Tuesday, 26 November 2013

Tagged Under: , , , ,

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க......

By: Unknown On: 07:57
  • Share The Gag
  • திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்...

    தனிக்குடித்தன தயாரிப்புகள்!


    திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால், இது கட்டாயம். இப்படி வாங்கும்போது, நீண்டகாலத்துக்கு பயன்தரும் வகையில் யோசித்து வாங்குவது நல்லது. வீட்டுக்கு வந்து போகும் பெற்றோர், உறவினர்களுக்கு ஏற்றபடியும், குழந்தைகள் வளரும்வரை அவர்களின் சேட்டைக்குஈடுகொடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு பொருளையும் வாங்கினால், 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்று இடையிடையே காசை விரயமாக்காமல், கொடுக்கும் விலைக்கு ஏற்ற பலனைப் பெறலாம். உதாரணமாக... ஃப்ளாட் டி.வி. வாங்கிய பின், 'எல்.சி.டி வாங்கியிருக்கலாம்' என்று அலைபாய்வது வேண்டாம். பிறக்கப் போகும் குழந்தையையும் மனதில் கொண்டு டபுள் பெட்டுக்கு பதிலாக, முன்கூட்டியே டிரிபிள் பெட் என்பதாக கட்டில் வாங்கிவிடலாம்! 

    குழந்தைக்குப் பின் வேலை..?

    வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தை பிறந்த பின், வேலையைத் தொடர்வது அல்லது விடுவது பற்றி முன்கூட்டியே கணவருடன் கலந்து பேசி முடிவெடுங்கள். சில வருடங்கள் மட்டும் வேலைக்கு பிரேக் விட முடிவெடுக்கும் பெண்கள், குழந்தை வளர்ப்பினூடே தங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் அந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தலாம். சாஃப்ட்வேர் துறை பெண்கள், வளர்ந்து வரும் துறைகளான மொபைல் ஆப்ஸ், க்ளவுட் அப்ளிகேஷன், பிக் டேட்டா போன்ற ஆன்லைன் கோர்ஸ்களைக் கற்கலாம். அக்கவுன்டன்ஸி துறையிலிருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே இன்கம்டாக்ஸ் ஃபைல் பண்ணும் வேலையை தெரிந்தவர்களுக்கு செய்து கொடுத்து, வருமானம் பார்க்கலாம். அரசு வேலை, வங்கி வேலைகளில் விருப்பமுள்ளவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

    எமர்ஜென்ஸி தொகை!

    வரவு - செலவு, நீண்டகாலத்துக்கான முதலீடு, சேமிப்பு தவிர, எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கையில் எமர்ஜென்ஸி தொகை எப்போதும் இருப்பது நல்லது. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதால், இந்தத் தொகையை, குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த ஆரம்ப வருடங்களிலேயே தயார் செய்து வைப்பது புத்திசாலித் தனம்.

    வருமான வரி விவரங்கள்!

    இன்கம்டாக்ஸ் நடைமுறைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதன் சாதக, பாதகங்களை புரிந்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, குழந்தைகள் பெயரில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் அதில் வரும் லாபத்தை பெற்றோரின் வருமானத்தில் சேர்த்துக் கணக்குக் காட்ட வேண்டும். என்றாலும், ஒரு குழந்தைக்கு 1,500 ரூபாய் வரை என்கிற விகிதத்தில் வருமான வரிவிலக்குக் கோரலாம். முதலீடு செய்யும்போதே, முதலீட்டு ஆலோசகரை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    எதிர்கால நிதி திட்டமிடல்!

    இன்றைய சூழலில், எடுத்த எடுப்பிலேயே வாங்கும் செழிப்பான சம்பளத்தில் 30 வயதுக்குள்ளாகவே வீடு, கார் என்று எல்லாம் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, 'அதுக்குள்ளயா..?' என்று தயங்காமல், அதற்கான முயற்சியை தாமதிக்காமல் முடுக்குங்கள். லேண்ட் லோன், ஹவுஸிங் லோன் பற்றிய விவரங்களை சேகரியுங்கள். காலம் வரும்போது, சட்டென சொந்த வீட்டுக் கனவை நனவாக்குங்கள். அதேசமயம், ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் ஏரியாக்களில் பெருகிக் கிடக்கும் ஏமாற்று வேலைகளிலும் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம், குழந்தையின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, திருமணம் என பிற் காலத்திய செலவுகளை மேலோட்டமாகவாவது திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

    வீண் செலவுகள் வேண்டாம்!


