Thursday 21 August 2014

Tagged Under: ,

மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்..!

By: Unknown On: 19:37
  • Share The Gag
  • ஒழுக்கம் என்றால் என்ன என்பதற்கு ஒவ்வொருவரும் தமது அறிவுக்கெட்டிய வரையில் அவரவர் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். ஒருவர் திருவள்ளுவர் சொன்னதைச் சொல்வார். இன்னொருவர் கம்பராமாயணம், பாரதம் என்பவற்றில் அவரால் ஒழுக்கம் என்று புரிந்துகொள்ளப்பட்ட விடயத்தைக் கூறுவார். வேறு சிலர் யாரோ ஒருவருடைய சுய சரிதையை உதாரணம் காட்டி அதில் உள்ளது தான் ஒழுக்கம் என்பார். இன்னும் சிலர் மத நூல்களில் சொல்லப் பட்டவற்றை தான் ஒழுக்கம் என்பார்.

    இவ்வாறாக அவரவர் எதையெல்லாம் ஒழுக்கம் என்று புரிந்துகொண்டார்களோ அதை எல்லாம் ஒழுக்கம் என்பர். ஒழுக்கம் பற்றி நாம் இதுவரையில் அறிந்து கொண்ட விடயங்களைப் பற்றி சிறிது அலசிப் பார்ப்போம்.

    முதலில், ஒரு மனிதனின் வாழ்க்கை எப்போதோ, எவராலோ உருவாக்கப்பட்ட விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டுமா என்பது பற்றிப் பார்ப்போம். மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் இயற்கையின் ஒழுங்குகளை உள்வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தும் போது எமக்கு மட்டும் ஏன் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்? இந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஓட்டுமொத்த மனித குலத்துக்கும் ஏற்புடையதாக அமைக்கப்பட முடியாமைக்குக் காரணம் என்ன? ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மரபும் மனித இனத்தைக் கூறு போட்டதைத் தவிர வேறு எதைச் சாதித்திருக்கிறது? அது மட்டுமல்ல. இந்த மதங்களாலும், மரபுகளாலும் நாம் மந்தைகளாக மாறிவிட்டோமே, ஏன்?

    நாம் எப்படி மந்தைகளாக்கப்பட்டு விட்டோம் என்பதை ஒரு காட்சியாகப் பார்ப்போம். இந்தக் காட்சியின் பாத்திரங்கள், ஒரு இடையன், ஒரு கைத்தடி, மந்தைக்கூட்டம். இங்கே கால மாற்றத்துக்கு இடமளிக்காத மதக் கோட்பாடுகளையும், மரபுகளையும் சுமந்து திரிபவன் தான் இடையன். மதமும் மரபும் உருவாக்கியுள்ள ஒழுக்க விதிகள் தான் கைத்தடி. இடையனின் வழிகாட்டலை ஆய்வுக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளும் கூட்டம் தான் மந்தைக்கூட்டம். இடையனின் தொழில் தனது தேவைக்கு ஏற்ப மந்தைகளை மேய்ப்பதும் பின்னர் பண்ணைக்கு அழைத்துச் செல்வதும் தான். ஏற்கனவே இந்தச் சுழற்சிக்குப் பழக்கப்பட்டுள்ள மந்தைகளை மேய்ப்பது இடையனுக்கு மிகவும் சுலபம்.

    தற்செயலாக, அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஒன்று ஏதோ ஒரு விழிப்புணர்வால் இடையனுடைய செயற்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று கேட்டாலோ அல்லது ஒரு புதிய பாதையைத் தெரிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் அந்தக் கூட்டத்தில் இருந்து வேறுபட முயற்சித்தாலோ இடையனால் அதைத் தாங்க முடியாது. தன்னிடமுள்ள கைத்தடியால் அந்த ஒற்றைக்கு ஒரு அடி . அத்துடன் இடையனின் சுழற்சிக்குப் பழகிப் போய் அதுதான் உலகம் என்று தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஏனையவைகூட ஆத்திரமடைந்து 'இன்னுமொரு அடி போடுங்கள்! இன்னுமொரு அடிபோடுங்கள்!!' என்று இடையனை உற்சாகப்படுத்தும், பாவம், அந்த ஒற்றைதான் என்ன செய்யும்?

    மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்! எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஒழுக்க விதி என்று சொல்லப்படுகின்ற ஒன்று, ஒரு இனத்தையோ, மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது ஒரு மரபையோ ஏனையவற்றை விட உயர்ந்தது என்று பறை சாற்றுகிறதோ அதைக் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். வேண்டாம்! வேண்டாம்!! குழிதோண்டிப் புதைத்துவிட்டால் பிறிதொரு காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சிக்குள் அகப்பட்டு மீண்டும் மனிதர்களை மந்தைக் கூட்டங்களாக்கிவிடும். எனவே எரித்துவிடுங்கள். மதங்களும், மரபுகளும், கலாச்சாரங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவையே அன்றி மனிதனை மந்தைகளாக்குவதற்கு அல்ல. உண்மையில் ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுள்ள மனிதனாக இருந்தால் போதும். ஏனெனில் ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை. அதாவது உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாணி தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை

    0 comments:

    Post a Comment