Tuesday 10 December 2013

Tagged Under: , , , ,

இசை எனும் இன்பம் - கட்டுரை!

By: Unknown On: 22:24
  • Share The Gag
  •  "கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம், பழி பாவங்களும் நிறைந்த இந்த உலகை விட்டு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கவிஞர் தாகூர்.


    இசை மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசை முத்தமிழ்க்கு முன்னும், இயலுக்குப் பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டோடும் இணைந்து இயங்குவது. ஒசையும் நயமும் இசைந்து மனதுக்கு இன்பம் அளிப்பது இசை. இசை மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது - கோபதாபங்களைத் தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களைத் தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது.


    -என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.


    இசை வாழ்க்கையைத் தெய்வீகமாக்குகிறது. இசை மூலம் இறைவனை அடையலாம் என்று நிருபித்தவர்கள் நம் பெரியோர்கள். சங்க காலம், தொல்காப்பிய காலம் அதற்கு பின் வேத காலம்; இடைக்காலம் என்றெல்லாம் வரலாற்று காலங்களில் தோன்றிய நூல்கள் எல்லாம் இசையை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காட்டுகின்றன. இசை மக்களுக்குக் காலம் காலமாக பண்பாட்டுக் காவல் கருவியாக ஆன்மீக உணர்வு - சமய நெறி - கோவில் வழிபாடு, நாட்டியம், மொழி உணர்வு என்று இருந்து வருகிறது. தமிழ் இசை வளர்ச்சி அடைந்தால் தமிழ்ப் பண்பாடும் வளர்ச்சியும் அடையும்.


    தமிழ் மூன்று வகை -  இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

    இயற்றமிழ்- சத்து,  இசைத்தமிழ் - சித்து,  நாடகத்தமிழ்- ஆனந்தம் என்பார்கள்.

    இசைத் தமிழின் ஏற்றம்

    முத்தமிழ் வித்தகத்தில் இசை நடுநாயகமாகத் திகழ்கிறது.

    "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே "    - என்கிறார் அப்பர் பெருமான்.

    ஒசையிலிருந்து உலகம் உண்டாயிற்று என்று ஞானநூல் கூறுகிறது.

    ஆட வல்லானுடைய திருக்கரத்தில் விளங்கும் உடுக்கையின் ஓசையில் உலகம் தோன்றியது.



    "தோற்றந் துடியதனில்" - உண்மை விளக்கம்.
    எங்கும் நீர்மயமாகி எல்லாம் ஒடுங்கியபோது சிவபெருமான் வீணை வாசித்து மீளவும் உலகத்தை மலரச் செய்தார் என்று அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்:



    ''பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
    இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் களேபரமும்
    கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
    வருங்கடல் மீளன் றெம்மிறை நல்விணை வாசிக்குமே "



    நவக்கிரங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று திருஞான சம்பந்தனார் .


    " வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமே லந்தென்
    உளமே புகுந்தவதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
    சனி பாம்பிரண்டுமுடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே "



    இறைவனை வேண்டித் தவஞ் செய்து அசுவதரன், கம்பளதரன் என்ற இரு கந்தவர்கள் குண்டலமாகிச் சிவமூர்த்தியின் செவிகளில் அகலமாக இருந்து கொண்டு, இடையறாது இசைபாடி இறைவனை மகிழ்விக்கின்றார்கள்.


    யாழ் வாசித்து உதயணன் மதயானையை அடக்கினான் என்று உதயண காவியம் கூறுகின்றது.


    குழந்தையும், பாம்பும், பசுவும் இசை கேட்டுத் தம்மை மறந்து விடுகின்றன.


