Tagged Under: விழாக்களின் தொகுப்பு
ஆடிப்பெருக்கு என்பது....
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் அடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம. ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
0 comments:
Post a Comment