Tuesday, 26 August 2014

Tagged Under: ,

மந்திர அனுபவங்கள்

By: Unknown On: 16:52
  • Share The Gag

  • இந்த மந்திர தந்திர விஷயங்களில் ஆரம்ப காலத்தில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இன்னும் சொல்வதென்றால் கடவுள் பெயரில் கூட அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. முன்னோர்கள் நம்பினார்கள், பெரியவர்கள் சொல்கிறார்கள், அறிஞர்கள் எழுதிவைத்திருக்கிறார்க்ள் என்பதற்காக ஒரு விஷயத்தை ஏற்று கொள்வது என்பது அறிவுக்கு பொருந்தாது என அப்போது தோன்றும்.

     ஒரு நாள் திடிரென கடவுள் இல்லை என்பதை மட்டும் எதை வைத்து நாம் நம்புகிறோம். சில பெரியவர்களின் கருத்துக்களை கேட்டு தானே, அவர்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் நமது வாதத்திற்கு ஒத்து வருகிறது என்பதற்காக அவைகள் தான் சரியென்று எப்படி நாம் முடிவுக்கு வர இயலும் ? ஒரு வேளை கடவுள் இல்லையென்பது கூட தவறுதலான கணக்காக இருக்க வாய்ப்புள்ளதே எனதோன்றியது.

      இதனால் நானொரு முடிவுக்கு வந்தேன். கடவுள் என்ற பொருள் புலன்களுக்கு அப்பாற்பட்டது புலன்களால் அறிய
    முடியாதது என்று தான் பல ஞானிகள் சொல்கிறார்கள். அதே நேரம் அவர்கள் கடவுளை ஆத்மபூர்வமாக உணரலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அப்படி உணர்ந்து கொள்ள சிலவழிகளையும் அவர்கள் காட்டியுள்ளனர்.

    செருப்பு தைக்க வேண்டுமென்றால் அதற்கு பயிற்சி வேண்டும். செக்குமாடு ஓட்டுவதற்கு கூட பயிற்சி இல்லாமல் ஆகாது. ஆகவே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை கட்டிலில் கால் நீட்டி கொண்டு உட்கார்ந்து பேசி கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. கடவுளை உணர பயிற்சி எடுக்க வேண்டும். அந்த பயிற்சியின் முடிவில் நமது சுய அனுபவம் எதை தருகிறதோ
    அதை ஏற்றுகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு வீன் விவாதங்களில் பொழுதை கழிப்பது முட்டாள்தனம் என எனக்கு தோன்றியதால் சில பயிற்சிகளை எடுத்து கொள்ள தீர்மானித்தேன்.

     நான் தீர்மானித்தால் மட்டும் போதுமா? அதை சொல்லி தர ஆள் கிடைக்க வேண்டுமே! மாவட்ட கலெக்டரை பார்ப்பதற்கே ஏகப்பட்ட சிபாரிசுகளை தேடி அலைய வேண்டியுள்ளது. கடவுளை பார்ப்பதற்கான  வாய்ப்பு உடனே கிடைத்து விடுமா? சில மாதங்கள் மிக தீவிரமாக தேடினேன்.

     எனது தீவிரத்தை உணர்ந்த ஒரு நண்பர் ஒரு வேலையை முடிக்க அமைச்சரைத்தான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரின் உதவியாளர்களை கூட பார்க்கலாம். கடவுள் உண்மையா? பொய்யா? என்று அறிந்து கொள்வதற்கு முன்னால் கடவுளை சார்ந்து சொல்லப்படுகின்ற வேறு சில விஷயங்களை பரிசோதனை செய்து பார்த்தாலே கடவுள் பற்றிய ஒரு தீர்மானத்திற்கு வந்து விடலாம் என்றார்.

     எனக்கு அந்த யோசனை சரியாகப்பட்டது. கடவுள் மீது எந்தளவு மக்களுக்கு நம்பிக்கையும் பக்தியும் உண்டோ அதே அளவு மந்திரங்களின் மீது பக்தியும் பயமும் இருப்பதை நானறிவேன். எனது தந்தையாரின் நண்பர் பட்டுசாமி ஐய்யர் அடிக்கடி காயத்ரி மந்திரத்தின் உயர்வையும் பயனையும் என்னிடம் பேசுவார். நான் அப்போது எல்லாம் அதை
    கண்டுகொண்டதே இல்லை. திடிரென ஒரு நாள் அவரிடம் நான் மந்திரங்கள் கற்று கொள்ள வேண்டும். அதற்கு உங்களால் எதாவது உதவி செய்ய இயலுமா? என்று கேட்டேன்.

