பருத்த இடை, பெருத்த வயிறு என அலுங்கிக் குலுங்கி நடந்துவரும் பெண்களின் எண்ணிக்கை, இப்போதெல்லாம் அதி கரித்துக் கொண்டே இருக் கிறது. இலக்கியங்களில் சொல்லப்படும் 'கொடி யிடை’ என்பது கனவாகிக் கொண்டே வருகிறது.
'கொடியிடை' என்பது... அழகின் அடையாளம் என்பதைவிட, ஆரோக் கியத்தின் அடையாளம் என்பதுதானேஉண்மை. எனவே, அத்தகைய இடையை நாமெல்லாம் பெற வேண்டாமா?!
''உணவுப் பழக்கங்களும் வாழ்வியல் முறைகளும்தான் கொடி இடை, தடி இடையாக மாறக் காரணம். உணவு மற்றும் உடற்பயிற்சிகளை சரிவர தொடர்ந்தால்... கொடி இடை நிச்சயமே!'' என்று நம்பிக்கையூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த ஃபிசியோதெரபிஸ்ட் ராதா பாலச்சந்தர்.
''இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் 'சப்ஜடேனியஸ்' எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது. இதைத்தவிர, மரபு ரீதியாக வும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் தடதடவென இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்... இந்தப் பிரச் னைக்கு முடிவு கட்டிவிடலாம்!'' என்று சொல்லும் ராதா பாலச்சந்தர், இடுப்புச் சதையைக் குறைப்பதற் கான உடற்பயிற்சி முறைகளை வரிசையாக அடுக்கினார்.
தரையில் வலது பக்கமாக சாய்ந்து படுத்துக்கொண்டு, இடது காலை மேலே தூக்கவும். சில விநாடிகள் கழித்து கீழே இறக்கிவிட்டு, இடது பக்கமாகப் படுத்து, வலது காலை மேலே தூக்கவும். இப்படி மாற்றி மாற்றி 10 தடவை செய்யவேண்டும். தினமும் இதைச் செய்து வந்தால் இடுப்பு சதைக்கான வேலை துரிதப்படும். தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படி ஐந்து தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இதையும் ஐந்து தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்.
இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள ராதா பாலச்சந்தர் சொல்லும் உணவு முறைகள்...
காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்... அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.
சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.
தினமும் உணவில் 2 டீஸ்பூன் 'கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.
டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.
தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.