டுமே இவரால் மேற்கொள்ள முடிந்தது. பின்னர், திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டார். தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டினார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் கிராமியத்தை தழுவியதாக இருககும். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955-ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, சினிமாவில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.



    இவருக்கும் கௌரவாம்பாள் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் 1959-ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குமரவேல் என பெயர்சூட்டி மகிழ்ந்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அந்த ஆண்டிலேயே இதே தேதியில் (08.10.1959) அகால மரணம் அடைந்தார்.



    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம்’ அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

    0 comments:

    Post a Comment