Tuesday 10 December 2013

Tagged Under: , , , ,

தனிமனிதனும் சமுதாயமும்!

By: Unknown On: 07:29
  • Share The Gag


  • இந்த உலகில் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கிறான். பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைபட்டு கூண்டுப் பறவையாகின்றான் என்கிறார் ரூசோ. எவ்வளவு எதார்த்தமான உண்மை இது!


    சிறைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராமல் மனிதன் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறான். எதை நோக்கி ? பணம் , புகழ், அதிகாரம், அந்தஸ்து இப்படி பட்டியல் நீள்கிறதே அதை நோக்கி.


    எவரும் தம்முடைய வாழ்க்கையை தாம் தீர்மானிப்பதாக தெரியவில்லை. அதிலும் இந்தியா கலாச்சாரம் மிக்க நாடு என்ற பெருமை கொண்டுள்ளது. சமுதாயம் கலாச்சாரம, பண்பாடு என்று பழம் பெருமை பேசியே தனிமனித சுதந்திரத்தை காலங்காலமாய் விழுங்கி வருகிறது.


    புதியதாய் மணம் முடித்துக் கொண்ட இளம் தம்பதியினர் சந்தோஷமாய் இருக்கின்றனர். சுற்றி இருப்பவரோ ‘ என்னது ‘ இரண்டு வருடங்களாகியும் ஒரு புழு பூச்சி இல்லாமல் போயிற்றே ? என ஆரம்பித்து அவர்களை கேள்வி கேட்டே அழ வைத்துவிடுவர்.


    கல்வித் துறையில் உள்ள சீர்கேட்டை பெரும்பாலோர் அறிவர். இருந்தும் பட்டம் பெற்ற இளைஞனைப் பார்த்து மக்கள் இன்னும் வேலைக்கு போகலையா? என்றே 90 வயது முதியவர் வரை கேட்டுக்கேட்டே தனிமனிதனை அழித்துவிடுகின்றனர்.


    தந்தை சொல்கிறார் ” நாள் சொல்கிற படிப்பே படி. நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கலாம். வாழ்க்கை என்றால் பணம் தான். மற்ற விஷயங்கள் பணம் வந்துவிட்டால் தாமாக வந்துவிடும். ” மகன் தனக்கு விருப்பமானதை படிக்க முடிவதில்லை. நாங்கள் சொல்கிற பெண்ணை கல்யாணம் கட்டிக்கொள். இல்லையேல் என்னை பிணமாகத்தான் பார்ப்பாய் . இது அன்னையின் வாக்கு.


    சொத்தில் சல்லிக் காசும் தரமாட்டோம். இது அப்பா. இது எனக்கு பிடிக்காத சங்கீதம். இதை நீ எப்போதும் கேட்கக் கூடாது – இது கணவன்.


    நீங்கள் பொதுச் சேவையில் இனி ஈடுபட்டால் நான் என் அம்மா வீட்டுக்கு போய்விடுவேன் – இது மனைவி


    நாம் முதலாளியாக இருந்து கொண்டு இன்று நறுக்கென்று நாலு வார்த்தை திட்டிப் பேசினால்தான் நாளை அவன் நம்மை மதிப்பான். பயம் வரும், – இது முதலாளியின் மனம்.


    குறைவான வருமானம் இருந்தும் கலர் டி.வி. வாங்க திட்டமிட்டு தவனை முறையில் வாங்கி சமுதாய அந்தஸ்து வேண்டுமாம்.


    கடன் வாங்கியாவது ஆடம்பர திருமணம் நம்மலையும் நாலு பேர் மதிக்க வேண்டுமாம்.


    நன்கு தெரிந்த பையனுக்கு தம் பெண்ணைத் தர விரும்பியும் முடியவில்லை. ஜாதகம் பொருந்தவில்லையாம்.


    ஆம் இன்றைய நிலையில் சமுதாயம் ( மற்றவர்கள் ) தனி மனிதனை நெருக்குகின்றன. உண்மையில் நாம் நாமாக வளரவில்லை. வாழவில்லை. பிறர் தீர்மானிப்பதை நாம் செய்து வருகிறோம். பெற்றோர் சொல்வதை குழந்தைகள் பின்பற்றுவது மாதிரியே வயது வந்த பின்னும் பிறருடைய விருப்பங்களுக்கே வாழ்கிறோம். எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு பகவான் ஓஷோ சொல்கிறார். உங்களுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க விட்டு விடாதிர்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே சொந்தம்.


    நான் லிங்கனைப் போன்றோ, நெப்போலியனைப் போன்றோ ஆவதல்ல என்னுடைய விருப்பம் என்னுடைய விருப்பம் என்னுடைய பலம் எவ்வளவு செயலாக்கப்படுகிறது பலவீனம் எப்படி சரிகட்டப்படுகிறது என்பதில்தான் என்னுடைய வாழ்க்கை உள்ளது.


    டாக்டர் மு. வரதராசனார் சொல்கிறார் ” இந்த சமுதாயத்துக்கு பயந்தவன் தனக்கும் சரி, தன்னைச் சுற்றி இருப்போர்க்கும் சரி ஒரு நாளும் நன்மையானதைச் செய்ய மாட்டான்”.


    செம்மறியாடுகள் போன பாதையிலேயே போய் மாயட்டும். சிந்தனை மிக்க இளஞ்சிங்கங்களாகிய நாம் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இருக்கும் சில மாணிக்கங்களை மட்டும் பொறுக்கிக் கொண்டு எஞ்சியவற்றை கரியாக்கி விடுவோம்.


    என்னுடைய சந்தோஷத்தில் அடுத்தவரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது மட்டும் சமுதாயம் பேசட்டும். அந்த மொழியை என் காதுகள் பணிவோடு கேட்கும். அன்போடு அதனை பரிசீலனை செய்வேன். சமுதாயத்தின் குரல் சரியென்றால் அந்த நிமிடமே நான் என்னை மாற்றிக் கொள்வேன். என்றெண்ணி எந்நாளும் இன்பமாய் வாழ்வோம்.

    0 comments:

    Post a Comment