Friday, 20 September 2013

Tagged Under: ,

உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...

By: Unknown On: 17:04
  • Share The Gag


  • அக்டோபர் மாதத்திலிருந்து  உங்கள் சிலிண்டருக்கான  மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே...



    ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது.  ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.


    அதைப் பெற இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவை. 1. ஆதார் எண். 2. வங்கிக் கணக்கு.


    இந்தத் திட்டம் முதற்கட்டமாக அக்டோபர் 1 முதல் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பின் படிப்படியாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் நான்கு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.


    எந்தெந்த மாவட்டங்களில் எப்போது?
    அக்டோபர் 2013      -     அரியலூர்


    நவம்பர் 2013   -    திருச்சி, மதுரை, புதுகோட்டை, நாகப்பட்டினம்.


    டிசம்பர் 2013  -    கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு.


    ஜனவரி 2014 -  தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், இராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.



    தேதி அறிவிக்கப்படாத மாவட்டங்கள்
    சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை , திருப்பூர், நீலகிரி, விருதுநகர், சிவகங்கை.


    இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?


    1.மானியத்தைப் பெற முதலில் உங்களுக்கு ஆதார் எண் இருக்க வேண்டும். இதுவரை ஆதார் எண்ணிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ,அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களையோ தொடர்புகொள்ளுங்கள்.


    ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இன்னும் எண் கிடைக்கப்பெறாதவர்கள், https://eaadhaar.uidai.gov.in/eDetails.aspx  இத்தளத்திற்குச் சென்று பின்கோடு, தேதி, என்ரோல்மெண்ட் நம்பர் ஆகிய விவரங்களைப் பதிவிட்டால் உங்களுக்கான ஆதார் எண் வந்துவிடும் அல்லது விண்ணப்பத்தின் நிலை என்னவென்று அறிந்துகொள்ளலாம் அல்லது 1800 300 1947 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.


    2.வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். யார் பெயரில் எரிவாயு இணைப்பு உள்ளதோ அவர்கள் பெயரில் அந்த  வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.


    3.ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும் இருப்பவர்கள் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். ஒன்று வங்கிக்கு (படிவம் எண் 1) மற்றொன்று சிலிண்டர் விநியோகஸ்தருக்கு (படிவம் 2.)


    வங்கிக்கான படிவங்களை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது . http://www.petroleum.nic.in/dbtl/bankacc.pdf என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


    படிவம் 2ல் உங்கள் ஆதார் அட்டையை குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வைத்து போட்டோ காப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டோ காப்பி எடுத்த படிவத்தில் மற்ற விவரங்களை நிரப்பி, கடைசியாக காஸ் சிலிண்டர் வாங்கிய பில்லை இணைத்து விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும்.


    விநியோகஸ்தருக்கான படிவத்தை அவர்களிடமே பெற்றுக்கொள்ளலாம் அல்லது http://www.petroleum.nic.in/dbtl/leaflet.pdf என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏஜென்சியில் கொடுக்கலாம்.

    கால அவகாசம்

    ஆதார் எண் இல்லாதவர்கள் நேரடி மானியம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை மானிய விலையில் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். இம்மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடனும், எரிவாயு இணைப்புடனும் இணைத்துவிட வேண்டும். கால அவகாசம் முடிந்த பிறகும் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் சந்தை விலையிலேயே சிலிண்டர் விநியோகிக்கப்படும். எப்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுகிறார்களோ அப்போதிலிருந்து மானியத் தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.


    மானியம் எவ்வளவு?


    இத்திட்டத்தின்படி அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்ட பின் முதல் தவணையாக 435 ரூபாய் நமது வங்கிக் கணக்கில் வரவாகும். பின்னர் முதல் சிலிண்டர் பெறும்போது சந்தை நிலவரத்திற்கேற்ப மீதித் தொகையைக் கொடுத்து சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த சிலிண்டர் புக் செய்து வினியோகிக்கப்பட்டு 6 நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கிற்கு அப்போதைய சந்தை நிலவரத்தின்படி 420 ரூபாயைக் கழித்துவிட்டு மீதித் தொகையை நமது கணக்கில் அரசு செலுத்திவிடும். ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியத்தில் பெறலாம்.


    மேலதிக விரங்களை  http://www.petroleum.nic.in/dbtl என்ற இணையத்திலோ 1800 2333 555 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்திலோ பெறலாம்.
     
     

    0 comments:

    Post a Comment