Thursday, 18 September 2014

Tagged Under:

இது புது மணத் தம்பதிகளுக்கு மட்டும் !!

By: Unknown On: 22:06
  • Share The Gag
  • எதையுமே எதிர்பார்க்காதவர்கள், வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களை சந்திப்பதில்லை என்பது சான்றோர் வாக்கு. இந்தத் தத்துவம், நம்  எல்லோருக்கும், எல்லாக் காலகட்டங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண உறவில் அடியெடுத்து வைப்போருக்கு!

    திருமண பந்தத்தினுள் நுழையும்போது, நாம் ஒரு புதிய மனிதரைப் பார்க்கிறோம். அந்த நபர் நமக்குப் பொருத்தமானவர் என்றும், நமக்கு வேண்டிய  எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்றும் ஆழ்மனதில் நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு பதிந்து விடுகிறது. ‘எனக்கு எதிர்பார்ப்புகளே இல்லை’ என  வெளியே சொல்லிக் கொண்டாலும், எல்லா மனிதர்களுக்குள்ளும் நிச்சயம் அது இருக்கும்.

    நம்மைச் சார்ந்தவர்கள் எல்லோரும், அது வாழ்க்கைத்துணையோ, குழந்தைகளோ, நண்பர்களோ யாராகினும், அவர்கள் நம்மைப் புரிந்து நடந்துகொள்ள  வேண்டும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என சிலபல எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஏதேனும் பிரச்னை வந்தால்,  தவறு நம் மீதே இருந்தாலும், நம்மைச் சார்ந்தவர்கள் நமக்குத்தான் சப்போர்ட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்றாட  வாழ்க்கையில் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எதிர்பார்ப்புகளே இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லைதான். ஆனால், அது அளவோடு இருந்தால் பரவாயில்லை. எல்லா விஷயங்களிலும்  எதிர்பார்ப்புகள் கூடும்போது, நம்மையும் அறியாமல் எதிராளியை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பதை உணர்வதில்லை. எதிர்பார்ப்புகள் கூடக்கூட,  ஒவ்வொரு செயலிலும் அனுபவிக்க வேண்டிய வியப்பை நாம் தவற விடுகிறோம். எதிர்பார்க்காமல் நடக்கும் விஷயத்தில் கிடைக்கிற சந்தோஷமும்  சுவாரஸ்யமும் ஈடு இணையற்றது. நினைத்தது நினைத்த மாதிரியே நடந்தது என்கிற திருப்தியைத் தவிர, எதிர்பார்ப்பு வேறெதையும் நமக்குக்  கொடுப்பதில்லை.

    திருமண வாழ்க்கையில் இத்தகைய எதிர்பார்ப்புகள்தான் உறவுகள் சிதையவும், திருமணத்தைத் தோல்வியடையச் செய்யவும் காரணமாகின்றன.  விவாகரத்து வேண்டி வழக்கறிஞர் களை அணுகும் பலரிடமும் பிரிவுக்கான காரணத்தைக் கேட்டுப் பாருங்கள்… ‘அவ (அல்லது) அவர் நான்  சொல்றபடி கேட்கறதே இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு கணவனோ, மனைவியோ தனக்குக் கட்டுப்பட்டு, தன்  விருப்பப்படி வாழ வேண்டும் என நினைப்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்புதான். அதன் பின்னணியில் மறைந்திருப்பது கட்டுப்பாடன்றி வேறில்லை. எதிர்பார்க்கிற உங்கள் குணத்தால், துணையின் திறமைகள் அனைத்துக்கும் கதவடைக்கப்படுகிறது.

    எதிர்பார்ப்புகள் குறைவதால், அங்கே அன்பும் காதலும் அதிகமாகிறது. உறவுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன.  உதாரணத்துக்கு உங்கள் குழந்தையையே  எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தைச் செய்யாதே என நீங்கள் சொன்னால், அது வேண்டுமென்றே அதைத்தான் செய்யும். நாம் என்ன செய்ய  வேண்டும் என்பதை இன்னொருவர் நமக்கு சுட்டிக் காட்டுவது குழந்தை உள்பட யாருக்குமே பிடிப்பதில்லை.

    எதிர்பார்ப்பதும் அதை எதிர்ப்பதும்தான் மனித இயல்பு. உலகம் புரியாத குழந்தைகளுக்கே இப்படி என்றால், உங்களில் சரிபாதியான துணை மட்டும்  விதிவிலக்கா என்ன?

