Friday, 22 November 2013

Tagged Under: ,

இரண்டாம் உலகம் - காதல் உலகம் விமர்சனம்..!

By: Unknown On: 23:53
  • Share The Gag


  • நடிகர் : ஆர்யா

    நடிகை : அனுஷ்கா

    இயக்குனர் : செல்வராகவன்

    இசை : ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்

    ஓளிப்பதிவு : ராம்ஜி


    காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அதில் காதலை தழைக்க வைப்பதுதான் இரண்டாம் உலகம்.

    தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஆர்யா. தாய் இல்லாத அவர் உடல் நிலை சரியில்லாத தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத தந்தையை மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுடன் ஆறுதலாக பழகிவருகிறார். இதே மருத்துவமனையில் டாக்டராக பணி புரியும் அனுஷ்கா இவரின் நல்ல செயல்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். தன் காதலை ஆர்யாவிடம் சொல்ல முடிவெடுக்கிறார். அதன்படி நண்பர்கள் துணையோடு ஆர்யாவிடம் காதலை சொல்கிறார்.

    இந்த காதலை ஏற்க ஆர்யா மறுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த அனுஷ்கா, தன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். முதலில் அனுஷ்காவின் காதலை ஏற்க மறுத்த ஆர்யா, பின்னர் அடிக்கடி அவரை பார்த்தபோது, அவர் மீது காதல் வயப்படுகிறார். தன் காதலை அனுஷ்காவிடம் சொல்ல அவரையே சுற்றி வருகிறார்.

    ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் திருமணம் நடைபெறாமல் நின்றுவிடுகிறது. இதனால் ஆர்யாவின் காதலை ஏற்றுக்கொள்கிறார் அவர். இருவரும் சந்தோஷமாக காதல் வாழ்க்கையை தொடங்கும் போது, அனுஷ்கா இறந்து விடுகிறார். இவை அனைத்தும் இயல்பாக நம் வாழும் உலகத்தில் நடக்கிறது.

    இதேபோன்று இரண்டாம் உலகம் என்று ஒரு கிராபிக்ஸ் உலகத்தை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று கிடையாது. அதில் வாழும் மக்கள் அனைவரும் பெண்களை மதிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்றும் அவர்களுக்கு எந்தவித மரியாதை தராமலும் வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நவீன உலகத்தில் ஒரு பெண்ணை தெய்வமாக வழிப்படுகிறார்கள். அவருக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரியாதை. இங்கு அரசர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆணுக்கு பெண் அடிமை இல்லை என்று சுய கவுரவத்தோடு வாழும் பெண்ணாக அனுஷ்கா. துடிப்பான இளைஞரான ஆர்யா அங்கு அனுஷ்கா மீது காதல் கொள்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் அனுஷ்கா. இவர்களுக்குள் காதல் புரிய வைக்க, காதல் மலர, இயல்பான உலகத்தில் இருந்து அனுஷ்காவை பிரிந்து வாழும் ஆர்யாவை இரண்டாம் உலகத்திற்கு கொண்டு வருகிறார் பெண் கடவுள்.

    நிஜ உலகத்தில் இருந்து இங்கு வரும் ஆர்யா, இரண்டாம் உலகத்தில் காதலே என்ன என்று அறியாத அனுஷ்காவிற்கு காதலை உணரவைத்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இரண்டாம் உலகத்தில் முதல் காதல் மலர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

    இரண்டு கதாபாத்திமாக நடித்திருக்கும் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் வந்திருந்தாலும் ரசிக்கும் படியாக செய்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் இருவரும் மிரள வைக்கிறார்கள். ஆர்யாவின் உடல் அமைப்பு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

    இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு இல்லை.

    காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அந்த உலகம் காதல் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லி, பின்பு அதில் காதலை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். எங்கெல்லாம் காதல் இல்லாமல் இருக்கிறதோ அந்த உலகத்திற்கு எல்லாம் ஆர்யாவை அனுப்பி காதலை மலர வைப்பது என்று முடிவெடுத்திருப்பதுடன் படம் முடிகிறது.

    மொத்தத்தில் இரண்டாம் உலகம் காதல் உலகம்.

    0 comments:

    Post a Comment