Monday, 25 August 2014

Tagged Under:

ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்! யாருக்கு சர்ஜரி அவசியம்?

By: Unknown On: 00:54
  • Share The Gag


  • உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.


    என்ன காரணங்கள்

    ஒரு நாளைக்கு சராசரியாக 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது உடலுக்குள் செல்லும் போது சக்தியாக மாற்றப்படுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு மிஞ்சி சக்தி உள்ளே சென்றால், அதாவது அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டால் அது உடலிலேயே கொழுப்பாக படிந்து விடுகிறது. அவை செலவழிக்கப்படாமல் சேர்ந்து உடல் பெருக்க தொடங்கி விடுகிறது. நார்மல் எடைக்கும் அதிகமாக கூடும்போது உடல்பருமன் பிரச்னையாகி பல வியாதிகளுக்கு வாசலாகி விடுகிறது.

    பொதுவாக மாறிவரும் நமது சாப்பாட்டு முறைகளும், உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாததும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்கு மரபியலும் காரணமாக அமைந்து விடுகிறதாம். சில ஜீன்கள் ஒபிசிட்டி பிரச்னைக்கு காரணமாகி விடுகின்றன என்கிறார்கள் டாக்டர்கள்.


    உயரத்திற்கேற்ற எடையை கண்டுபிடிப்பது எப்படி?


    பொதுவாக உடல் எடையை, உடல் திண்ம குறியீடு (பிஎம்ஐ) மூலம் அளவிடுகிறார்கள். இது உடலின் எடை, உயரத்தை ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. இந்த பிஎம்ஐ 25 முதல் 30 வரை இருப்பவர்கள் (அதாவது ஒரு சதுர மீட்டருக்கு 25 முதல் 30 கிலோ) அதிக பருமன் கொண்டவர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இந்த பிஎம்ஐ 30 கிலோவுக்கு அதிகமாக செல்லும் போது அது சிவியர் ஒபிசிட்டி எனும் நிலையாகி விடுகிறது. பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருக்கும் நபர்கள் தான் நார்மலான உடல் எடைக்காரர்கள். 40ஐ தாண்டும் போது நோயாளி ஆகிறார்கள்.


    ஒருவரின் உயரத்திற்கேற்ற எடையை கணித்து கொள்ள சிம்பிளான வழி இருக்கிறது. ஒருவர் 150 செமீ உயரம் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். 150 என்பதில் 100ஐ கழித்து விட்டால் வரும் எண் 50. இதுதான் அவரது உயரத்திற்கேற்ற நார்மல் எடை. அந்த நபர் 50 கிலோ எடை இருக்கலாம். இது போல 160 செமீ உயரம் உள்ள ஒருவர், நார்மலாக 60 கிலோ வரை இருக்கலாம். இதற்கு அதிகப்படியாக எடை இருப்பவர்கள் உஷாராகி கொள்வது நல்லது.


    நோய்களின் ‘அம்மா’ பல நோய்களுக்கு ஒபிசிட்டி தான் அம்மா. உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம்.. என நோய்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.


     ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேன்சர் பாதிப்பு 30 சதவீதம் அதிகம். வயதுக்கு மீறிய எடையுடன் குண்டாக இருக்கும் குழந்தைகள் சீக்கிரமே நோயாளி ஆகி விடுகிறார்கள். இன்னும் விறுவிறுவென நடக்க முடியாது, அவசரத்துக்கு ஓட முடியாது, தொப்பைகாரர்களுக்கு குனிந்து எந்த வேலையும் செய்ய முடியாது என வேறு டைப்பான பிரச்னைகளும் இருக்கின்றன.

    சாப்பிடாதீங்க..

    உடல் பருமன் பிரச்னையிலிருந்து தப்பிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
    எண்ணெயில் வறுத்த கறி, உணவுகள், ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ், யோகர்ட், முட்டை, பீட்ஸா, பர்கர், சமோசா, பிரைடு ரைஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகள். அரிசியில், கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும். எனவே அரிசி, அரிசியால் செய்யப்படும் பதார்த்தங்களை குறைப்பது நல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

    சாப்பிடுங்க..

    நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    யாருக்கு சர்ஜரி அவசியம்?

    உடல்பருமன் பிரச்னைக்கு இரைப்பையின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சையும் ஒரு வழியாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான உடல் எடையால் வரும் பிரச்னைகளான நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு, மூட்டு வலி போன்ற பல நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது ஒரு எபெக்டிவ்வான வழி.

    இந்த அறுவை சிகிச்சை இரு பிரிவாக உள்ளது. ஒன்று ஊட்டச் சத்துக்கள் உடல் எடுத்து கொள்வதை குறைப்பது, மற்றொன்று உணவை எடுத்து கொள்வதை குறைப்பது. சில நேரங்களில் இரண்டும் முறைகளும் பயன்படுத்தப்படும். லேப்ராஸ்கோப்பிக் முறையில் செய்யப்படுவதால் வலியோ, தழும்புகளோ இருக்காது. அதோடு அறுவை சிகிச்சைக்கு பிறகு நீரிழிவு நோயும் கட்டுக்குள் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரைப்பையின்அளவை குறைப்பதால் உணவு எடுக்கப்படும் அளவு இயற்கையாகவே குறைகிறது. உடல் பருமனும் வெகுவாக குறைந்து விடுகிறது. ஆபரேஷனுக்கு பிறகு ரெகுலர் செக்அப் அவசியமானதாக இருக்கிறது. உடல் பருமன் பிரச்னையில் வருமுன் காப்பதே சிறந்தது.

    கலோரி

    நாம் எடுத்து கொள்ளும் கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயது, எடை, பாலினம், வேலை போன்றவற்றை பொறுத்து ஒருவருக்கு தேவையான கலோரிகள் அமைகிறது. சிறுவர்கள்: சராசரியாக 1500-1800 கலோரிகள்

    பெண்கள்: மிதமான வேலை பார்ப்பவர்களுக்கு 1100-1300, ஆக்டிவான வேலை பார்க்கும் பெண்களுக்கு 1400 -1600 கலோரிகள்.

    ஆண்கள்: மிதமான வேலை பார்க்கும் ஆண்களுக்கு 1600-1800, கடின வேலை பார்ப்பவர்களுக்கு 1800-2000.

    ஒவ்வொருவரும் கலோரி அட்டையை வைத்துக் கொண்டு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட முடியாது. ஆனால் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

    கலோரி அட்டவணை

    உணவு கலோரி
    சப்பாத்தி(30 கிராம்) 100
    மசாலாதோசை 200
    சமோசா 150
    பூரி(1) 350
    உப்புமா(சின்ன கிண்ணம்) 100
    சாதம் (ஒரு கப்) 280
    சிக்கன்(70 கிராம்) 100
    முட்டை(1) 80
    குலோப் ஜாமூன்(2) 250
    ரசகுல்லா(2) 150
    டீ, காபி (1 கப்) 70-80

    டாக்டர். ரவீந்திரன் குமரன், அறுவை சிகிச்சை நிபுணர் சென்னை.

    0 comments:

    Post a Comment