Sunday, 5 January 2014

Tagged Under: , , , ,

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..!

By: Unknown On: 12:32
  • Share The Gag


  • தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.

    சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.

    தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

    இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.

    மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.

    மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

    எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ ரூ.70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

    மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம்.  மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது  உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.

    சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார்.

    மாவு விற்பனை மூலம் அதிக லாபம்

    வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.7.50. இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கும்‘ என்றார்.

    புகார் வந்தால் நடவடிக்கை உறுதி

    மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

    3 வருடம் சிறை தண்டனை உண்டு

    நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    0 comments:

    Post a Comment