      அதற்கு அவர் என்னை பேபி என்று அழைக்கப்படும் கீழையூர் யஞ்ச சுப்ரமணியன் என்ற வேத பண்டிதரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி எதற்காக நீ இதை கற்று கொள்ள விரும்புகிறாய் என்பது தான். நான் உண்மையான காரணத்தை அவரிடம் மறைக்காமல் அவரிடம் சொல்லிவிட்டேன். சொல்லிய பிறகு நாத்திகான இவனுக்கு பாடம் சொல்லி கொடுக்க கூடாது என்று மறுத்து விடுவாரோ என பயப்பட்டேன்.

      காரணம் எனக்கு சில நாத்திகர்கள் தங்களின் கருத்துக்கு மாற்று கருத்துடைய யாரையும் பக்கத்தில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். எதாவது காரணம் சொல்லி ஆளை புறக்கணித்து விடுவார்கள். பல நேரங்களில் அடுத்தவர்களின்
    மனம் என்னபாடுபடும் என்பதை கூட உணராமல் வார்த்தைகளை கொட்டி வேதனைபடுத்துவார்கள். இதனை நான் பல முறை அறிந்திருக்கிறேன். இவரும் அப்படி நம்மை புறகணித்து விடுவாரோ என பயப்பட்டேன். ஆனால் இவர் நான் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக நான் கூறியதை கேட்டு சந்தோஷப்பட்டார். என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த வரை சொல்லி தருகிறேன். முயற்சித்து பார். கடவுள் நிச்சயம் உனக்கு நல்ல வழியை காட்டுவார் என்றார்.

     இரண்டு ஒரு நாட்களிலேயே அதர்வன வேதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மந்திர பகுதியை எனக்கு சொல்லி இதன்படி செய்து வா பலன் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இரண்டு மாதம் கழித்து என்னை பார் என அனுப்பி வைத்தார். கோத்தி பிண்டம் பிரம்ம ராட்சஸம் என்று தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது குரங்கிற்கு ஒரு புண் வந்துவிட்டால் சதா சர்வகாலமும் அந்த புண்ணை விரல்களால் கிண்டி கிண்டி பெரிதுபடுத்திவிடுமாம். ஏறக்குறைய நானும் அப்படித்தான் இருந்தேன். அவர் சொல்லி கொடுத்த நாளிலிருந்து எனக்கு வேறு சிந்தனையே கிடையாது.

      அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் வியாபாரம் என்பவைகளெல்லாம் இரண்டாம் பட்சமாக தெரிந்தது. சதாசர்வ நேரமும் மந்திர பயிற்சியிலேயே மனம் ஓடியது. இதனôல் தந்தையாரிடம் திட்டும் பட்டேன். பல நேரங்களில் வியாபாரத்தில் நஷ்டமும்பட்டேன். ஆனாலும் மனம் சலிக்காமல் என் முயற்சியிலேயே கண்ணாக இருந்தேன். பயிற்சியை துவங்கி ஒன்றரை மாதம் இருக்கும். ஒருநாள் அதிகாலை மூன்றரை மணிக்கு பயிற்சியில் இருந்தபோது என் உடம்பிற்குள் ஒரு மின்சார அதிர்வு இறங்குவது போல் உணர்ந்தேன்.

      தலை பாரமாகிவிட்டது. கண்களை திறப்பதற்கே சிரமமாக இருந்தது. என் மண்டைக்க்குள் தட்டச்சு எந்திரத்தை யாரோ தட்டுவது போல் தட்தட என சத்தம் கேட்டது.உண்மையில் இந்த உணர்வுகளால் நான் பயந்துவிட்டேன் என்றே சொல்லலாம். முன்று நாட்கள் இந்த அனுபவத்தின் தாக்கம் என்னைவிட்டு அகலவில்லை. யாரோடும் பேச தோன்றவில்லை, பசி, தாகம் கூட வலிய அழைத்ததால் தான் வந்தது. என் சுய உணர்வு தடுமாறவில்லையே தவிர மற்றபடி வெளியில் பார்ப்பதற்கு ஒரு பித்து பிடித்தவன் போலவே இருந்தேன்.

