Monday 30 September 2013

Tagged Under: , ,

இந்தி, தமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க புதிய திட்டம்!

By: Unknown On: 07:55
  • Share The Gag






  •  இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை. உயர்கல்வி துறை தரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருகிறது. இதற்காக தேசிய தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவசமாக அனைத்து வகையான தரமான பாடத்திட்டங்கள் வழங்குவதே முக்கிய நோக்கம். 

    http://nptel.iitm.ac.in  மற்றும் http://.youtube.com/iit  என்ற இணையதள முகவரியில்  எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் உள்ளன. வீடியோவிலும் கிடைக்கிறது. முதல்நிலையில் பி.இ பிரிவில் கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. பேராசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் இந்த வசதி மூலம் எளிமையாக படித்து அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இதற்கு யி96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 700 பாடங்கள் இணையதளம் வழியாக இலவசமாக படிக்க முடியும். 14,000க்கு மேற்பட்ட வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்னேறி வருகிறது. இதில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள். அமெரிக்கர்கள் 5 சதவீதமும், மற்ற நாடுகளை சேர்ந்த 15 சதவீதம் பேரும் பயன்படுத்துகின்றனர்.

    இத்திட்டத்தின் 4வது நிலை 2014ல் தொடங்குகிறது. இதில், முக்கிய அங்கமாக இதுவரை அளிக்கப்பட்டு வரும் மொத்த பாடப் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பிராந்திய மொழிகளில் அளிக்கும்போது, மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு அறிவுதிறனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று ஐஐடி பேராசிரியர்கள், இத்திட்டத்தின் நிர்வாகிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பி.இ பாடத்திட்டங்களை மொழிபெயர்ப்பு செய்து இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணியை ஐஐடிக்கள் தொடங்கவுள்ளது. இதுதவிர, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதற்கான பாடத்திட்டங்களை ஆன்லைனில் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இதுகுறித்து என்பிடிஇஎல் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான மங்கல சுந்தர், திட்ட அலுவலர் உஷா நாகராஜன் கூறியதாவது:
    மாணவர்கள் உயர்கல்வியை கற்கவும், தொடர்ந்து புதிய தொழில்பயிற்சிகளை பெறவும் ஆன்லைன் மூலம் இலவசமாக பாடம் நடத்தப்படுகிறது.  முதல் நிலையில் பி.இ,  மேலாண்மை படிப்புகள் தொடர்பாக 265 பாடங்கள் பெற வழி வகுக்கப்பட்டது. தற்போது 650க்கும் மேற்பட்ட பாடங்கள் இணையதளத்தில் பெற முடியும். ஆண்டுதோறும் 200 புதிய பாடத்திட்டங்களை  சேர்க்க உள்ளனர்.

    அடுத்த கட்டமாக பிராந்திய மொழிகளில் பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களை இணையதளம் மூலம் அளிக்க முயற்சித்து வருகிறோம். முதல்கட்டமாக இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த வசதியை தர முடிவு செய்துள்ளோம். விரைவில் இதற்கான மொழிபெயர்ப்பு பணிகள் தொடங்கும். இதற்கு அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்பு முக்கியம்.

     இதுதவிர, திறன்மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கவுள்ளோம். பிராந்திய மொழித்திட்டத்தின் மூலம் பொறியியல் படிக்கும் 70 சதவீத மாணவர்கள் பயன்பெற முடியும். அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான பாடத்திட்டங்களையும் இணையதளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும், என்பிடிஇஎல் திட்டத்தின் கீழ் புதிய சான்றிதழ் படிப்புகள் தொடங்கவுள்ளன. இதில் அனைத்து பொறியியல் மாணவர்களும் சேரலாம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

    இந்த பயிற்சி திட்டங்கள் குறித்து நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி பிரவின் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழில்நுட்ப இயக்குநர் அல்லது கல்வித்துறை செயலாளர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்கம், துண்டுபிரசுரங்கள் அளித்தல், கலை நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

    எக்ஸ்ட்ரா தகவல்

    என்பிடிஇஎல் திட்டத்தில் 2008ம் ஆண்டில் 41,42,726 பார்வையாளர்கள் இருந்தனர். ஒரு சந்தாதாரர்கள் கூட இல்லை. இப்போது 9 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 697 பார்வையாளர்கள் உள்ளனர். 1,98,041 பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.

    0 comments:

    Post a Comment