Sunday, 24 November 2013

Tagged Under: ,

சீன பொம்மைகள், தயாராவதோ இந்தியாவில்…

By: Unknown On: 08:21
  • Share The Gag
  •  

    விலை குறைந்த பொம்மைகள் என்றாலே அது சீன தயாரிப்புகள் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அடுத்த முறை நீங்கள் சீன தயாரிப்பில் உருவான பொம்மையை வாங்கினாலும் அது நிச்சயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நம்புங்கள்.

    சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பொம்மைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்றால் நம்புவது சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை.

    பால்ஸ் பிளஷ் இந்தியா எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம் சீனாவின் துணை நிறுவனமாகும்.

    இந்நிறுவனம் குழந்தைகள் பெரிதும் விரும்பும் கரடி பொம்மை (டெடி பேர்), புலி மற்றும் டிஸ்னி கதாபாத்திரங்களான மிக்கி மௌஸ் மற்றும் டொனால்டு டக் உள்ளிட்ட பொம்மைகளைத் தயாரிக்கிறது.

    இங்குள்ள சிறிய உற்பத்தி மையத்தில் இந்த பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் இப்பகுதிவாழ் கிராமத்து பெண்கள். இந்த தொழிற்சாலைக்கு வந்து பார்த்தால் தெரியும், குழந்தைகளைப் பெரிதும் கவரும் பொம்மைகள் உருவாகும் விதத்தை.

    ஆயிரக்கணக்கில் தயாராகும் பொம்மைகள் இங்கிருந்து மெட்டல் டிடெக்டரால் சோதிக்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படுகிறது. பிறகு அங்கிருந்து சீன தயாரிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    உள்ளூர் மக்களை வைத்து சர்வதேச பொம்மை தயாரிப்பு நிறுவனத்துக்கு பொம்மைகள் தயாரித்துத் தருவது புதிய அனுபவமாக உள்ளது என்று பால்ஸ் பிளஷ் நிறுவனத்தின் இயக்குநர் சீமா நெஹ்ரா கூறினார். இந்த பொம்மைகள் சர்வதேச சங்கிலித் தொடர் நிறுவனங்களான டெஸ்கோ மூலம் பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

    இந்தியாவில் பொம்மை வணிகம் இன்னமும் பெரிய நிறுவனங்களால் ஒருங்கிணைந்து நடத்தப்படுவதில்லை. அதற்கான காலம் இன்னமும் கணியவில்லை. இருப்பினும் மதர்கேர், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களாக உள்ளதாக நெஹ்ரா கூறினார்.

    இங்கு தயாராகும் பொம்மைகள் ஒரு டாலர் முதல் 150 டாலர் விலையிலானவை. பல்வேறு அளவுகளில் இவை தயாராகின்றன. ஒரு பொம்மை தயாரிக்க சிலருக்கு ஒரு மணி நேரமாகும். ஆனால் சிலரோ சில நிமிஷங்களில் தயாரித்து விடுவர் என்று அவர் கூறினார்.

    அசோசேம் அறிக்கையின்படி இந்தியாவில் பொம்மைகளுக்கான சந்தை ரூ. 8 ஆயிரம் கோடி. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீத வளர்ச்சியை எட்டும் என மதிப்பிட்டுள்ளது. ஸ்ரீ சிட்டியில் அமைந்துள்ள பால்ஸ் பிளஷ் நிறுவனம் ரூ. 10 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் இந்நிறுவன வருமானம் ரூ 48 கோடி. ஒரு நாளைக்கு இங்கு 5 ஆயிரம் பொம்மைகள் தயாராகின்றன. விரைவிலேயே 20 கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் ஒரு பிரிவைத் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    0 comments:

    Post a Comment