Sunday, 22 September 2013

Tagged Under:

அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்!

By: Unknown On: 21:19
  • Share The Gag
  • செவ்வாய் கிரகம்


    செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.



    செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார்.
    வானிலை சீராக இருந்தால் அக்டோபர் 28 ஆம் தேதி இந்தக் கோள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 


    நீண்ட தூரம்

    செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி
    செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி



    இதற்கு முன்பு இந்தியா 2008 ஆம் ஆண்டு சந்திர மண்டலத்தை ஆராய சந்திரயானை வெற்றிகரமாக ஏவியது. பூமியில் இருந்து சந்திரன் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து இருக்கும் கோளான செவ்வாயோ இதை விட ஆயிரம் மடங்கு தூரத்தில் அதாவது 400 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. ஆனால் ஒவ்வொறு 26 மாத கால இடைவெளியிலும் செவ்வாய் பூமிக்கு சற்றே அருகில் அதாவது 56 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வருகிறது. அப்படி செவ்வாய் கிரகம் அடுத்து நெருங்கி வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டே இந்த கோளை இந்தியா ஏவுகிறது.


    விண்ணில் ஏவப்பட்ட பிறகு, 1350 கிலோ எடையுள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகதையடைய 10 மாதங்களை எடுத்துக் கொள்ளும். செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில் நுட்பத் திறன் உள்ளதாக என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீதேன் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள்.


    செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்த பல சோதனைகளைச் செய்ய 5 உபகரணங்களை மங்கள்யான் ஏந்திச் செல்கிறது. சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். 



    சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இப்போது எடுத்துச் செல்லப்படும் அனைத்து கருவிகளும் இந்தியாவுடையாதாகவே இருக்கும். அமெரிக்காவும், ரஷ்யாவும் 1960களிலேயே செவ்வாய் கிரகத்துக்கு கோளை அனுப்பியுள்ளன. சமீப ஆண்டுகளில் விண்வெளியில் வேகமாக முன்னேறிவரும சீனா 2011 இல் செவ்வாய் கிரகத்தை ஆராய கோள் அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

    0 comments:

    Post a Comment