Thursday, 28 November 2013

Tagged Under: , , ,

வெற்றி மனப்பான்மை!

By: Unknown On: 23:35
  • Share The Gag
  • வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு 'வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.

    இவ் வெற்றி குறித்தான எண்ணம் மனதில் தோன்றும்போதே நாம் இன்னொன்றையும் மனதின் மூலையில் இருத்த வேண்டும். அதாவது இவ் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே எந்தத் தடங்கலுமின்றி நாம் நினைத்தவாறே இலகுவாக ஈடேறாமலிருக்கவும் வாய்ப்புக்களிருக்கின்றன என்பதனையும் மனதில் இருத்த வேண்டும். நமது வாழ்வின் எந்தவொரு போட்டியிலும், முயற்சிகளிலும் முதலாவது, இரண்டாவது என வகைப்படுத்தப்படும் போது எல்லாவற்றிலுமே முதலாவதாக வரும் சாத்தியங்கள் குறைவு. இவ்வாறாகச் சில தோல்விகளைத் தழுவ நேரிடுவதை நமது எதிர்பார்ப்புக்கள் ஈடேறவில்லை எனவும் கொள்ளலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவதற்கு போட்டிகள் மட்டுமே அவசியமென்றும் சொல்லமுடியாது. யாருடனும், எந்தப் போட்டியும் இல்லாதவிடத்தும், தனது மனதில் வேர்விட்ட எதிர்பார்ப்பொன்று ஈடேறாவிட்டால் அவர் மனதளவில் கோழையானவனாக மாறி உயிரற்ற மனநிலைக்கு மாறிவிடக் கூடும்.

    ஆகவே போட்டி என்ற ஒன்று இருந்தாலோ, இல்லாவிட்டாலோ தனது எதிர்பார்ப்புக்கள் ஈடேறா விட்டால் அல்லது, தமது இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் பலர் நிராசையோடு மனதளவில் உடைந்து போகின்றனர். தொலைக்காட்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். வெற்றியை அறிவிக்கும் போது துள்ளிக் குதிக்கும் அதே வேளை தோல்வியை அறிவிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் தாங்க முடியாமல் அழுகின்றனர். சிலர் கோபப்பட்டு நடுவர் குழுவினை அநீதம் விளைவித்ததாகத் திட்டுகின்றனர். இப்படியாக மனதில் ஆசையோடு எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனால் அதற்கான நமது வெளிப்பாடுகள்தான் நமது மன உறுதியினைப் பற்றி வெளியே சொல்கின்றன

    உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா? போட்டியொன்றில் முதலாவதாக வரமுடியவில்லையென்று, வாழ்வில் ஆவலாக எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனதென்று சோர்ந்து போய் தைரியமிழந்த அல்லது அதிகமாகக் கோபப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உண்டா? சாதாரண மனிதர்களான எமக்கு இது போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்புதான் எனினும் நமது மனதின் மகிழ்ச்சியை நாமே கொன்று விடுவதைப் போன்ற இவ் உணர்வுகள் மிகத் தீங்கானவை. மிகவும் கோழைத்தனமானவை. 'வெற்றி' என்றால் என்னவென்று அறிந்த மனங்கள் இதுபோல தோல்விகளில் பெரிதாக ஆர்ப்பரிப்பதில்லை. உடைந்து போவதுமில்லை.

    ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், ஒரு போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனதென்பது தோல்விக்கான முழு அர்த்தமல்ல என்பதனை மனதிலிருத்துங்கள். வெற்றி மனப்பான்மையோடு, ஒரு எதிர்பார்ப்போடு தைரியமாக அப் போட்டியில் கலந்து கொண்டீர்களே, அதுதான் வெற்றி. உங்களிடம் இருக்கும் திறமை மற்றும் மற்றப் போட்டியாளர்களின் திறமை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன எனக் கொண்டாலும் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையே உங்கள் உண்மையான திறமையை வெளிக்காட்டுகிறது. வெற்றியில் பெரிதாக ஆர்ப்பரிக்காமலும், தோல்வியில் முழுதாக உடைந்து போகாமலும் இரண்டையும் அமைதியாக, சமமாக எதிர்கொள்வதே உண்மையான வெற்றியெனப்படுகிறது.

