காதல் சின்னம் தாஜ்மஹால் |
உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ,அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் 27 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23 இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த வாரம்... காதல் சின்னம் தாஜ்மஹால் உலக அதிசயம், காதல் சின்னம், பரவசப்படுத்தும் பளிங்கு மாளிகை என தாஜ்மஹாலின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அழகுப் பெட்டகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று. மொகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டி முடித்தார். ஷாஜஹானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். இவர் மீது ஷாஜஹானுக்கு தனிக்காதல் உண்டு. தனது பதினான்காவது பிள்ளைப்பேற்றின் போது மும்தாஜ் இறந்து விட்டார். மும்தாஜின் பிரிவைத் தாங்க முடியாத ஷாஜஹான் அவரது நினைவாக எழுப்பியதே தாஜ்மஹால். இங்கு மும்தாஜின் சமாதி உள்ளது. பின்னாளில் ஷாஜகான் இறந்த பிறகு அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. வரலாற்றுச் சிறப்புக்குரிய தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் கி.பி. 1631-1654ம் ஆண்டு. சுமார் 22ஆயிரம் பேர் கட்டடப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுவதும் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி பாரசீக பாணி மற்றும் மொகலாயருக்கே உரித்தான ஸ்டைலும் கலந்து உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை. தாஜ்மஹால்- மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது. சதுரவடிவ நிலப்பரப்பில் சமச்சீராக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூலைக்கு ஒன்றாக நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம் மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும் ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது அமைக்கப்பட்டுள்ளது. எப்படிப் போகலாம்? ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன ஆக்ராவும் ரயில் நிலையமும் உள்ளது. டெல்லியில் இருந்து சுமார் 3மணி நேர ரயில் பயணத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம். நல்ல சாலை வசதிகளும் உள்ளன. "கலையும், காதல் வரலாறும் கலந்த ஒரு அழகு ஓவியம்தான் தாஜ்மஹால். நேரில் பார்க்கும்போதே இதை உணர முடியும்'' |
Friday, 27 September 2013
Tagged Under: சுற்றுலாத்தலங்கள்
காதல் சின்னம் தாஜ்மஹால் - சுற்றுலாத்தலங்கள்!
By:
Unknown
On: 07:58
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment