Wednesday, 18 September 2013

Tagged Under:

ஜி.எஸ்.எல்.வி. டி- 5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் பேட்டி

By: Unknown On: 07:39
  • Share The Gag
  • ஜி.எஸ்.எல்.வி. டி- 5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் பேட்டி

     

    திரவ எரிபொருள் கசிவால் விண்ணில் செலுத்துவது ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் தெரிவித்தார். 



    முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜனிக் என்ஜின் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த மாதம் 19-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுவதாக இருந்தது. 



    இந்த ராக்கெட் மூலம் ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளும் இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படஇருந்தன. 



    விண்ணில் செலுத்தும் கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2-வது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று திரவ எரிபொருள் கசிந்தது. அதனால் ராக்கெட் செலுத்துவது ரத்து செய்யப்பட்டது.



    இந்த கசிவு சரிசெய்யப்பட்டு பின்னர் ஒரு நாளில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.



    இந்த நிலையில் நேற்று சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வருடாந்திர தொழில்நுட்ப விழா நடைபெற்றது. அந்த விழாவை இஸ்ரோ விஞ்ஞானி எம்.ஒய்.எஸ்.பிரசாத் தொடங்கி வைத்தார். 



    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    கடந்த மாதம் 19-ந்தேதி நிறுத்தி ராக்கெட் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டபிறகு அதில் உள்ள ஜிசாட்-14 என்ற செயற்கை கோள், ராக்கெட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கசிந்த 2-வது நிலை எரிபொருள் பகுதி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



    முதல் நிலை எரிபொருள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கு உரிய அனைத்து பணிகள் முடிவடைந்து, நிறுத்தி வைக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு விஞ்ஞானி பிரசாத் தெரிவித்தார்.

    0 comments:

    Post a Comment