Monday 1 September 2014

Tagged Under:

இனி ஊசி குத்தினால் வலிக்காது

By: Unknown On: 19:35
  • Share The Gag
  • மருத்துவம் நாளுக்கு நாள் நவீன மயமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு சிகிச்சை அளிக்க குத்தப்படும் ஊசியின் அளவில் மட்டும் பெரிய மாற்றம் வராமல் இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உடலில் இன்சுலினை செலுத்துவதற்கு ஊசி குத்தும் முறையையே கையாண்டு வருகின்றனர். இதே போல சிறிய குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் டாக்டரிடம் சொல்லி ஊசி குத்திவிடுவேன் என்று கூறி பயமுறுத்திய காலம் தற்போது மாறியுள்ளது.

    ஊசி குத்தும் உணர்வே இல்லாமல் மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதற்கு மைக்ரோ நீடில்களை இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து இன்சுலின் ஊசி பயன்படுத்துபவர்களுக்கு கையில், ஊசி குத்தியதன் அடையாளங்கள் இருக்கும். ஆனால் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள மைக்ரோ நீடில் 130 மைக்ரான் டையாமீட்டர் அளவுடையது. தட்டையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோ நீடிலில் 12 நீடில்கள் உள்ளது. இதை சாதாரண மனிதன் கூட பயன்படுத்தும் அளவுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரித்துள்ளனர்.

    சிரஞ்சில் இருந்து வரும் மருந்தை இந்த மைக்ரோ நீடில்கள் வலியில்லாமல் உடலுக்குள் செலுத்துகிறது. இது சாதாரண ஊசி நீடில்கள் தயாரிக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்படுவது கிடையாது. அதற்கு பதிலாக மைக்ரோ நீடில்கள் சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் சிலிகான் மனித ரத்தத்திற்கு ஏற்றது கிடையாது. சிலிகான் மனித ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு கேடு விளைவிக்க வாய்ப்புகள் உள்ளது.

    இதனால், மைக்ரோ நீடில் முழுவதும் டைட்டானியம் மற்றும் தங்கம் கலந்த கலவைப்பூச்சு அடர்த்தியாக பூசப்பட்டுள்ளது. இதனால் சிலிகான் ரத்த பிளாஸ்மாவை பாதிக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியர் கே.ராஜண்ணா கூறுகையில், சாதாரண ஊசிக்கும், மைக்ரோ நீடிலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது. மைக்ரோ நீடில் ஊசிகளில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நீடிலை பயன்படுத்தும் போது மனித உடலில் அதன் அடையாளங்கள் இருப்பது மிகவும் குறைவாக இருக்கும். மேலும் உடலுக்குள் செலுத்தப்படும் மருந்துகள், பரவலாக செலுத்தப்படும் என்பதால், வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. சாதாரண மனிதர்கள் கூட ஆபத்து காலங்களில் இந்த மைக்ரோ நீடில் பொருத்திய ஊசிகளை எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது, உடலில் எவ்வித காயங்களையும் ஏற்படுத்தாது என்பதால், இன்சுலின் ஊசிகள் பயன்படுத்துபவர்களுக்கு இது வரப்பிரசாதமாகும் என்றார்.

    0 comments:

    Post a Comment