Thursday, 12 December 2013

Tagged Under: , , , ,

வாழ்க்கைக்கு வழிகாட்டும் மந்திரங்கள்!

By: Unknown On: 15:36
  • Share The Gag


  • மந்திரங்களைக் கேட்பதால் அல்லது உச்சரிப்பதால் எழும்பும் த்வனி மனிதனுடைய உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் தீய சக்திகளை அகற்றி விடுகிறது. மந்திரம் என்ற அரிய கருவி, உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் ஒரு மனிதனை மாற்றுகிறது. சில நேரங்களில் மனிதன் ஆற்றிய செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்துகின்றான். மனிதனுடைய வயது ஏற்றமடையும் போது, அவனது ஞாபக சக்தி பலவீனமடைகிறது. இந்த மந்திரங்கள் மனிதனுடைய ஞாபக சக்தியைப் பலப்படுத்தி, செயலற்ற நிலையிலுள்ள எண்ணங்களுக்கு புத்துணர்வு கொடுத்து, அவனை நல்லதொரு வழியில் வழி நடத்திச் செல்லுகின்றது.


    மந்திரங்களின் கருத்துக்கள் தெரியாமலிருந்தாலும் நம்மில் பலர் பல முறைகள் கேட்கின்றோம் அல்லது உச்சரிக்கின்றோம். அவற்றிலிருந்து எழும்பும் த்வனியானது மனிதனுக்கு புதிய பலத்தைக் கொடுத்து, அவனுடைய எண்ணங்களுக்கு ஒரு வடிகால் கொடுக்கத் தவறுவதில்லை. இவை ஒரு மனிதனுக்கு கர்ம வழியையும், பக்தி வழியையும் தெரியப்படுத்துகிறது. கர்ம வழி மனிதனுக்கு இந்தப் பிறப்பின் கடமையை உணர்த்துகிறது.



    கர்ம வழியானது, அவனுடைய இந்தப் பிறவியின் நோக்கத்தையும், அற்புதமான செயல்களை நிகழ்த்தக்கூடிய வல்லமையும் கொண்டது என்று மனிதனுக்கு ஞாபகப்படுத்துகிறது. கடமையை மூச்சாகக் கொண்ட மனிதன் சில சமயம் குழப்பமடைகின்றான். இந்நிலையில் இந்த மந்திரங்கள் அவனைக் குழுப்பத்திலிருந்து விடுவித்து, அவனுடைய நோக்கத்தை தெளிவு படுத்துகிறது. மனிதனுடைய நிலையற்ற செயல்களுக்கு ஒரு வடிவம் கொடுப்பதற்கு இந்த மந்திரங்கள் ஒரு தூண்டுகோலாக அமைகின்றது. இந்தப் பிறவியில் ஆற்றிய செயல்களில்தான் மனிதனுடைய கர்ம வழி அடங்கியுள்ளது என்ற உண்மையை அவனுக்கு உணர்த்துகிறது.


    மந்திரங்கள் ஒரு மனிதனுக்கு பக்தி வழிமுறையின் சிறப்பை எடுத்துரைக்கத் தவறுவதில்லை. பக்தி வழியின் மூலம் இறைவன் நம்மோடு இருப்பதாக உணர்கின்றோம். இந்த வழிமுறை தியானத்தின் உயர்வினை விளக்குகின்றது. தியானத்தின் மூலம் மனிதனின் உள்ளம் தூய்மை பெறுகின்றது. பால் போன்ற வெள்ளை மனம் கொண்ட மனிதனின் எண்ணங்களும் தூய்மையாகவே இருக்கின்றன. மனிதனின் களங்கமில்லாத உள்ளத்திலிருந்து எழும்பிய எண்ணங்களால் ஆற்றிய செயல்கள் நல்லவைகளைச் செய்தது மட்டுமில்லாமல், அவற்றால் அவனுக்குள்ளே உறைந்து கிடக்கும் அந்தராத்மாவைப் பற்றி அறிந்து கொள்கின்றான்.


    போராட்டம் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் மனம் குழப்பமடைந்து கலங்கிய நிலமையில் இருக்கின்றான். போராட்டமே அவனுடைய வாழ்க்கை என்று மாறியதால், அவன் சரியான திசையை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல், வழி தவறி செல்லுகின்றான். மாறுபட்ட சூழ்நிலைகள் அவனை தத்தளிக்க வைக்கின்றன. ஆனால் மந்திரத்தால் பெற்ற பக்தி வழியின் மூலம் எந்த மனிதனும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ முற்படுகின்றான். தன்னை மாற்றிக் கொண்டு வாழும் மனிதன் எத்தனை துன்பங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றவன். அந்தந்த கால கட்டத்தில் வெவ்வேறு உணர்வுகளோடு வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனும் தயாராகிக் கொள்கின்றான்.


    அவனுடைய மனம் அமைதி பெறுகிறது. அமைதியான மனம் தேவையில்லாத சிந்தனையை வளர்ப்பதில்லை. எந்த ஒரு மனிதனும் தனக்கு அப்பாற்பட்டு எதையும் யோசிப்பதில்லை. எந்தச் செயலை அவனால் செய்ய முடிந்ததோ அதனை ஆற்றுவிப்பதற்கு தேவையான கர்ம மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் பிரயோகித்து செயல் படுத்துகின்றான். மந்திரங்கள் மனிதனுடைய உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அவனுக்கு இந்தப் பிறவியின் கர்ம வழியைத் தெரியப்படுத்தி, அதனுடன் பக்தி மார்க்கத்தின் சிறப்பான அம்சங்களை விளக்கி, அவனுக்கு நல்லதொரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கிறது. மந்திரங்கள் அறிந்த மானிடன் வாழ்க்கையின் சிறப்பான வழியினைத் தெரிந்து கொள்கின்றான், வாழ்வில் பேரானந்தத்தை பெறுகின்றான்.

    0 comments:

    Post a Comment