Tuesday, 28 May 2013

Tagged Under:

சீனா நமக்கு "எதிரி'யல்ல.....

By: Unknown On: 12:03
  • Share The Gag








  •                             இந்தியாவின் “எதிரி’ நாடுகள் என்று கூறப்படுபவற்றில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எல்லையில் தொடர்ந்து சீனா தொல்லை தருகிறது என்பது மட்டுமல்லாது, 1962-இல் நிகழ்ந்த போரில் சீனாவிடம் இந்தியா தனது நிலப்பகுதிகளை பெருமளவு இழந்ததால் ஏற்பட்ட கசப்புணர்வு இப்போதுவரை தொடர்வதாலேயே சீனா “எதிரி’யாக வர்ணிக்கப்படுகிறது.




                             21-ஆம் நூற்றாண்டில் நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவின் முதன்மையான வர்த்தகக் கூட்டாளி சீனா. ஆசிய பிராந்தியத்தில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சீனாவும், இந்தியாவும் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகள். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரச் சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், சீனா, இந்தியாவின் வளர்ச்சி பல நாடுகளுக்குப் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.




                         பொருளாதார வளர்ச்சி, ராணுவ பலம் என பல்வேறு நிலைகளில் இந்தியாவைவிட சீனா ஒருசில படிகள் முன்னேதான் நிற்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனா இருந்த நிலையில் இப்போது இந்தியா உள்ளது என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.



              28 m -Dragon vs Tiger




                             அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்னைகளை எதிர்கொள்ளாத அல்லது ஏற்படுத்திக் கொள்ளாத நாடுகள் உலகில் மிகவும் குறைவு. நமது நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடுகளில் பெரும்பாலானவற்றுடன் நமக்கு எல்லை தொடர்பான பிரச்னை உள்ளது. ஆனால் சீனாவுடனான பிரச்னை மட்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்நாடு நம்மை விட வலுவானது என்பதே இதற்கு முக்கிய காரணம். சீனாவுடனான எல்லைப் பிரச்னை பல காலமாகத் தொடர்கிறது.




                          சமீபத்தில் “லடாக்’ பகுதியில் ஊடுருவி பதற்றத்தை ஏற்படுத்தியது சீனா. எல்லை தொடர்பாக தெளிவான வரையறைகள் இல்லாமல், ஆளுக்கு ஒரு அளவுகோல் வைத்துக் கொண்டு வாதாடுவதும் இதுபோன்ற எல்லைப் பிரச்னைக்கு முக்கியக் காரணம்.



                            சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் இந்தியப் பயணம், எல்லைப் பிரச்னை தீர நம்பிக்கை அளிக்கும் முயற்சியாகவே அமைந்தது. எல்லைப் பிரச்னை தவிர சீனாவை, இந்தியாவின் எதிரி என்று சுட்டிக்காட்ட இந்தியாவுக்கு இப்போதைக்கு வேறு வலுவான காரணம் ஏதுமில்லை.பிற அண்டை நாடுகளைப்போல பயங்கரவாதிகளை வளர்த்தெடுத்து இந்தியாவுக்குள் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கவும் இல்லை.



                         இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும் இல்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கும் பாகிஸ்தானுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது சீனா. அதற்கு ராணுவரீதியான உதவிகளையும் தொடர்ந்து செய்கிறது. தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதைச் சீனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சீனாவின் ஒரு பகுதிதான் திபெத் என்று சர்வதேச அமைப்புகளும், நாடுகளும் ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் நாட்டில் பிரச்னையைத் தூண்டும் தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது என்பது சீனாவின் குற்றச்சாட்டு.



                       இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, லடாக் பகுதியில் தாங்கள் ஆக்கிரமித்த இடத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேற மற்றொரு முக்கியக் காரணம் உண்டு. அது இந்தியாவுடனான வர்த்தக உறவு. இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையைப் பெரிதாக்கினால் அது வர்த்தக உறவை பாதிக்கும். அதனால் தங்கள் நாட்டுப் பொருளாதார வளர்ச்சி முடங்கும் என்பதை சீனா உணர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது 210 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 62 சதவீதம்தான் உயர்ந்துள்ளது.



                         உலகப் பொருளாதாரத் தலைமையை எட்டிப் பிடிக்க வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது, தங்கள் நாட்டின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடும் அளவுக்கு யோசனையற்ற நாடு அல்ல சீனா. இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டால், அது தங்கள் நாட்டு ஏற்றுமதியையும் பாதிக்கும் என்பது சீனாவுக்குத் தெரிந்ததுதான்.



                          பாகிஸ்தானுக்கு சீனா கை கொடுப்பதும், இலங்கையில் கால் பதிப்பதும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக நம் நாட்டில் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதனைத் தங்கள் வர்த்தக, பொருளாதார நலன் சார்ந்த நடவடிக்கையாகவே சீனா சுட்டிக்காட்டுகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளில் ராணுவ நோக்கம் இல்லையென்று சொல்லிவிடவே முடியாது.



                           எல்லையில் பதற்றம் நீடித்தாலோ, மோதல்கள் ஏற்பட்டாலோ இரு நாடுகளுக்குமே பிரச்னைதான். இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் உறவைக் கெடுத்துக் கொள்ளும் எந்த நடவடிக்கையையும் சீனா எடுக்காது. எனவே சீனாவை நிரந்தர எதிரியாகக் கருதாமல் வர்த்தகக் கூட்டாளியாகவே பார்க்க வேண்டும். எல்லைப் பிரச்னைகள் தீரும்போது சிறந்த நட்பு நாடுகளில் ஒன்றாக சீனாவும் மாறும்.



                          ஐரோப்பியப் பொருளாதாரத்தில் காணப்படும் இப்போதைய ஸ்திரமற்ற நிலை, அமெரிக்காவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை ஆகிய சூழலில், புதிய சந்தை வாய்ப்புகளை இந்தியா தேடிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டுள்ளது.



                           சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாகத் திகழும் சீனாவுடன் சுமூகமான உறவைப் பேணுவதே இப்போதைய சூழலில் நாம் எடுக்கும் ராஜ தந்திர நடவடிக்கையாக இருக்கும்.



                                                                                     நன்றி!!! தினமணி

    0 comments:

    Post a Comment