    எதிர்பார்ப்புகளில் மறைந்திருக்கிற அடுத்த ஆபத்து, குறை கண்டுபிடிப்பதும், திட்டுவதும், விமர்சனம் செய்வதும். ‘இத்தனை வருஷமா என்கூட குப்பை  கொட்டறே… எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு தெரியாதா?’ என்கிற திட்டில் நிறைந்திருப்பது முழுக்க முழுக்க எதிர்பார்ப்பு மட்டுமே. சரி…

    எதிர்பார்ப்பில்லாத உறவுக்கு எப்படிப் பழகுவது?

    உங்கள் துணையின் செயல்கள் உங்களுக்குக் கோபத்தையோ, ஏமாற்றத்தையோ உண்டாக்கும் ஒவ்வொரு முறையும், உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்துவதையோ, திட்டுவதையோ, கடுமையாக விமர்சனம் செய்வதையோ தவிருங்கள். உங்களுடைய ரியாக்ஷன், எதிர்பார்ப்பின் விளைவாக  உண்டானதா என ஒரு நிமிடம் யோசியுங்கள். ‘காலையில எனக்கு வேணும்னு தெரியாது… சட்டையை ஏன் அயர்ன் பண்ணி வைக்கலே?’ என்று  கத்துவது சுலபம்.

    மனைவி என்பவள், கணவனின் தேவையறிந்து பணிவிடை கள் செய்யக் கடமைப்பட்டவள்தானே என்று காலங்காலமாக ஆண்கள் மனதில் பதிந்து  போன எதிர்பார்ப்பின் வெளிப்பாடுதானே இது? எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத போது, நம்மையும் அறியாமல் எதிராளியிடம் கடுமையாக நடந்து  கொள்கிறோம். எதிராளி அமைதியானவர் என்றால் அடங்கிப் போவார். அப்படியில்லாத பட்சத்தில், தன் பங்குக்கு திருப்பி வார்த்தைகளைக் கக்குவார்.  இருவருக்குமான வாக்குவாதம் முற்றும். அன்யோன்யம் கெடும்.

    எதிர்பார்ப்புகளைக் கையாள் வது என்பது கணவன் – மனைவி இருவருக்குமே அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு கலை. அது வாழ்க்கையில்  மிகப்பெரிய சவாலும்கூட. வாழ்நாள் முழுவதும் அந்தச் சவாலை எதிர்கொள்ளப் பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எதிர்பார்ப்புகளை  அழைப்புகளாக மாற்றுவது இந்தப் பிரச்னைக்கான அருமையான தீர்வு. எதிர்பார்க்கும் போது, எதிராளி அதைச் செய்தே ஆக வேண்டும் என்கிற  மறைமுகக் கட்டுப்பாட்டையும் வைக்கிறோம். ஆனால், அழைப்பில் அப்படியில்லை.

    செய்வதும் செய்யாமல் தவிர்ப்பதும் துணையின் தனிப்பட்ட விருப்பம். அழைப்பில் ஒரு விஷயத்தைச் செய்தாக வேண்டிய அழுத்தமோ, மிரட்டலோ,  பயமுறுத்தலோ இருப்பதில்லை. ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து இதைச் செய்யலாமா?’ என்றோ, ‘நாம ஏன் இப்படிச் செய்யக்கூடாது?’ என்றோ, உங்கள்  துணைக்கு அழைப்பு விடுக்கலாம். இந்த அணுகுமுறை நேர்மையானது. பாதுகாப்பானது. நம்மைப் போலவே நம் துணைக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும்.  துணையாகிய நீங்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் அவருக்கும் இருக்கும் என யோசித்தாலே நம் தவறு நமக்குப்  புரிந்து விடும். முதல் கட்டமாக நம்மை மாற்றிக் கொள்ளவும் முனைவோம்.

    எதிர்பார்ப்புகள் அழைப்புகளாக மாறும் போது, உங்களுக்கு நிறைய சம்மதங்கள் கிடைக்கும். அதன் விளைவாக சந்தோஷங்கள் பெருகும். ‘லவ்  பண்றப்ப, எப்படியெல்லாம் நடந்துக்கிட்டே… கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறிப் போச்சு…’ என்கிற புலம்பல்கள் இருக்காது. காதலிக்கிற போது  நீங்கள் இருவரும் அனுபவித்த அதே நெருக்கமும் சுவாரஸ்யமும் காலத்துக்கும் தொடரும்… முயற்சி செய்து பாருங்களேன்!

