Monday, 1 September 2014

Tagged Under:

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

By: Unknown On: 01:32
  • Share The Gag
  • ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

    ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

    "பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

    வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால் நிரப்பப்பட்டவை. 

    அவர்களது வாழ்க்கைக்கும், அப்போது நடந்த பல ஆச்சரியங்களுக்கும் சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. யமுனை ஆற்றின் கரையோரத்தில் தாஜ்மகாலில் இருந்து சுமார் இரண்டரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள இது, ஆக்ராவின் செங்கோட்டை, லால் கிலா, போர்ட் ரூய்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போது நாட்டின் மிகப்-பெரிய கஜானா, நாணயசாலையை இந்தக் கோட்டை கொண்டிருந்தது. பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் ஆகியோர் இங்குதான் வசித்துள்ளனர்.

    முதலில் ராஜபுதனத்து சௌகான்கள் வசம் கோட்டை இருந்துள்ளது.  அப்போது இந்த இடம் பஸல்கார், படல்கார் (badalgarh) என்றழைக்-கப்பட்டுள்ளது.  டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு தலைநகரை மாற்றி இங்கு வாழ்ந்த முதல் டெல்லிசுல்தான் சிக்கந்தர் லோடி (1487-1517). இதனால் இது நாட்டின் இரண்டாவது தலைநகராகக் கருதப்பட்டுள்ளது.

    சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் இப்ராகிம் லோடி சுமார் 9ஆண்டுகள், அதாவது 1526ல் பானிபட் போரில் கொல்லப்படும் வரை இங்குதான் வாழ்ந்துள்ளார். இவரது காலத்தில்தான் இங்கு புதிய அரண்மனைகளும், மசூதிகளும், கிணறுகளும் வெட்டப்பட்டுள்ளன.

     இந்தநிலையில், பானிபட் போரில் வெற்றிபெற்ற மொகலாயர்கள் இந்த கோட்டையையும் கைப்பற்றினர். இங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பெரும் செல்வங்கள் அவர்கள் வசமானது. இதில் பிரபலமான கோஹினூர் வைரமும் அடங்கும்.

    மொகலாயர் வசம் வந்த பிறகு கோட்டை சீரமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவரை பாபர் எழுப்பினார். பாபரின் மகன் ஹுமாயூன் 1530ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். பிள்ளைப்பருவத்தில் தண்ணீரில் விழுந்த ஹுமாயூனை, நீர்சுமக்கும் தொழிலாளியான நஜாம் என்பவர் காப்பாற்றியுள்ளார். இளவரசரின் உயிரைக் காப்பாற்றிய நஜாம், அரைநாள் மன்னராக ஆக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நடந்ததும் இங்குதான்.

    1558க்கு பிறகு ஆக்ராவுக்கு வந்த அக்பர் இந்தக் கோட்டையை புனரமைக்க உத்தரவிட்டுள்ளார். தினமும் சுமார் 4ஆயிரம் கட்டிடக்கலைஞர்கள் பணியாற்றி 8ஆண்டுகளில் (1565-1573) புதிய கோட்டையை கட்டி முடித்துள்ளனர். மண்டபங்கள், மசூதிகள், மாடமாளிகைகள் என அட்டகாசப்படுத்தப்பட்டது அக்பர் காலத்தில்தான். அக்பரின் முக்கிய அமைச்சரும், அக்பர்நாமாவை எழுதியவருமான அபுல்பஸல் இந்தக்கோட்டைக்குள் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டதாக குறிப்பெழுதியிருக்கிறார்.

    அன்றைய கட்டடங்கள் இப்போது இல்லை. அக்பர் கட்டியவற்றில் பல கட்டிடங்களை பளிங்கு மாளிகைகள் அமைப்பதற்காக ஷாஜகான் அகற்றியுள்ளார். ஆங்கிலேயர் வசம் கோட்டை வந்த பிறகும் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

    ரசனைமிக்க ஷாஜகான் காலத்தில்தான் இங்கு பளபள பளிங்கு கட்டிடங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் மோத்தி மஸ்ஜித், நஜினா மஸ்ஜித், மினா மஸ்ஜித் போன்ற மசூதிகள் குறிப்பிடத்தக்கவை. அதே நேரத்தில் ஷாஜகானை அவரது மகன் அவுரங்கசீப் சிறைவைத்த இடமும் இந்த கோட்டைதான். எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஷாஜகான் மரணமடைந்த பிறகு அவரது உடல் அருகில் உள்ள தாஜ்மகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ஷாஜகானுக்குப் பிறகு கோட்டை களையிழந்தது. இப்படியாக பல வரலாறுகளில் வலம் வந்து கொண்டிருந்த கோட்டை, 1803ம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் வந்தது.
     
    ஆக்ரா கோட்டைக்குள் திராட்சைத் தோட்டம் என்றழைக்கப்படும் ஆங்குரி பாக், பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் திவான்-இ-ஆம் மண்டபம், பிறநாட்டு மன்னர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்கும் திவான்-இ-காஸ் மண்டபம், மாட மாளிகையான கோல்டன் பெவிலியன்ஸ், பளபள பளிங்கு மாளிகைகளான ஜஹாங்கிர் மஹால், காஸ் மஹால், மச்சி பவன், முஸம்மான் பர்ஜ், மினா மஸ்ஜித், பியர்ல் மசூதி, நஜினா மஸ்ஜித், பெண்கள் மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக கட்டப்பட்ட செனானா மினா பஜார், அரசவைக் கலைஞர்கள் இசைநிகழ்ச்சி நடத்தும் நவ்பத் கானா, மன்னரின் அந்தப்புரமான ரங்மஹால், ஷாஜகானி மஹால், காலத்தால் அழிக்க முடியாத கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அரச ஒப்பனைக்கூடமான ஸீஸ் மகால் போன்றவை இன்றளவும் கலைப்பொக்கிஷங்களாக காட்சி-யளித்துக் கொண்டிருக்கின்றன.

    கோட்டைக்குள் செல்ல கட்டணம் உண்டு. இந்திய குடிமக்களுக்கும் SAARC, BIMSTEC அமைப்பின் உறுப்புநாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் நுழைவுக்கட்டணம் நபருக்கு 10ரூபாய்தான். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து அமெரிக்க டாலர் அல்லது ரூபாய் 250 கட்டணமாகும்.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா கோட்டை, டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது. ஆக்ராவில் விமான நிலையமும்,  ரயில்நிலையமும் அமைந்துள்ளன. யுனெஸ்கோவின் பாராம்பரியச் சின்னங்கள் பட்டியலில் ஆக்ரா கோட்டை 1983ல் இடம் பெற்றது.

    0 comments:

    Post a Comment