    உண்மையான இன்பம்



    இன்பத்தை விரும்பாத உயிர்களே இல்லை. எல்லா மதத்தவரும், எல்லாத் தேசத்தவரும் எல்லாக் காலத்தவரும், எல்லாக் கட்சியினரும் இன்பத்தை விரும்புகிறார்கள். எனக்குத் துன்பம் வேண்டும் என்று, எங்காவது, எவரேனும் கூறுகிறார்களா ? இன்பத்தை அடைந்தவர்கள் கோடிக்கொருவரும் இலர். ஏன்? இன்பத்தை விரும்புகிறார்களே அன்றி இன்பத்தைப் பெறும் வழியைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர் இல்லை.


    நம்மில் அநேகர் பொருளால் இன்பம் வரும் என்று பிழையாகக் கருதி வாழ்நாள் முழுவதும் பொருள் தேடி வாடி வருந்தி ஓடி அலைந்து உழன்று இன்பத்தைப் பெறாது துன்புற்று மாய்கிறார்கள். பெருந்தனம் படைத்தவர்கள் அல்லும் பகலும் துன்புற்று துடிப்பதைக் கண் கூடாகப் பார்க்கின்றோம். ஆதலால் பொன்னால் பொருளால் இன்பம் இல்லை. விளக்கைக் கனியெனக் கருதி அதில் வீழ்ந்து மாயும் மாந்தர் பலர் துன்புறுவதை எங்கும் காண்கிறோம்.


    "மதலையைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு நாளுந் துன்பம்
    விதலை நோயடையில் துன்பம் வியன் பருவத்துந் துன்பம்
    கதமுறு காவர் வந்து கைப்பற்றில் கணக்கில் துன்பம்
    இதமுறு பாலர் தம்மால் எந்நாளுந் துன்பமாகும்...     - குசேல உபாக்யானம் .



    "மனைமக்கள் சுற்றம் என்னும் மாயா
    வலையைக்க அறியாதே
    வினையிற் செருக்கியடி நாயேன்
    விழலுக்கிறைத்து விடலாமே'.."        - திருப்புகழ்



    "கற்பகமரத்தின் கீழ்வாழும் பெருஞ்சுகத்தை விரும்பி நான் பெருந்துன்பம் அடைந்தேன் " என்று இந்திரனுடைய புதல்வன் ஆன்றான்.


    "தண்டேன் துளிக்குந் தருழற்கீழ் வாழ்க்கை வெஃகிக்
    கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோது என்றே கண்டேன்"



    ஆதலால் பொன்னாலும், பொருளாலும், நிலபுலங்களாலும் சுகமில்லை என்பது உண்மை. எங்கே, எதனால் இன்பம் எய்தும்? எங்கே மனம் ஒடுங்குகின்றதோ, அங்கேதான் இன்பம் விளைகின்றது.


    மனம் அடங்க இசை


    மனம் அடங்கியிருக்கும் இடம் சுகம் ஆரம்பம். இந்தச் சுகத்தை மறைகள் எல்லாம் முழங்குகிறது.


    "சும்மா விருக்கச் சுகஞ்சுக மென்று கருதியெல்லாம்
    அம்மா நிரந்தரஞ் சொல்லவும் கேட்கும் அறிவின்றியே
    பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்
    வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
    சும்மா இருக்குள் சுகம்...."                     - வள்ளலார்.



    இனிச் சும்மா இருப்பதாகிய மனம் அடங்கும் நிலை எவ்வாறு உண்டாகும் என்று சிந்திப்போம்.



    பேய் மனம் எளிதில் அடங்காது, ஒடுங்காது. எண்ணில்லாத காலமாக அலைந்து அலைந்து, அதன் கொட்டத்தை அடக்குவது மிகவும் கடினம். வடநாட்டில் மனம் அடங்கக் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை சில துறவிகள் கையாளுகின்றார்கள். நமது தென்னாட்டில் மனம் அடங்கக் கண்டு பிடித்த வழி இசைப் பாடலேயாகும்.


