Tuesday, 3 December 2013

Tagged Under: , , , ,

காதலை எதிர்ப்பதா?

By: Unknown On: 21:32
  • Share The Gag
  • மௌனத்தின் மொழி பேசிய மனித இனத்தின் மூதாதையர்கள் முதன் முதலில் பேசிய மொழிதான் காதல். எத்தனை காதலர்களை கடந்து வந்திருந்தாலும், எத்தனை தோல்வி, வலி மிகு காவியங்களை உலகிற்கு தந்திருந்தாலும், இன்றும் ஈர்க்கின்றது  காதல்  என்ற சொல்.



    கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியின் வழித்தோன்றல்கள் என்று பீற்றிக் கொள்கிறோம் நாம். ஆனால், தமிழ் பேசும் முன்பே மனிதன் பேசிய மொழியை சாதி, மதம், பணம் போன்றவைகளால் தீண்டத்தகாதவர்களாகி நிற்கிறோம். வள்ளுவன் புகட்டிய காமத்துப்பாலை குடித்த மூதாதையர்களின் இளைய தலைமுறைகளின் காதலுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து கொண்டிருக்கிறது.........நம் தமிழ்ச் சமூகம்.



    காதல் என்றதும் இங்கே ஆண்-பெண் காதல் என்று பொருள் கொள்ளவும். அது இயல்பானது. வயது-உடல் முதிர்ச்சி அடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாக தோன்றும் ஈர்ப்பு, பின்பு வரும் மதிப்பு இவை கலந்ததே காதல் என்று கொள்ளலாம். இதில் காதல் வேறு, காமம் வேறு என்ற பட்டிமன்றம் வேறு நடக்கிறது.

    இக்காலத்து இளசுகளுக்கு காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசமே தெரியலை, உண்மையான காதலெல்லாம் தற்காலத்தில் இல்லை, தமிழ் பண்பாடு சீரழிஞ்சு போகுது போன்ற வசனங்கள் நாம் இன்று பல இடங்களில் சந்திப்பவை. ஆனால், இதை பேசும் பழைய ஓட்டை உடசல்களின் பண்பாடு எதுவாக இருந்தது?

    பெண்ணை கோவிலிற்கு பொட்டு கட்டி விடுவது, விதவை திருமணத்தை,மறுமணத்தை மறுத்தது, பெண்ணை உடன்கட்டை ஏறச் சொன்னது போன்ற ஆணாதிக்க லூசுத்தனங்களை செய்ததுதான் இவர்கள் பண்பாடு. இன்றைய தலைமுறைக்கு பண்பாடு சொல்லித்தரும் அளவிற்கு அன்றைய தலைமுறையினருக்கு தகுதியிருக்கிறதா? என்ற கேள்வி இன்றைய தலைமுறையின் சார்பாக வருகிறது.

    ஆனால், இந்த பெரிசுகளின் பொது உளவியலில் எழும் கேள்வி, அல்லது இன்றைய தலைமுறையினர் நம்பி வரும் காதலில் உள்ள புனிதத்தன்மை நம்பிக்கைகள் பற்றி நாம் உரையாடாமல் விட்டோமானால், சார்புத்தன்மையுடதையாக ஆகிவிடும்.



    அந்த புனித கற்பிதத்தில் காதலில் சொல்லப்படும் முக்கியமான வசனம் காதல் வேறு? காமம் வேறு என்பதுதான்

    உண்மையிலே காதல் வேறு? காமம் வேறா?

    இது குறித்தான விவாதத்திற்குள் நாம் உட்புகும் முன் தந்தை பெரியார் காதலை பற்றி கூறியதை கொஞ்சம் கவனிப்பது உகந்ததாக இருக்கும்.

    பெரியார் காதலை பற்றி என்ன சொல்கிறார் கேளுங்கள்....



     உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்


    காதல் என்பது “ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.”

    “இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.”

    “அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.”

    பெரியாருடைய கருத்து மறுத்தது எதையென்றால் இயற்கையான உணர்வுக்கு சமூகத்தின் பிற்போக்குத்தனத்திடம் அனுமதி கோரி நிற்பதைத்தான்.

    காதலை சொல்வது என்பது ஆண்பெண் சேர்க்கையில், இணைந்து வாழ்வதற்கான ஒரு நாகரீகமான அணுகுமுறைதானேயன்றி வேறில்லை....

    நம் சமூகத்தில் காமம் என்ற இயற்கையான உணர்வை பற்றிய சரியான விழிப்புணர்வு, உரையாடல்கள் இல்லாமைதான் இன்று காதலா? காமமா?என்ற குழப்பத்தில் கொண்டு போய்விடுகிறது. தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையையும், பக்குவத்தையும் இச்சமூகத்தின் இளைய தலைமுறைக்கு வழங்கிவிட்டால், காதலாக இருந்தாலென்ன, காமமாக இருந்தாலென்ன? யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்று நாம் இந்த கட்டுரையை முடித்துவிடலாமென்று கருதினால், பிரச்சினைகள் இருக்கிறது என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    அது சாதியின், மதத்தின், வர்க்கத்தின் உருவில் வந்து கத்துகிறது, சில நேரங்களின் பிரியமானவர்களின் கழுத்தையும் அறுக்கிறது. தாம் பெற்ற குழந்தைகள் என்பதை தாண்டி, சமூகத்தில் தான் நம்பி வந்த போலியான வரையரைகளை தன் பிள்ளைகளும் கடைபிடிக்க வேண்டும் என்று பிடிவாதமும் செய்கிறது.

    தமது பிள்ளைகள் போலியான இந்த சமூக மதிப்பை காப்பாற்றுவதற்காகவே தன்னால் ஒரு பெண்ணோடு இணைந்து பெற்றெடுக்கப்படுகிறார்கள், என்று சொல்லாமல் சொல்கிறது இந்த பெற்றோர்களின் நடவடிக்கைகள். இதை எழுத்துவடிவில் படிக்கும்போது முகம் சுழித்துவிட்டு, வீட்டிற்கு சென்று நீங்கள் தாங்கள் நம்பும் போலியான மதிப்பீடுகளையே தூக்கி சுமந்து கொண்டு ஓடினீர்களென்றால், அறிவு வளர்ச்சி உங்களையும் சேர்த்தே குப்புற தள்ளிவிட்டு முதுகிலேறி பயணிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இளைஞர்களே!!! உங்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், வாழ்க்கைப்பாதையில் சாதிக்க காதலை ஒரு தடையாக வைத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் உணர்வு நேர்மையானதாக இருந்தால்,சரியான துணையை தேர்ந்தெடுப்பதாக உறுதியாக நம்புவீர்களானால், பரஸ்பர புரிதல் சரியாக இருந்தால் , சமூகத்தின் பிற்போக்குத்தனங்களின் பிரநிதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி பணியாதீர்கள். அந்த பிரநிதிகள் உங்கள் பெற்றோராகவும் இருக்கலாம்....

    0 comments:

    Post a Comment