    ஆனால் நாம் காணும் இன்றைய சமூகத்தில் அநேகமான போட்டிகளில் அடுத்தவர்களைத் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைக் கீழே அல்லது பின்னால் தள்ளிவிட்டு தான் மட்டும் எல்லா விதத்திலும் எல்லா இடங்களிலும் உயர்ந்த இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற மனப்பான்மையே மிகைத்திருக்கிறது. அதுவல்ல வெற்றி. அதுவல்ல உண்மையான முன்னேற்றம். ஒருவர் வெற்றியாளராக, இன்னொருவரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான வெற்றியாளரெனப்படுபவர் இன்னொருவரைத் தோல்விக்குள்ளாக்கி, முதலாவதாக வருபவர் அல்லர். தான் பெற்ற வெற்றி, தனது திறமையை உணர்ந்து அவற்றை இன்னும் வளரச் செய்தபடி எந்தவொரு தேவையற்ற வீணான எதிர்பார்ப்புக்களுமின்றி மன உறுதியோடு, தன்னம்பிக்கையோடு, இலட்சியத்தோடு முன்னே செல்லும் மனிதனே உண்மையான வெற்றியாளர் எனப்படுகிறார்.

    உலகின் எல்லா மனிதர்களுக்கும் தமக்கென்று ஏதாவதொரு தனித் திறமையாவது இருக்கும். அத் திறமையை மேலும் மேலும் கூர் தீட்டி வளர்த்துக் கொள்வதே வெற்றி மனப்பான்மை எனப்படுகிறது. அதுவல்லாமல் தன்னுடன் போட்டியிட்டுத் தோற்ற ஒருவரிடம் 'எனது திறமை, உனது திறமையை விடவும் அதிகமாக உள்ளது' எனச் சொல்லிக் காட்டுவது அல்ல. அடுத்த போட்டியின் போது இக்கருத்து மாறுபடக் கூடும். இன்றைய வாழ்வில் பலர் போட்டிகளில் வெற்றிபெறக் கூடும். தமது இலட்சியங்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடும். தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால் பெரும்பாலாக இவ் வெற்றிகளைப் பெறுபவர்கள் தமது திறமையைக் குறித்தல்லாமல் அடுத்தவரைத் தோற்கடித்தது குறித்தே மகிழ்ச்சியடைகின்றனர். இது உண்மையில் தோல்வி மனப்பான்மையே தவிர வெற்றிமனப்பான்மை அல்ல.

    ஆகவே, ஒரு சந்தர்ப்பத்துப் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே வாழ்வின் இலக்கெனக் கொள்ளாமல் முழு வாழ்வையும் தமது திறமைகளால் வெற்றிகொள்வதே வாழ்வின் உண்மையான வெற்றியெனக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவ நேரும் பட்சத்தில் அதற்காக மனமுடைந்து சோர்ந்து போகக் கூடாது. எதிர்பார்ப்பு ஈடேறவில்லையென துயரப்பட்டு மனமுடைந்து போகக் கூடாது.

    எல்லோருக்குமே அவ்வப்போது சில எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவது இயற்கை. ஆனால் அதற்காக நகரும் வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறாக எதிர்பார்ப்பு ஈடேறாச் சமயங்களில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத வாழ்த்தொன்று உங்களை வந்தடைந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். 'அன்று நான் தோற்றுப்போனது நல்லதுதான்' எனப் பின் வரும் காலங்களில் நீங்களே சொல்லக் கூடுமான அளவுக்கு வெற்றியை அவ் வாழ்த்துக்கள் சுமந்து வந்திருக்கும்

    எனவே 'தோல்வியடைந்து விட்டோம்' என்ற சோர்வு மனநிலையை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி, தொடர்ந்த எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்காது 'என்னைத் தோற்கடிக்க நான் விடமாட்டேன்' என்ற தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் உங்கள் பாதங்களை முன்வையுங்கள். அடுத்தவரை விழச் செய்வதல்ல, தான் விழாமல் முன்னேறுவதே உண்மையான வெற்றி என உணருங்கள்.அவ் உணர்விருக்கும் நீங்களே வெற்றிமனப்பான்மை கொண்ட உண்மையான வெற்றியாளர்.

    0 comments:

    Post a Comment