Friday, 27 September 2013

Tagged Under:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - பக்கா திரை விமர்சனம்!

By: Unknown On: 17:43
  • Share The Gag



  • ‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால்



    தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை ‘சுட்டக்கதை’யாக இல்லாத பட்சத்தில் அரசு தயவில்லாமல் அவரவர் செலவில் நேரு ஸ்டேடியத்தில் கூடி மிஷ்கினுக்கு தங்க ஜரிகையிட்ட பரிவட்டமே கட்டலாம். (உலகப்படங்களை மேய்பவர்களே… அலசி ஆராய்ஞ்சு அஞ்சு நாளுக்குள்ளே உத்தரவாதம் கொடுங்க)
    மருத்துவக் கல்லுரி மாணவரான ஸ்ரீ நள்ளிரவில் வீடு திரும்பும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க முயல்கிறார். 


    ஆனால் அனைவரும் அந்த உயிர் மீது அலட்சியம் காட்ட, தன் வீட்டிலேயே கொண்டு போய் ஆபரேஷன் செய்கிறார். அடுத்தடுத்த நாட்களுக்குள் அங்கிருந்து தப்பிக்கும் மிஷ்கின் ஒரு பயங்கர கிரிமினல் என்பது அதற்கப்புறம்தான் தெரிகிறது ஸ்ரீக்கு. இவரது குடும்பமே போலீஸ் கையில் சிக்க, ‘நீயே அவனை சுட்டுடு’ என்கிற அசைன்ட்மென்ட் தரப்படுகிறது மாணவருக்கு. தன்னை தேடி வரும் மிஷ்கினை ஸ்ரீ சுட்டாரா? போலீஸ் கையில் மிஷ்கின் சிக்கினாரா? இவ்வளவு பரபரப்பையும் ஆறே காகிதத்தில் வசனங்களாகவும், மிச்ச நுறு காகிதத்தில் சொல்ல வேண்டியதை இசைஞானி இளையராஜாவின் ‘முன்னணி’ இசையாலும், ரத்தமும் ஜீவனும் ஆக்கியிருக்கிறார் மிஷ்கின்.


    இந்த படத்தில் காதல் இல்லை, குத்தாட்டம் இல்லை, காமெடிக்கென தனியாக சந்தான சூரி போன்ற தர்ம பாலகர்கள் இல்லை. இத்தனைக்கும் மேல் மிஷ்கின் படங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட மஞ்சப்புடவை ஆட்டமும் இல்லை. கம்பிமேல் நடக்கிற வித்தை மிஷ்கினுக்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த கம்பிமேல் அவரும் ஓடி, நம்மையும் பரபரவென இழுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார் என்பதுதான்.




    தன்னை போலீஸ் சூழ்ந்துவிட்டதை அறிந்ததும் ஸ்ரீயையும் இழுத்துக் கொண்டு எலக்ட்ரிக் ட்ரெய்னில் தப்பிக்கிற அந்த காட்சியில் கொஞ்சம் கூட பூச்சுற்றல் இல்லை. அதற்கப்புறம் ஒரு புறம் கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் டீம் துரத்திக் கொண்டேயிருக்க, மற்றொரு புறம் இவ்விருவரும் ஓடிக் கொண்டேயிருப்பது கொஞ்சமாவது சலிக்க வேண்டுமே? ஒவ்வொரு முறையும் இவர்கள் செக்போஸ்டில் தப்பிப்பது ‘பலே’ சீன்கள் என்றால், அவ்வளவு நெருக்கடியிலும் நகைச்சுவையை இழையோட விட்டிருக்கும் மிஷ்கினின் ஆளுமையை என்னவென்று பாராட்ட? அந்த போலீஸ்காரர் விதவிதமான டெஸிபலில் உச்சரிக்கும் அந்த ‘ஐயா…’ காட்சியில் இறுக்கம் மறந்து ரிலாக்ஸ் ஆகிறது மொத்த தியேட்டரும். வில்லனின் கையாளாக வரும் அந்த கருப்பு போலீஸ் அதிகாரியை எங்கு பிடித்தாரோ, மனுஷன் செம லைவ்…


    ஒரு மருத்துவக் கல்லுரி பேராசிரியர் தனது தாய் இறந்து போன அவ்வளவு துக்கத்திலும், படித்த படிப்புக்கு தரும் மரியாதை மெய்சிலிர்க்க வைக்கிறது. (நடித்திருப்பவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவராம். ‘ஆக்ட் ஃபார் ஈச் அதர்…!’)


    தன்னிடம் கதை கேட்கும் பார்வையில்லாத குழந்தைக்கு கதை சொல்வது போல நமக்கும் பிளாஷ்பேக் சொல்கிறார் மிஷ்கின். டைட்டாக வைக்கப்பட்ட பிரேமில் மிக நீண்ட நிமிடங்களை விழுங்கிக் கொள்ளும் அந்த காட்சியில் மிஷ்கினின் நடிப்பு கலங்க வைக்கிறது. ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள் என்பதை அந்த எரியும் மெழுகுவர்த்தியின் நீளம் சொல்கிறது. அதே போல ஆக்ஷன் காட்சிகளிலும் மின்னலென சுழன்று பரம்பரை ஆக்ஷன் ஹீரோக்களுக்கே கூட எனிமா கொடுக்கிறார் மிஷ்கின். டொப்பு டொப்பென போலீஸ் அதிகாரிகளை அவர் சுட்டுக்கொல்லும் காட்சிகள் நகைப்பையும், நடுக்கத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.


    வழக்கு எண் 18/9 பட ஹீரோ ஸ்ரீதான் இப்படத்தின் இன்னொரு ஹீரோ. அவ்வளவு பெரிய மிஷ்கினை முதுகில் சுமந்து கொண்டு அவர் பரிதவிக்கும் அந்த ஆரம்ப காட்சிகளில், நிஜமாகவே பொதிமூட்டை கனத்தை பொறுத்திருக்கிறார். அப்படியே இந்த படத்தின் விறுவிறுப்பையும் சுமக்கிற பொறுப்பும் அவருக்கு. சிறப்பாகவே இருக்கிறது எல்லாமும்.


    படத்தில் வரும் வில்லன்தான் ‘எனக்கு அவன் உயிரோட வேணும்’ என்று அலறி, எதார்த்தத்தை கெடுத்து வைக்கிறார். அவரது அல்லக்கைகளும் அப்படியே ‘மைம் ஷோ’ நடிகர்கள் மாதிரி எரிச்சலுட்டுகிறார்கள். ஹ்ம்ம்ம், வில்லன்னா இப்படிதான் இருக்கணும் என்பதை நீங்களாவது மாற்றியிருக்கலாமே மிஷ்கின்.


    குடிசை ஜன்னலில் இருந்து கொண்டு கோட்டையை பார்ப்பது போல, வியப்பை மட்டுமே வாரி வழங்குகிறது ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு. எதிலும் அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாக உள்வாங்குகிற அந்த கேமிரா, மிக நுணுக்கமான உணர்ச்சிகளை கூட விட்டு வைக்கவில்லை.


    கண்ணுக்கு தெரியாத காற்று மாதிரி, மனம் தடவுகிறது இசைஞானியின் பின்னணி இசை. டைட்டிலில் முன்னணி இசை என்று கவுரவம் சேர்க்கிறார் மிஷ்கின். இது எவ்வளவு பெரிய சத்தியம் என்பதை இப்படத்தை ‘மியூட்’ செய்துவிட்டு பார்த்தால்தான் புரியும்.


    யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும்… நான் இப்படிதான். என் படம் இப்படிதான் என்கிற மிஷ்கினின் திமிருக்கு தலைவணங்கியே ஆக வேண்டும் ரசிகர்கள்.

    0 comments:

    Post a Comment