    ஒரு குட்டி ஜீவன் வந்த பின், குழந்தைகளுக்கென்று மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் வீட்டுக்குக் கொண்டு வர மனம் பரபரக்கும். பெரும்பாலும்... குழந்தைகளுக்கான பயன்பாட்டைவிட, பெற்றோரின் ஆசைகளைத் தூண்டும் வித மாகவே அவை தொடர்பான விளம்பரங்களும், பொருட்களும் இருக்கும். எனவே, 'குழந்தைக்காக' என்ற மாயையில், காசைக் கரைக் காதீர்கள். எதை வாங்கினாலும், தேவையானதாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களிடம் நம் ஆடம்பரத்தைக் காட்டுவதற்காக இருக்கக் கூடாது.

    மெட்டர்னிடி லீவ் பாலிஸி! 


    வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தின் மெட்டர்னிடி லீவ் பாலிஸி பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பேறுகால விடுப்பு எத்தனை மாதங்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, பிரசவத்துக்கு முன், பின் என்று அந்த விடுப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதைத் திட்டமிடுங்கள். சிலருக்கு கர்ப்பம் தரித்த ஆரம்ப மாதங்களில் உடம்பு அலுவலகச் சூழலுக்கு ஒத்துழைக்காது போகும். அப்போது எடுக்கும் விடுப்பு, பேறுகால விடுப்பில் சேராது. என்றாலும், அது 'லாஸ் ஆஃப் பே' ஆகிவிடாமல், மெடிக்கல் லீவாக மாற்றிக்கொள்ளும் அனுகூலத்தை ஆராயுங்கள். சில அலுவலகங்களில் அப்பாவாகும் ஆண்களுக்கும் மனைவியின் பேறுகாலத்தில் 'பெட்டர்னிடி லீவ்' (Paternity leave) வழங்குவார்கள்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    எழுதி வையுங்கள் நிதி விவரங்களை!

    கணவரின் நிதி முதலீடுகள் பற்றி தெரியாத மனைவியாக இருப்பது, இந்த யுகத்திலும் வேண்டாம். சம்பளம், பி.எஃப், பேங்க் அக்கவுன்ட், ஏ.டி.எம் பாஸ்வேர்டு, நகை லாக்கர், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், லோன், முதலீடுகள், சேமிப்புகள் என்று அனைத்து விவரங்களையும் கணவரிடம் இருந்து கேட்டறியுங்கள். அவற்றை தெளிவாக எழுதியும் வையுங்கள். வாழ்க்கை முழுக்க குழப்பமில்லாத, திணறலில்லாத பொருளாதார நிர்வாகத்துக்கு இது கை கொடுக்கும்.

    அப்புறம் என்ன... 'என் வீட்டு ஃபைனான்ஸ் மினிஸ்டர்!' என்று கணவர் சரண்டர் உங்களிடம்! 

    லைஃப் இன்ஷூரன்ஸ்!


    ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுப்பது அனைவருக்குமே அவசியம். அது, லைஃப் இன்ஷூரன்ஸ் என்பதைவிட, டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பதாக இருப்பது நல்லது. இதை உங்களுடைய இளம்வயதிலேயே, அதாவது நீங்கள் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே எடுப்பது நல்லது. அப்போதுதான் பிரீமியம் தொகை குறைவாக இருக்கும்! உதாரணத்துக்கு, உங்களுக்கு 25 வயது ஆகிறது என்றால், 10 லட்சம் ரூபாய்க்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிஸியின் பிரீமியம், ஆண்டுக்கு சுமார்‌ 2,500 ரூபாய்தான். திருமணத்துக்கு முன்பே எடுக்காவிட்டாலும்... திருமணம் முடிந்த கையோடு கட்டாயம் இதை எடுத்துவிடுங்கள்.

    மெடிக்ளைம் பாலிஸி!

    மெடிக்ளைம் பாலிஸி, இப்போது காலத்தின் கட்டாயம். பல ஆண்டுகளாக சேமித்த பணம் அனைத்தும், எதிர்பாராமல் நிகழும் ஒரு மருத்துவச் செலவில் கரைந்துவிடாமல் தடுக்க, 'மெடிக்ளைம் பாலிஸி' கை கொடுக்கும். கணவன், மனைவி, ஒரு குழந்தை கொண்ட குடும்பத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6,000 ரூபாய் பிரீமியம் செலுத்தும் வகையிலான பாலிஸி எடுத்தால், 2 லட்சம் வரை 'மெடிக்ளைம்' செய்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் பாலிஸியை புதுப்பிப்பது அவசியம். தங்களுடன் தாய், தந்தையரையும் இந்த பாலிஸியில் இணைத்துக் கொள்வது நல்லது. இதில் ஆணின் அப்பா - அம்மாவை மட்டுமல்லாமல், பெண்ணின் அப்பா - அம்மாவையும் சேர்க்கலாம்.

    0 comments:

    Post a Comment