Monday, 7 October 2013

Tagged Under: , ,

களஞ்சியம் இலவச அகராதி!

By: Unknown On: 08:31
  • Share The Gag

  • இணைய இணைப்பு இல்லாமல், சிறிய பைல் ஒன்றினை இயக்குவதன் மூலம், ஆங்கிலம்- தமிழ், ஆங்கிலம்- ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் எனப் பல்முனை அகராதி ஒன்றை நம் டெஸ்க் டாப்பில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் ""களஞ்சியம் அகரமுதலி''. இதற்கான மூல கோப்பு கிடைக்கும் தள முகவரி 


    www.ekalai.com/kalanjiyam/dowload/.
     


    இந்த தளத்திற்குச் சென்றவுடன் அகராதிக்கான கோப்பாக KalanjiamDictionarySetup என்ற கோப்பு கிடைக்கிறது. இதன் அளவு ஏறத்தாழ 189 எம்.பி. ஆகும். இதனை டவுண்லோட் செய்து, பின்னர் அதன் மீது டபுள் கிளிக் செய்திட, அகராதி நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறது. அகராதியைப் பயன்படுத்த, கண்ட்ரோல் + டில்டே(கீ போர்டில் எண் 1 கீக்கு முந்தைய கீ) (Ctrl+~) கீகளை அழுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், அகராதிக் கட்டம் தாண்டி, திரையில் கிளிக் செய்தால், டாஸ்க்பாரில் அகராதி சென்று அமர்ந்துவிடும். மீண்டும் தேவை எனில், டாஸ்க் பாரில் கிளிக் செய்து பெறலாம். அல்லது மீண்டும் மேலே குறிப்பிட்ட இரு கீகளை அழுத்த வேண்டும்.


    இதனைக் கணிப்பொறியில் இயக்கி வைத்துள்ள நிலையில், எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் உள்ள சொல்லையும் தேர்ந்தெடுத்து, உடன் கண்ட்ரோல் + டில்டே கீகளை அழுத்தினால், அகராதி திரையில் தரப்பட்டு அதற்கான பொருள் தரப்படுகிறது. எந்த நேரத்திலும், இதே கீகளை அழுத்தினாலும், அகராதியில் பொருள் தேடும் கட்டம் விரிகிறது. 



    வழக்கமான இரு மொழிகளுக்கிடையேயான அகராதியாக இல்லாமல், மேலே குறிப்பிட்டபடி, பலமுனை அகராதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 2 லட்சம் தனிச் சொற்கள் இருப்பதாக, இதனைத் தரும் இணைய தளம் அறிவித்துள்ளது. அத்துடன், இணைப்பு சொற்களாக, 40 லட்சம் சொற்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 



    இந்த அகராதியை இயக்கியவுடன், இதனைப் பயன்படுத்தக் கிடைக்கும் இடைமுகம் மிகவும் எளிதாகச் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் எந்த அகராதியைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். முன்பே குறிப்பிட்டபடி, ஆங்கிலம்-தமிழ், தமிழ்-தமிழ் மற்றும் ஆங்கிலம்- ஆங்கிலம் என மூன்று வகையான அகராதிகள் கிடைக்கின்றன.



    இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர், சொல் அமைக்கும் கட்டத்தில், சொல்லை அமைக்க வேண்டும். தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் தேவை எனில், Type in Tamil என்பதில் டிக் கிளிக் செய்து, Look up என்பதற்கு அருகே உள்ள கட்டத்தில் சொல்லை அமைக்கலாம்.



     தமிழ்ச் சொற்களை உள்ளீடு செய்திட அஞ்சல்/போனடிக் எனப்படும் ஒலி சார்ந்த கீபோர்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தேடு (Search) என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், கீழே உள்ள கட்டத்தில் சொல்லுக்கான அனைத்து நிலை பொருளும் தரப்படுகிறது. சொல் இலக்கணப்படி எந்த வகையைச் சேர்ந்தது (Verb/ Noun/Adjective.) எனக் காட்டப்பட்டு பொருள் தரப்படுகிறது. வலது பக்கம் உள்ள கட்டத்தில், அந்த சொல் சார்ந்த சொற்களும் தரப்படுகின்றன. 


    எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல்லைத் தந்த போது Compute, Key, laptop, monitor, mouse, processor, type, usb ஆகிய சொற்கள் அக்கட்டத்தில் காட்டப்பட்டன.இந்த சொற்களில் ஏதேனும் ஒன்றுக்குப் பொருள் பெற விரும்பினால், இந்தக் கட்டத்தில் அதன் மீது கிளிக் செய்தால் போதும். பொருளைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறலாம். இரண்டும் வெவ்வேறு வண்ணத்தில் தரப்படுவது, முதல் முறையாகப் பொருளைப் படிப்பவருக்கு கூடுதல் வசதியைத் தருகிறது. 


