Sunday, 17 November 2013

Tagged Under: , ,

தோல்வியில் இருந்து மீள...

By: Unknown On: 21:17
  • Share The Gag
  • பொதுவாக தோல்வி என்பது எல்லா வயதினரும் சந்திக்கும் ஒரு துக்கமான விஷயமாகும். ஆனால், இதில் இளம் வயதில், பெண்கள் சந்திக்கும் காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்பது சிலரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது.

    காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்ற இரண்டையும் இங்கே ஒரு சேர பார்க்கலாம்.

    அதாவது, காதலிக்கும் நபர் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது ஏற்படும் துக்கம் தாங்கிக் கொள்ள இயலாததுதான். ஆனால், அதில் இருந்து வெளியே வந்து, அதனைத் தாண்டியும் உலகம் உள்ளது என்று வாழ்ந்து காட்டி பலரும் நிரூபித்திருக்கிறார்கள்.

    வாழ்க்கையில் நம் துணை என்று மிகவும் நம்பிய ஒருவர் நம்மை கைவிடும் போது, வாழ்க்கையே இருண்டு போனதாக எண்ணி, அதற்குள்ளே சுற்றி சுற்றி வராமல், அதில் இருந்து வெளியே வரும் வழியைத்தான் ஒருவர் தேட வேண்டும்.

    அதற்காக அழாமல், ஆறுதல் தேடாமல், அதனை உள்ளத்தில் வைத்து மறைத்து, பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கையோடு இருப்பதாகத் தோன்றி நடிக்க வேண்டாம்.

    உங்களுக்கு எந்த வகையில் உங்களது துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் அதனை வெளிப்படுத்துங்கள். அழுங்கள், தோழியிடம் கூறி ஆறுதல் தேடுங்கள், உரிய நபரை திட்டுங்கள்.. ஏதேனும் ஒரு வகையில் உங்களது துக்கத்தை வெளியே கொட்டிவிடுங்கள்.

    பிறகு நம்மைப் பிரிந்து சென்றவரை மறக்க வேண்டும் என்றால், அவரது நினைவை ஏற்படுத்தும் பொருட்களை தூக்கி எறியுங்கள்.

    வாழ்க்கையே அவர் தான் என்று எண்ணியிருந்த நாட்களை நினைப்பதை விட்டுவிட்டு, வாழ்க்கையில் புதிதாக என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைத்துப் பாருங்கள்.

    காதலால் அல்லது திருமணத்தால் நீங்கள் விட்டப் பணியை அல்லது படிப்பை மீண்டும் தொடர முடியுமா என்பதை பற்றி யோசியுங்கள்.

    பார்ப்பவர்களிடம் எல்லாம் பழைய சம்பவத்தைப் பற்றி பேசி மீண்டும் மீண்டும் அந்த சோகத்துக்குள் மூழ்க வேண்டாம்.

    எப்போதும் யாருடனாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தனியாக இருப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள்.

    உங்களை விட்டுச் சென்றவர் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்று வைராக்கியம் கொள்ளுங்கள்.

    வாழ்க்கையில் நீங்கள் அடைந்த தோல்வியே, உங்களது வெற்றிக்கான அடையாளமாக இருக்குமாறு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

    உங்களுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, அதனை வெற்றியாக மாற்றுங்கள்.

    எந்த தோல்வியும் இறுதியல்ல.. ஒரு முற்றுப் புள்ளி அருகே அடுத்தடுத்து புள்ளிகளை வைக்கும் போது அதுவே தொடர்ச்சியாகிறது. அதை நினைவில் கொள்ளுங்கள். 

    0 comments:

    Post a Comment