Tuesday, 24 September 2013

Tagged Under: ,

சர்க்கரை நோய் – கொஞ்சம் கசப்பான உண்மைகள்!

By: Unknown On: 18:13
  • Share The Gag

  • மனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். 


    இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.


    ஒருவர் உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, அவருடைய ரத்தத்தில் நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை காணப்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக கருதப்படும்.

    sep 24 Symptomsof diabetes

     



    இந்தியர்களை பெருமளவு தாக்கத் துவங்கியிருக்கும் நீரிழிவு நோயை சர்க்கரை நோய் என்று பொதுப் பெயரிட்டு அழைத்தாலும், சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய், கர்ப்ப கால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் ஏற்படும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான சர்க்கரை நோய்கள் தான் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



    முதல் ரக சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் சர்க்கரை நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது. இந்த முதல் பிரிவு சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இடிந்து விடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி செல்கள், இன்னொரு பகுதி செல்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை.



    ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் இந்த முதல் ரக சர்க்கரை நோயைப் பொறுத்ததவரை, இது ஒருவருக்கு வந்ததால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி. அதேசமயம் உலக அளவிலும், இந்தியாவிலும், எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது ரக நீரிழிவுநோய். இந்த இரண்டாவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.



    பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80%. அது தவிர கூடுதல் உடல் பருமன் மூலமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணங்கள் ஒருவருக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது வகையான கர்ப்பகால சர்க்கரை நோய் சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகமாக இருப்பதாலும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும் பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் மறைந்துவிடும்.



    நான்காவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை கணையத்தில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இது உருவாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.



    இதற்கிடையில் ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு, உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார். அதே சமயம் அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுக் காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் பதில் கிடைத்துள்ளது.



    அடுத்ததாக சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு பொதுவான அறிகுறிகள் சில இருக்கின்றன. அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த்துவதாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் அவசியம் நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இத்தகைய அறிகுறிகள் தெரிவதில்லை. சில சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம். இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்களில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதைப் போக்க வேண்டுமானால் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.




    இதன் ஒரு பகுதியாக பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது கண்டிப்பாக நீரிழிவு நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது என்கிறார் நீரிழிவுநோய் நிபுணர் மருத்துவர் மோகன். அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு மற்றும் அவரது பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மோகன். இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப் படுத்துவதும் எளிது. நீரிழிவு நோய் உண்டாக்கக் கூடிய இதர உடல் நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



    நீரிழிவு என்பது நோயா அல்லது ஒருவித உடல் குறைபாடா என்பது தொடர்பில் மருத்துவ உலகில் இன்றளவும் சர்ச்சை தொடர்கிறது. உடலின் சகல பாகங்களையும் பாதிக்கும் பல்வேறு நோய்களை இது தோற்றுவிக்கும் என்பதால் இதை மதர் ஆப் ஆல் டிசீசஸ், அதாவது மற்ற பல நோய்களின் தாய் என்றும் இவர்கள் அழைக்கிறார்கள். அதேசமயம் இது ஒரு வித உடற்குறைபாடு என்றும் இதை சரியான முறையில் கையாண்டால் இதைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும் கூறுகிறார்கள்.




    முதலாவதாக நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவில் இனிப்பை முற்றாக தவிர்க்க வேண்டும். தினந்தோறும் மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடும் பழக்கத்திற்கு பதிலாக, சராசரியாக மூன்று மணிநேர இடைவெளியில், சிறுகச் சிறுக சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கு நல்லது. மேலும் விரதம் என்கிற பெயரில் நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது கூடவே கூடாது. இந்த உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் ஒருவர் என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் அவரது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று எச்சரிக்கிறார் உணவியல் நிபுணர் இந்திரா பத்மாலயம். உணவுக்கு அடுத்தபடியாக அன்றாய உடற்பயிற்சி அவசியம். இதில் எல்லோராலும் செய்யக்கூடிய அன்றாட உடற்பயிற்சி என்பது நடைப்பயிற்சி ஆகும்.



    உடற்பயிற்சிக்கு அடுத்ததாக நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் பரிந்துரைக்கப்படும். உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் என்று நீரிழிவுக்கான சிகிச்சை முறைகள் மூன்று வழிகளில் மேற் கொள்ளப்பட்டாலும் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது நீரிழிவு நோய் தாக்குதலுக்குள்ளானவரின் ஒத்துழைப்பு என்பதை மருத்துவர்கள் பலரும் வலியுறுத்து கிறார்கள். மேலும் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு என்பது நீரிழிவு நோயாளி மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். முறையான சிகிச்சை, இதற்கு தேவையான மனக் கட்டுப்பாடும் உறுதிப்பாடும் நீரிழிவு நோயாளர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பதோடு, நீரிழிவு நோயின் மிகத்தீவிரமான பாதிப்புகள் உடனடியாக வெளியில் தெரிவதில்லை என்பதாலும் பலர் இதற்கான சிகிச்சைகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வதில்லை என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.



    மேலும் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அதை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும் என் பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு, உண்மை நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விட்டால் அதன் மோசமான பக்க விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது. ஆனால் இது தொடர்பில் நீரிழிவு நோயாளிகள் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை என்ரம் சொல்கிறார்ர்கள் இதேநீரிழிவு நோய் நிபுணர்கள்.

    0 comments:

    Post a Comment