    பொருள் தரும் கட்டத்தின் கீழாக, Image, Nearest, Synonyms, Antonyms என்று நான்கு டேப்கள் அமைக்கப்பட்டு ஒரு கட்டம் கிடைக்கிறது. இதில் Image என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், சொல்லுக்கான படம் காட்டப்படுகிறது. 3,000க்கும் அதிகமான படங்கள் இந்த அகராதியில் தரப்பட்டுள்ளன. மேலும், ஒரு நாட்டின் பெயரை, சொல் தேடும் கட்டத்தில் அமைத்துத் தேடினால், கீழாக, அந்த நாட்டுடன் உலக வரைபடம், நாட்டின் வரைபடம், அதன் தேசிய கொடி ஆகியவை காட்டப்படுகின்றன. இது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும்.


    இதே போல, தொழில் நுட்ப சொற்களைத் தந்தால், அது வழக்கமான அகராதியிலிருந்து தரப்படாமல், Glossary என்ற பகுதியிலிருந்து அதற்கான பொருள் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக, கணிப்பொறி இயல் துறையில் வழங்கப்படும் WYSIWIG என்ற சொல்லைக் கொடுத்துப் பாருங்கள். தனியே அதற்கான விளக்கமும், தமிழில் பொருளும் கிடைக்கும்.



    Nearest என்ற கட்டத்தின் கீழாக, பொருளை ஒட்டிய மற்ற சொற்களும், Synonyms என்பதன் கீழ் அதே பொருள் தரும் சொற்களும் மற்றும் Antonyms என்ற பிரிவில், எதிர்ப்பதங்களும் தரப்படுகின்றன. 



    இதே போல, வினைச்சொல் ஒன்றைத் தந்தால், வலதுபுறம் கீழாகத் தரப்பட்டுள்ள கட்டத்தில், அந்த வினைச்சொல்லுக்கான இறந்த, நிகழ், எதிர்கால வினை குறிக்கும் சொற்கள் தரப்படுகின்றன. 



    தமிழ்ச் சொல்லை உள்ளிட, ஒலி அடிப்படையிலான அஞ்சல் கீ போர்ட் செயல்முறை தரப்பட்டுள்ளதால் எளிதாகவும், விரைவாகவும் அனைவரும் சொல்லை இட முடிகிறது. தமிழ்ச் சொல்லைத் தந்துவிட்டு, ஆங்கிலம்- தமிழ் அகராதிப் பிரிவைத் தேர்ந்தெடுத்தால், அதற்கான ஆங்கிலச் சொற்களுடன் விளக்கம் தரப்படுகிறது. தமிழ்-தமிழ் என்ற அகராதிப் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால், பொருளும், சார்ந்த தமிழ்ச் சொற்களும் தரப்படுகின்றன. 



    எடுத்துக் காட்டாக, கிணறு என்ற சொல்லைத் தந்த போது, தமிழ்-தமிழ் அகராதியில், அசும்பு, உறவி, குழி, கூபம், கூவல், பூவல் மற்றும் கேணி என்ற வகையில் பொருட் சொற்கள் தரப்படுகின்றன. அதே நேரத்தில், சார்ந்த ஆங்கிலச் சொற்களும் தனிக் கட்டத்தில் கிடைக்கின்றன.


    ஆங்கிலம்- ஆங்கிலம் அகராதியைத் தேர்ந்தெடுத்து சொல் ஒன்றுக்குப் பொருள் பார்க்கையில், பொருளுடன், அந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என எடுத்துக் காட்டு வாக்கியங்கள் தரப்படுகின்றன.



    எந்த சொல்லைக் கொடுத்தாலும், தேடல் கட்டத்தின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்தால், சார்ந்த சொல் பட்டியல் கிடைக்கிறது. பட்டியலில் உள்ள சொல்லையும் கிளிக் செய்து பொருள் பெறலாம்.




    இந்த அகராதியின் இன்னொரு தனிச் சிறப்பு என்னவெனில், நாம் உள்ளிடும் சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வசதியினைக் கூறலாம். சொல்லை அமைத்துவிட்டு, அருகே உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்தால், சொல் உச்சரிக்கப்படுகிறது. தமிழ்ச் சொற்களும் சற்று வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன. 



    புதியதாக ஓர் சொல்லை இந்த அகராதியில் தேடுகையில் கிடைக்கவில்லை எனில், அதன் பொருளைத் தேடி அறிந்து, இந்த அகராதியில் உள்ளீடு செய்திடும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு. மிகச் சிரமப்பட்டு உருவாக்கி, இலவசமாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு, இந்த அகராதியினைத் தந்திருக்கும் கம்ப்யூட்டர் வல்லுநர் சேகர் பாராட்டுக்குரியவர். 



    இவர் தன் முறையான கல்வியை 10ஆம் வகுப்போடு முடித்துக் கொண்டவர். கணிப்பொறி இயலில் ஆர்வம் இருந்ததன் காரணமாக, தானே கணிப்பொறி மொழிகளைக் கற்று, இப்படி ஒரு படைப்பினைத் தந்துள்ளார். ஆர்வம் இருந்தால், யாரும் எதனையும், கல்வி நிலையங்கள் செல்லாமலேயே படிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. நன்றியும் வாழ்த்துக்களும் சேகர்.

    0 comments:

    Post a Comment