    சங்கீதம் தெரிந்தவர் தம்பூராவை மீட்டிப் பாட்டினால் கேட்டவர்கள் மனம் அப்படியே ஒருமைப்பாட்டை அடைந்து விடுகின்றது. சங்கீதத்தின் மூலம், இசை மூலம் பக்தி என்பது இறைவனோடு நம்மை இணைப்பதுடன் மனிதர்க்கு ஏற்படும் நோய்களையும் குறைபாட்டையும் இறைவன் அருளால் அகற்றிடும் மாமருந்தாகவும் திகழ்கிறது. பிணி தீர்க்கும் இசை என்பது வழக்கமான சங்கீதமோ அல்லது பாடல்களோ அல்ல. அதற்கென்று தனிப்பட்ட சில சாஸ்திரங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. அந்த சாஸ்திர விதிகளின்படி ஒரு சித்த புருஷன், ஒரு யோகி முயற்சி செய்தால் இசையின் வாயிலாகப் பிணிகள் அகற்றும் சாத்தியமுண்டு.


    1 ) கல்யாணி, வாசந்தி, கோசலம், அனுமத்தோடி, சிவரஞ்சனி, புராகாகிய இராகங்கள் பிரகிருதி தத்துவத்தின் மாசுபடாத தொனியாகக் கொண்டவை.


    2 ) நீலாம்பரி ராகம் சுகமான நித்திரை தரும்.



    3 ) ஸ்ரீராகம் நல்ல ஜீரண சக்தியைத் தரும்.



    4 ) சாமா மன உளைச்சலை தடுக்கும்.



    சங்கீத சிகிச்சையும் ஒருவகை மருந்தாகப் பயன்படுகிறது. எனவே இனிய நாதம் மருந்தாக, ஓடி அலையும் மனத்தை ஒடுங்கச் செய்யும் பேராற்றலையுடையது. இசை உயிரையும் உய்விக்கும்; பயிரையும் வளர்க்கும். கயிலை மலையைப் பேர்த்த இராவணன் இசையால் பாடி உய்வு பெற்றான். நாயன்மார்கள், ஆழ்வார்கள் நாளும் இன்னிசையால் தமிழை வளர்த்தார்கள். தமிழ் வேதப் பாடல்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் இசைத்து வாசித்து உலகுக்கு இன்பத்தை வழங்கினார். [தமிழ் நாடு, ப.தண்டபாணியின் 'திராவிட இசை' என்ற குறிப்பிலிருந்து...]


    இன்று உலகெல்லாம் வழங்கி வரும் இசை முறைகள் எல்லாம் திராவிட இசையினின்று தோன்றியவையே. தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவிச் சென்றபோது தங்கள் இசையையும் உடன் கொண்டு சென்றனர். எனினும் அந்தந்தப்பகுதிகளின் தட்பவெப்ப நிலைகளுக்குக்கேற்ப அது சில மாற்றங்களுடன் வளர்ந்து வந்துள்ளது எனக் கூறவேண்டும்.


     ச ரி க ம ப த


    இப்புவியெங்கும் வழங்கிவரும் இசைமுறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் இசை விளங்குபவை ச, ரி, க, ம, ப, த என்னும் ஏழு சுரங்களே. இவற்றை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே. தமிழர்கள் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி.விளா தாரம் என்றழைத்த ஏழு இசை ஒலிகளுக்கும் முதலில் ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு நெடில் உயிரெழுத்துகளைக் குறிகளாக வைத்தனர். காலப்போக்கில் அந்த ஏழு இசை ஒலிகளுக்கும் பொருத்தமான தமிழ் எழுத்துகளாகிய ச, ரி, க, ம, ப, த என்பனவற்றைக் குறியீடுகளாகத் தமிழர்கள் மாற்றியமைத்தார்கள். வாய்ப்பாட்டுக்கு மட்டுமல்லாது இசைக்கருவிளை வாசிக்கக்கூடத் தமிழர்கள் பின்னர் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அப்போது ஏற்பட்டவையே ச, ரி, க, ம, ப, த, என்னும் ஏழு தமிழ் குறியீடுகள். இது குறித்து சிகண்டி என்னும் முனிவரால் பண்டை நாளில் இயற்றப் பட்டுள்ள தமிழ் வெண்பா பின் வருமாறு எடுத்தியம்புகிறது.


