Saturday, 2 November 2013

Tagged Under: ,

கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!

By: Unknown On: 16:07
  • Share The Gag
  •  மார்பு, தொண்டை, தலை, உணவுக்குழாய், மூட்டுகள், இரைப்பை, ரசம் எனும் தாது, கொழுப்பு, மூக்கு, நாக்கு போன்ற உடல் பகுதிகளை கபம் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடல் உறுதி, எண்ணெய்ப்பசை, எலும்பு மூட்டுகளின் இணைப்பு, ஆண்மை, பொறுமை, அறிவு, தைரியம், வலிவு, சபலம் (புலப் பொருள்களை நுகர அதிக ஆசை) இவை போன்றவற்றைத் தோற்றுவிப்பதன் மூலம் கபம் உடலுக்கு நலனைத் தருகிறது.

    தன் நிலையிலிருந்து கபம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால்-வெண்மை நிறத்தைத் தோலில் ஏற்படுத்துதல், குளிர்ச்சி, உடற்பருமன், சோம்பல், உடல் பளு, உடல் தளர்ச்சி, ஓட்டைகள் அடைப்பட்டுப் போதல், மூர்ச்சை, சுறுசுறுப்பின்மை, உறக்கம், சுவாச நோய், இருமல், வாயில் நீர் ஊறுதல், இதய வேதனை, பசி குறைதல், பூட்டுகளில் தளர்ச்சி இவற்றை ஏற்படுத்தி வளர்ச்சியடைந்த கபம் உடலுக்குத் துன்பம் தருகிறது.

    தன் நிலையிலிருந்து கபம் குறைந்துவிட்டால் தலைச்சுற்றல், உடலைத் திருகுதல் போன்ற வலி, உறக்கமின்மை, உடல் வலி, தோலில் சிறிது எரிச்சல், குத்தல் வலி, கண் எரிச்சல், கொப்புளங்கள், நடுக்கம் உண்டாதல், புகைச்சல், மூட்டுக்களின் தளர்ச்சி, இதயத்துடிப்பு, கபம் இருக்க வேண்டிய இடங்களில் இல்லாதது போல் தோன்றல் முதலியவை குறைவான கபத்தால் தோன்றுபவை. கபம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:-

    1.அவலம்பகம்:- மார்பில் தங்கியுள்ள கபம், தன் சக்தியினால் பிடரி எனும் கழுத்தின் பின்புறப் பகுதிக்கும் முதுகெலும்புப் பகுதிக்கும் உணவின் வீர்யத்தினால், இதயத்திற்கும் பரவி, மற்ற கபம் உள்ள இடங்களுக்கும், தன்னிடத்தில் தங்கியபடியே நீர்த்தன்மை அளிக்கும் செயலினால் அவற்றுக்குப் பற்றுக் கோடாக இருப்பதால் `அவலம் பகம்' எனப் பெயர் பெறுகிறது.

    2. க்லேதகம்:- இரைப்பையில் உள்ள இந்த கபம், உணவுக்கூட்டிற்கு ஈரப்பசையை அளிப்பதால் இது இப்பெயரை அடைகிறது.

    3. போதகம்:- நாக்கிலுள்ள இந்த கபம், சுவையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

    4. தர்ப்பகம்:- இது தலையில் இருந்து கொண்டு கண் முதலான புலன்களுக்கு தன்நிறைவை அளிக்கிறது.

    5. ச்லேஷகம்:- மூட்டுகளில் உள்ள இந்த கபம், எலும்பு மூட்டுகளை சேர்த்து வைத்து, எண்ணெய்ப் பசையையும் அளிக்கிறது. உணவில் அதிக இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை, நீர்க்காய்கள், உணவிற்குப் பிறகு பழங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுதல், பழைய சோறு, பகலில் படுத்து உறங்குதல், தலையில் குளிர்ந்த நீரால் குளித்தல்,

    ஏசி அறையில் படுத்துறங்குதல், பனி பெய்யும் அதிகாலையில் தலையை துணியால் மறைக்காமல் வீட்டை விட்டு வெளியே வருதல், ஈரமான தரையில் நின்று கொண்டு வேலை செய்தல், தண்ணீரின் தன்மையறியாது குடித்தல், சூடு ஆறிப்போன் உணவுப் பொருளை மறுபடியும் சூடு செய்து சாப்பிடுதல் போன்றவற்றால் உடலில் கபம் எனும் தோஷம் கூடி பல உபாதைகளை ஏற்படுத்துகிறது.