      ஆனாலும் பயற்சியை நான் விடவில்லை. இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என உள்மனம் சொன்னதினால் பயிற்சியில் மேலும் தீவிரம் காட்டினேன். சரியாக ஐந்தாவது நாள் ஒளி பொருந்திய உருவத்தை நேருக்கு நேராக சந்தித்தேன். நிச்சயம் அது என் மன கற்பனையல்ல. அப்படியொரு உருவத்தை இதற்கு முன் நான் படங்களில் பார்த்ததுமில்லை, கற்பனை செய்ததுமில்லை. அதனால் அது நிச்சயம் மாய தோற்றமில்லை என்று உறுதிபட கூற இயலும். சில விநாடிகள் மட்டுமே தெரிந்த அந்த உருவம் இதுவரை கொதித்து கிடந்த என் மனதை சாந்தப்படுத்தியது. நிரந்தரமான ஒரு மகிழ்ச்சி பேரலை எனக்குள் உலாவுவதை நான் கண்டேன். அந்த அலையின் தாலாட்டுதலை இந்த நிமிடம் வரை உணருகிறேன்.

     இந்த அனுபவத்திற்கு பிறகு என் புத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.கடவுள், தெய்வம், மந்திரம், ஜெபம் என்று சொல்லி சென்றிருக்கும் நமது முன்னோர்க்ள நிச்சயம் முட்டாள் அல்ல,நம்மை கற்பனை வாதத்திற்குள் தள்ளும் மோசடி பேர்வழிகளும் அல்ல தாங்கள் நிச்சயமாக உணர்ந்ததை சத்தியமாக நமக்கு சொல்லி சென்றிருக்கும் மெய்வழிகாட்டிகளே என்ற உண்மை தெரிந்தது. ஞானம் பிறப்பதற்கான மெல்லிய ஒளிக்கீற்றும் கண்ணில்பட்டது.

    பிறகுகென்ன சும்மா மென்றவன் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஒன்றுமே இல்லாது இருந்த எனக்கு ஏதோ ஒரு வழி கிடைத்துவிட்டது போல அதில் மேலும் முன்னேறி செல்ல ஒரு வெறியே ஏற்பட்டது. மந்திர பிரயோகத்தில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வ நெருப்பு கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. அதர்வன வேத மந்திரங்களை மட்டுமல்ல திருமூலர், கருவூரார், புலிபாணி சித்தர் போன்ற சித்த புருஷர்களின் மந்திர முறைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

        என்னால் நடக்க முடியாது.ஒருஇடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வதாக இருந்தால் கூட இன்னொருவரின் துணை வேண்டும். இந்த நிலையில் பலவிதமான மந்திரங்களை கற்றுக் கொள்ள வேறு வேறுபட்ட குருமார்களை எப்படி என்னால் தேடி போக இயலும். இந்த எதார்த்த நிலையை உணர்ந்து மனம் சிறிது சஞ்சலப்பட்டாலும் கூட உன்னால் எப்படியும் முடியுமென எனக்குள் இருந்து ஒரு பறவை பாடிக்கொண்டே இருக்கும். எதேர்ச்சையாகவோ அல்லது கடவளின் அனுகிரகத்தாலையோ சில குருமார்கள் என்னை தேடியே வந்திருக்கிறார்கள். குருமார்கள் இல்லாத நேரத்தில் மிக பழையகால புத்தகங்களும், ஏட்டு சுவடிகளும் எனக்கு வழிகாட்டியிருக்கின்றன.

       சுமார் பத்து வருட காலம் மந்திரம் கற்க வேண்டும் என்ற வெறி அடங்கவே இல்லை. அதன் பிறகுதான் நான் கற்ற மந்திரத்தை மற்றவரகளுக்காக பிரயோகம் செய்து பார்த்தேன். அந்த பிரயோக பயிற்சியில் ஆரம்பகால கட்டத்தில் சில வெற்றிகளும், பல தோல்விகளும் கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் தோல்விகளை பார்த்து என் மனம் துவண்டு போனதே கிடையாது. ஒரு தோல்வி வந்துவிட்டால் மீண்டும் மீண்டும் மோதுவேன்.அந்த மோதல் என்னை செழுமைபடுத்தியிருக்கிறதே தவிர காயப்படுத்தியதில்லை.

    0 comments:

    Post a Comment