    முற்காலத்தில் இசை வழங்கிய எல்லாக் குழற் கருவிகளுக்கும் 'வங்கியம்' என்னும் பொதுப் பெயர் உண்டு. வங்கியத்தின் ஏழு துளைகளிலிருந்தும் இசை பிறக்கும் பொழுது அது எழுத்தால் பிறக்கும். ச, ரி, க, ம, ப, த என்பன அந்த எழுத்துகள். அந்த ஏழு எழுத்துகளையும் மாத்திரை குறையாது வாசித்தால் அவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும்


    குழலும் யாழும்.


    இன்று இசைக்குத் தாரச் சுருதியைக் கூட்டும் தம்புராவைப் பற்றி " கல்லாட்டம்" என்னும் பழைய பழந்தமிழ் இலக்கிய நூலில்தான் முதன் முதலில் தம்புராவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


    யாழ்களில் தும்புரு யாழ் என்று ஒரு வகை யாழ் முன்னால் தமிழகத்தில் இருந்தது. அதுவே பிற்காலச் சுருதிக் கருவிக்கு அடிப்படையாகும். அந்தத் "தும்புரு" என்னும் தமிழ்ப் பெயரே பின்னர் வடமொழியில் தம்புரா எனத் திரிந்து வழங்கப்பட்டது. குழலும் யாழும் இசைக் கருவிகளில் முதன்மையானவை. முதன்முதலாகக் குழல் வசித்தவர் குமாரக் கடவுள்.


    " குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன் "   - திருமுருகாற்றுப்படை.



    முதன்முதலாக யாழ் வாசித்தவர் சிவபெருமான். இதற்கு "வீணா தட்சிணாமூர்த்தியே" சான்று.



    "குழலினிது யாழ் இனிது என்ப" என்கிறார் திருவள்ளுவர்.



    இறைவனை நமது தாய்மொழியால் பாடித் துதிப்பது மிகவும் சிறந்தது. பொருள் தெரிந்து பாடுகின்ற போது மனம் ஒன்றுகின்றது.


    இனிமையும் நீர்மையும் தமிழாகும்.மொழிகளில் சிறந்த மொழி தமிழ், ஏனைய மொழிகள் கனமானவை. தமிழ் இலகுவான மொழி. கனமான உடம்புடையவனும் மென்மையான உடம்புடைவனும் நடக்கத் தொடங்கினால் பருத்த உடம்புடையவன் பிந்துவான்; மென்மையுள்ளவன் முந்துவான். வன்மையான பிற மொழிகள் பிந்தும், மென்மையான தமிழ் முந்தும். அதனாலே,


     " முந்து தமிழ்மாலை கோடிக்கோடி " -என்கிறார் அருணகிரி சுவாமிகள்


    இறைவனுடைய செவியில் முந்திச் சென்று சேரும் மொழி தமிழ். அது இனிய மொழி. என்றுமுள்ள இளந்தமிழ், சாவாதது; மூவாதது, தேவாமிர்தம் போன்ற தித்திக்கும் மொழி. சித்திக்கும் முத்திக்கும் உரியது தமிழ். தேவாரம் முதலிய திருமுறைகளும், திருப்புகழ் தமிழ்மறைகளும் இசைமயமானவை. அகத்திய முனிவருடைய சீடர் பன்னிருவர்களில் ஒருவரான சிகண்டி முனிவர் 'இசை நுணுக்கம்' என்ற நூலைத் தந்தவர்.

    மனம் அடங்க - மனம் நிலை பெற , இசை எனும் இன்பத்தில் நாமும் மயங்கி மகிழ்வோம்.

    0 comments:

    Post a Comment