    20 வகையான கப நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அவை:-

    எப்பொழுதும் சாப்பிட்டது போன்ற உணர்ச்சி, மயக்கத்துடன் கூடிய சோம்பல், அதிக உறக்கம், உடல் பருத்து பளுவாதல், சக்தி இருந்தும் செயலில் ஆர்வமின்மை, வாயில் இனிப்புச் சுவை, வாயில் உமிழ்நீர் சுரத்தல், அடிக்கடி கபம் வெளிப்படுதல், மலம் அதிகமாதல், கபம் அதிகரித்தல்:-

    இதயத்தில் பூசியது போன்ற அடைப்பு, தொண்டையில் குழகுழப்பு, நரம்புகள், இரத்தக்குழாய்கள் நிறைந்திருப்பது போன்ற உணர்வு, கழுத்தில் தோன்றும் ஒரு வகைக் கட்டி, உடல் அளவு கடந்து பருத்தல், உடல் குளிர்ச்சி, மார்பில் அரிப்பும் குத்தலோடு கூடிய வீக்கமும், உடல் வெளுத்தல், கண்கள், மலம், சிறுநீர் இவை வெளுத்தல்.

    கபத்தினால் ஏற்படும் உபாதைகளை நீக்க:- நெஞ்சில், தலையில் நிறைந்துள்ள கபத்தை உருக்கி வாந்தி மூலம் வெளியேற்றுதல், வறட்சி யளிப்பதும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை உள்ளதும், சூடான வீர்யம் கொண்டதும், பழமையானதும், இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடியதுமான உணவு வகைகளையும் சாப்பிடுவது நல்லது.

    ஓடுதல், தாவுதல், நீந்துதல், விழித்திருத்தல், உடற்பயிற்சி செய்தல், புணருதல், வறட்சியுண்டாக்கும் பொருட்களால் உடலில் தேய்த்தல் போன்றவை செய்ய நல்லது. வறட்சியான இடம், வறட்சித் தன்மை கொடுக்கக்கூடிய போர்வை இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

    குறிப்பாக தேன், பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பார்லி, கொள்ளு, பச்சரிசி போட்டுக் காய்ச்சிய கஞ்சித் தண்ணீர் பருகுதல், சூடான தண்ணீரால் வாய் கொப்பளித்தல், கோரைக்கிழங்கு, சுக்கு போட்டுக் காய்ச்சிய வெந்நீர் குடித்தல், வாந்தி செய்து கபத்தை வெளியேற்றுதல் போன்றவை சிறந்த சிகிச்சை முறைகளாகும்.

    வியாக்ராதி, தசமூல கடுத்ரயாதி கஷாயம், பலாஜீரகாதி கஷாயம், நயோபாயம், இந்து காந்தம் கஷாயம், அக்னி குமார ரஸம், ஆசால்யாதி, கோரோசனாதி குடிகை, அகஸ்திய ரஸாயனம், தசமூலரஸாயனம் போன்ற லேகியங்கள், வாஸாரிஷ்டம், கனகாஸவம், தசமூலாரிஷ்டம்,

    தலைக்கு அஸனவில்வாதி, அஸனமஞ்ஜிஷ்டாதி, ஏலாதி போன்ற வெளிப்புறப் பூச்சுகள், தாளீஸபத்ராதி, வைஷ்வாநரம் எனும் உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகள் போன்றவைகளாலும் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டிய சில தரமான மருந்துகளாலும் கபத்தை நம்மால் குறைக்க முடியும்.

    0 comments:

    Post a Comment