Monday, 25 November 2013

Tagged Under: , , ,

கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! மாணவர் சாதனை!

By: Unknown On: 22:23
  • Share The Gag

  • நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர்.

    இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார். மனதின் எண்ணங்களை கண்ணாடியாய் காட்டுவது திருக்குறள் என்றால், இவர் எழுதிய திருக்குறள்களோ, கண்ணாடி இருந்தால் மட்டுமே படிக்க முடியும்.

    இதென்ன புது முயற்சி என்று கேட்டால், 1330 குறள்களையும் தலைகீழாய், அதாவது கண்ணாடியின் பிம்பங்களாக வடித்துள்ளார் இந்த இளைஞர். இது சாதாரணமாகச் செய்துவிட முடியாத காரியம். ஒரு சிறிய உதாரணம், நமது பெயரை அல்லது ஒரு எழுத்தைத் தலைகீழாய் எழுத முடியுமா என்ற சோதனை செய்தால், பல காகிதங்கள் கிழிக்க வேண்டியிருக்கும்.

    ஒரு எழுத்து தலைகீழாய் அதாவது பிம்பமாக எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தாலே குழப்பம் வந்துவிடும். தட்டுத்தடுமாறி ஒரு எழுத்தை எழுதி முடித்தாலும் அது அலங்கோலமாக, குறிப்பிட்ட அளவில் அமைந்துவிடாது. ஆனால் இவரது இன்னொரு முயற்சி என்னவென்றால் ஒரு திருக்குறளுக்கான இடத்தை 5 சென்டிமீட்டர் (நீளம்) X அரை சென்டிமீட்டருக்குள் (அகலம்) அடக்கி விட்டார். ஒரு முழு சார்ட் காகிதத்தில் கால்பாகம் மீதமிருக்கையிலேயே, அத்தனை திருக்குறளையும் எழுதி முடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 1330 குறள்களுக்கும் இவர் எடுத்துக்கொண்டது 10 மணி நேரம் மட்டுமே. இளமைத் திருக்குறளுக்கு தலைகீழாய் புது வடிவம் கொடுத்துள்ள மணியிடம் இதுகுறித்து பேசினோம்.

    ‘எனது சொந்த ஊர் சேலம் அடுத்த ஆத்தூர். தந்தை முத்துச்சாமி, தாயார் மலர்க்கொடி, கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுவயது முதலே வித்தியாசன முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ளும் பழக்கம் வந்தது. திருக்குறள் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் 10-ம் வகுப்பு படிக்கும்போது, அத்தனை குறள்களையும் நேராக எழுதினேன். பின்பு, தலைகீழாய் எழுத பயிற்சி எடுத்தேன். இப்போது, இப்படியும் வேகமாக எழுதக் கற்றுக்கொண்டேன்’ என்கிறார்.

    தனது தமிழ் ஆர்வத்தால் ஏற்பட்ட முயற்சி, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, இன்று இவருக்குக் கைகூடியிருக்கிறது. இதை சாதனைக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.

    தற்போது ஆத்திச்சூடியை இந்த முறையில் எழுதி வருகிறார். கிரிக்கெட் நாயகன் சச்சினின் வரலாறும், இவரது கையால் தலைகீழாக்கப்பட இருக்கிறதாம்.

    இவரது முயற்சியை ஊக்குவித்துவரும் துறை இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது: சமீபத்தில் தேசிய கீதத்தை ஒருவர் தலைகீழாய் எழுதியது குறித்து நாளிதழில் செய்தி வந்தபோதுதான், மணியின் திறமை குறித்து நாங்கள் அறிந்தோம். கல்லூரி சார்பில், மேலும் ஊக்குவித்து, அடுத்த கட்டத்துக்கும் இதனைக் கொண்டு செல்வோம் என்றார்.

    தமிழ் எழுத்தை நேராக எழுதவே பலரும் படாதபாடுபடும் இந்தக் காலத்தில், தமிழை நேசித்து, அதனைப் புதுவிதமாய் சுவாசிக்கும் இவரது முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.

    0 comments:

    Post a Comment