Wednesday, 4 September 2013

Tagged Under:

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

By: Unknown On: 18:37
  • Share The Gag

  •  
     
                 
    இங்கிலாந்தின் ’சில்பரி’ என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், ‘இது இயற்கையாய் அமைந்தது இல்லை’ என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். 
     
     
    எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த ’சில்பரி பிரமிட்’ கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை.
     

           முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். 

    ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் திகதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. 

    அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் எவை? அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.


     
     
    இங்கிலாந்தில் இருக்கும் வட்ட வடிவ அமைப்புகளின் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்து போகவில்லை. இந்தப் பிரமிட்டிலிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில், இன்னுமொரு ஆச்சரியமும் நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 தொன்களுக்கும் அதிக எடையுள்ள, நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 500 மீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையும் யார் அமைத்தார்கள்? ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
     
     
     
     
    “தற்செயலாக எகிப்தில் இருக்கும் பிரமிட்டைப் போல, சில்பரியிலும் ஒரு பிரமிட் இருந்திருக்கிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மர்மங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவது?” என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் சந்தேகம் கொள்ளும் மனசுதானே நமக்கு உள்ளது. ஒரு வகையில் இந்தச் சந்தேகங்களும் சரியான பாதைக்கே நம்மை இட்டுச் செல்லும். 
     
     
    சந்தேகங்கள் அடிக்கடி தோன்றினால்தான், விளக்கங்களும், விடைகளும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதற்காக கணவன், மனைவி அடிக்கடி சந்தேகப்பட்டு,விளக்கங்களும் விடைகளும் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல அதன் அர்த்தம். வாழ்க்கை என்பது மிஸ்டரிகளாலான பிரமிடுகள் அல்ல. ஆனால், அறிவியல் நமக்குச் சொல்லும் முக்கிய பாடமே சந்தேகப்படு என்பதுதான். மேலே உங்களது கேள்விக்குப் பதிலாக, நான் இன்னுமொரு அதிசயம் பற்றியும் சொல்கிறேன்………..
     
     


    இங்கிலாந்தில் ’யோர்க் ஷையர்’ (Yorkshire) என்னுமிடத்தில் உள்ள கிராமமான தோர்ன்ப்ரோவில் (Thornbrough) 5500 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மிக நீண்ட வட்ட வடிவ அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது.அதைப் பார்த்தீர்களானால் இப்போது வரையப்படும் பயிர் வட்டங்களைப் போலவே இருக்கும். இதைக் கூட மேலே இருந்துதான் முழுமையாகப் பார்க்க முடியும். அவ்வளவு பெரியது அது. மொத்தமாக மூன்று வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டுள்ளது. 


    இதுவரை சொன்னது போல பயிர்களாலோ, கற்களாலோ அமைந்த வட்டங்கள் அல்ல இவை. வட்டவடிவமாக திட்டுகளால் உருவாக்கப்பட்டிக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட இந்த மூன்று வட்டங்களையும் இணைக்கும் அமைப்பு, நேர்கோடான அகலமான பாதை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 5500 ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தனையோ காலநிலை மாற்றங்களினாலும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான். வழமை போல ஏன், எதற்கு இவை அமைக்கப்பட்டன என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் நமக்கு இவை பற்றி வேறு ஒரு வித்தியாசமானதும், ஆச்சரியமானதுமான  தகவல் கிடைக்கிறது. அந்தத் தகவல் எகிப்தின் பிரமிட்டுகளையும், தோர்ன்ப்ரோ வட்டங்களையும், வேறொன்றுடன் இணைக்கும் அதிசயம்.



     
     
    எகிப்தில் மொத்தமாக 138 பிரமிட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புராதனமான கீஸா பிரமிட்டுகளான மூன்று பிரமிட்டுகளும் மிக முக்கியமானவை. கூஃபு பிரமிட், காஃப்ரே பிரமிட், மென்கௌரே பிரமிட் (Khufu, Khafre, Menkaure) என்பனதான் அந்த மூன்று பிரமிட்டுகளும். இந்த மூன்றையும் கவனித்தால் மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பவை போலத் தோன்றும். ஆனால் உண்மையாக அதில் ஒன்று மட்டும் சற்றே விலகியிருக்கும். 
     
     
    ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைப் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் ஓரியன் (Orion) நட்சத்திரங்களும் ஒன்று. ஓரியன் நட்சத்திரங்களில் முக்கிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல இருக்கும். ஆனால் அதிலும் ஒரு நட்சத்திரம் மட்டும் சற்றே விலகியிருக்கும். அந்த ஓரியன் நட்சத்திரங்கள் மூன்றும் எப்படி அமைந்திருக்கின்றனவோ அதே போல, மிகச் சரியாக கீஸா பிரமிட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து தோர்ன்ப்ரோவில் அமைந்த மூன்று வட்டங்களின் அமைப்பும் எந்த மாற்றமுமில்லாமல் அதே வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே திசை. அதே வரிசை.
     
     


    எகிப்தில் பிரமிட்டுகள், இங்கிலாந்தில் வட்ட அமைப்புகள், வானத்தில் நட்சத்திரங்கள் என மூன்றுமே ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பாகின? தொலைத் தொடர்பு என்னும் பேச்சுக்கே இடமில்லாத, 4500ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தில், இவை எப்படிச் சாத்தியமாகின? மனிதர்களால் இவை நிச்சயம் சாத்தியமாகி இருக்க முடியாது என்றே பலர் சந்தேகப்படுகிறார்கள். அப்படிச் சாத்தியமாகி இருக்கும் பட்சத்தில், மனிதர்களுக்கு அதிபுத்திசாலிகளான அயல் கிரகவாசிகள் யாராவது உதவியிருக்கலாம். அப்படி உதவி செய்த அந்த அயல் கிரகவாசிகளுக்கும் ஓரியன் நட்சத்திரங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர்.


     இவை எல்லாமே வெறும் ஊகங்கள்தான். ஆனால் அர்த்தங்கள் இல்லாதவை என ஒதுக்கித் தள்ளக் கூடிய ஊகங்கள் அல்ல. இவை ஊகங்களாக இருந்தாலும், அவை சுட்டிக் காட்டும் திசை, நாம் நம்பியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துபவை.    ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்ல யாருமே இல்லை. 


    ஒரு வேளை ஊகங்களே உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த உண்மைகள் ஏன் நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றன? இல்லாவிட்டால் நாம் நினைப்பது போல எதுவுமே இல்லையா? இவையெல்லாமே மனிதனால் தற்செயலாகவும், திட்டமிட்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தானா? இவையெல்லாவற்றையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் இதுவரை விட்டு விலகியிருந்த பயிர் வட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டும். எங்கு நாம் ஆரம்பித்தோமோ அங்கேயே நமது விடையையும் தேடிக் கொள்ள வேண்டும். எனவே க்ராப் சர்க்கிள் என்று சொல்லப்படும் பயிர் வட்டங்களை நோக்கி நாம் நகரலாம்.
    அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்களா?

    0 comments:

    Post a Comment