Saturday 30 November 2013

Tagged Under: ,

‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’ கனவாக விரியும் சாகசக் கதை!

By: Unknown On: 11:52
  • Share The Gag
  •  

    கற்பனைக்கெட்டாத தொலைவில் ஒரு உயர்ந்த இலக்கு. பிரத்யேக சிறப்பியல்புகளைக் கொண்டவர்களின் துணையுடன் அதை அடைய ஒரு நெடிய பயணம். வழியில் எதிர்ப்படும் இன்னல்கள், எதிர்கொள்ளும் சாகசங்கள். ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த வகைக் கதைகள் படிப்பதற்குச் சுவையாக இருக்கும்.

    ஆனால் அவற்றைப் பொது ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் திரைப்படமாக எடுப்பதற்கு ஒரு ஜாம்பவானால்தான் முடியும். பிரம்மாண்டமான மாயக்கனவுலகின் திரைவடிவமாக உருவான ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ வரிசைப் படங்களை இயக்கிய பீட்டர் ஜாக்ஸன் இயக்கத்தில் உருவாகி, வரும் டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவிருக்கும் படம் ‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’.

    ‘ப்ரெய்ன் டெட்’ என்ற கொடூரமான ஜோம்பி படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற பீட்டர் ஜாக்ஸன், மகத்தான தனது படைப்புத் திறன் மூலம் ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’, ‘கிங்காங்’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளைத் தந்தவர். ஹாலிவுட்டின் சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் பீட்டர் எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தந்தை ஒரு சாதாரண குமாஸ்தா. தாய் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தவர். சிறு வயதிலேயே திரைப்படக் கலை மீது காதலை வளர்த்துக்கொண்ட பீட்டர் 1933இல் வெளியான ‘கிங்காங்’ படம் தனக்கு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    இறுதிக் காட்சியில் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலிருந்து அந்த ராட்சத கொரில்லா குரங்கு கீழே விழுவதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதாராம். பின்னாட்களில் அதே கதையை வியக்க வைக்கும் தனது தொழில்நுட்ப அறிவைக்கொண்டு அற்புதப் படைப்பாக அவரால் உருவாக்க முடிந்தது. இத்தனைக்கும் திரைப்பட தொழில்நுட்ப அறிவைத் தானே கற்றுக்கொண்ட ஏகலைவன் அவர்.

    ‘லார்டு ஆப் தி ரிங்ஸ்’ கதையை எழுதிய ஜே.ஆர்.ஆர். டோல்கீனின் மற்றொரு படைப்பான ‘தி ஹாபிட்’ நாவலை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய ‘தி ஹாபிட்: தி அன் அன்எஸ்க்பெக்டட் ஜர்னி’ படத்தின் இரண்டாம் பாகம் இப்படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியடைந்தது. கடந்த ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘தி ஹாபிட்: தி அன் அன்எஸ்க்பெக்டட் ஜர்னி’ படம் பெற்றது. பொதுவாக ஒரு நொடிக்கு 24 பிரேம்கள் என்ற அளவில்தான் இன்றுவரை காட்சிகள் உருவாக்கப்படுகின்றன.

     இந்தப் படம் ஒரு நொடிக்கு, 48 பிரேம்கள் கொண்டது என்பதால் அதிக அளவிலான பொருட்செலவு தவிர்க்க முடியாததானது. தவிர இதுவரை இல்லாத தொழில்நுட்பம் என்பதால் எல்லாத் திரையரங்கிலும் இந்தப் படத்தைத் திரையிடுவதில் சிக்கல் இருந்தது. எனவே, வழக்கம்போல நொடிக்கு 24 பிரேம்கள் என்று மாற்றம் செய்யப்பட்டுப் படம் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’ படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியிருக்கிறார் பீட்டர் ஜாக்ஸன். கரோலின் கனிங்ஹம், பிரான் வால்ஷ் ஆகியோருடன் இணைந்து அவரே படத்தைத் தயாரித்திருக்கிறார். பிரான் வால்ஷ் அவரது காதல் மனைவியும் கூட. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் உலகமெங்கும் விநியோகம் செய்யப்படும் இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் காணும் பிரம்மாண்டமான ஃபேன்டஸி கனவாக அமையும் என்று படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிகிறது.

    0 comments:

    Post a Comment