    எதிர்பார்ப்பில்லாமல் வாழ ஒரு பயிற்சி!

    வீடு முழுக்க ஒரே குப்பை… தேவையற்ற பொருள்களால் நிரம்பி வழிகிற வீட்டை சுத்தப்படுத்த முடிவெடுக்கிறீர்கள். சுத்தப்படுத்த ஆரம்பித்ததும், ‘இது  வேண்டாம்… அது பயன்படாது…’ என ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி வீட்டுக்கு வெளியே வைக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் வீடே காலியாகிறது.  இரண்டே நாள்கள்தான்… மறுபடி மனம் என்கிற வேதாளம், மரத்தின் மீது ஏறிக் கொள்கிறது. ‘ச்சே… அந்த நாற்காலியில உட்கார்ந்து டி.வி  பார்த்தாதான் பார்த்த மாதிரி இருக்கு.

    ஒரு கால் லேசா உடைஞ்சிருந்தா என்ன, சரி பண்ணிக்கலாம்’ என உடைந்து, ஓரத்தில் ஒதுக்கிய நாற்காலியை மறுபடி வீட்டுக்குள் கொண்டு  வருகிறீர்கள். ஒன்று இல்லாமல் வாழ முடியாது என்கிற உங்கள் நினைப் பில் ஒவ்வொன்றாக உள்ளே வருகிறது. மறுபடி உங்கள் வீடு, அதே பழைய  தோற்றத்துக்கு மாறுகிறது. புதிய சிந்தனைகளும்கூட இப்படித்தான். புதிய சிந்தனைகளுக்கு அத்தனை சீக்கிரத்தில் இடம் கொடுக்காது உங்கள் மனது. இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம்.

    சுயநம்பிக்கை, சுயமுன்னேற்றப் புத்தகங்களை வாசிக்கிறோம் அல்லது அது தொடர்பான சொற்பொழிவைக் கேட்கிறோம். படிக்கவும் கேட்கவும்  பிரமாதமாகத்தான் இருக்கிறது. ‘இன்று முதல் நான் இவங்க சொல்றபடி தான் வாழப் போறேன்’ என வைராக்கியம் கொள்கிறோம். நம்மையும்  அறியாமல் நமக்குள் யானை பலம் வந்துவிட்டதாக உணர்கிறோம். எல்லாம் ஒருநாளோ… இரண்டு நாளோதான்… மறுபடி பழைய பலவீனங்களுடனும்  குழப்பங்களுடனும் மனது தடுமாறுகிறது.

    யாராவது விசாரித்தால், ‘அவங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் பயன்படலை’ என சப்பைக்கட்டு கட்டுகிறோம். ஏன்?பிறந்தது முதல்  லட்சக்கணக்கான நெகட்டிவ் எண்ணங்களால் வளர்க்கப்படுகிறோம் நாம் ஒவ்வொருவரும். ‘இது முடியாது, அது தவறு, சாத்தியமே இல்லை’ என்கிற  மாதிரியான நெகட்டிவ் சிந்தனைகள். ஏற்கனவே பல வருடங்களாக மனதுக்குள் டியூன் செய்யப்பட்ட அந்த நெகட்டிவ் எண்ண அலைவரிசையின்  ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு, புதிய சிந்தனைகளுக்குப் பழகுவது என்பது சற்றே சிக்கலானதுதான்.

    என்னதான் செய்வது? மாற்றம் தேவைப்படுகிற சிந்தனைகளை தினசரி மந்திரம் போல உச்சரிக்க வேண்டும். ‘நான் அன்பானவன்/ள்…  நான் என்  துணையை அளவுகடந்து நேசிக்கிறேன்… காலத்துக்கும் காதலுடன் வாழ விரும்புகிறேன்…’ என நீங்கள் விரும்பும் மாற்றத்தை வாய்விட்டுப் பல  முறை சொல்லிக்கொண்டே இருங்கள். குளிக்கிற போது, தனிமையில் இருக்கும்போது… இப்படி எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை  வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த ‘பழையன கழிதல்’ டெக்னிக், நிச்சயம் உங்கள் சிந்தனைகளை மட்டுமின்றி, உங்களுக்கும்  துணைக்குமான அன்யோன்யத்தை, அணுகுமுறையை பாசிட்டிவாக மாற்றும்.

    0 comments:

    Post a Comment