Friday, 30 August 2013

Tagged Under:

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் சொன்ன குட்டி கதைகள்! .

By: Unknown On: 17:44
  • Share The Gag

  • சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற திருமணங்களை நடத்தி வைத்து ஆற்றிய சிறப்புரையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.

    jayalalitha
     

    ”அறநெறிப்படி வாழ்பவர் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம். சாதகம், பாதகம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்களே வரக் கூடாது என்று நினைப்பது கோழைத்தனம். 

    துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வது தான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப் பலனை நாம் உணர முடியும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். 

    கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. 

    சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

    ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி.

    ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

    இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை?” என்று வினவினார்.
    “என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்” என்றது பூனை.

    உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி.

    சில நாட்கள் கழித்து, அந்த நாய் வந்து ஞானியின் முன் நின்றது “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று நாயிடம் கேட்டார் ஞானி. “புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்”, என்றது நாய்.

    ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

    சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, “இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள்” என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
    சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் ஞானி. “எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடை மறித்த ஞானி, “சுண்டெலியே! உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு!” என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
    ஆக, உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியவை உடலைக் கூனாக்கி, உள்ளத்தை மண்ணாக்கி விடும்.

    ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார். இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானனிடம் சென்று, “ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.

    இதற்குப் பதில் அளித்த விவசாயி, “பானையே நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம” என்று சொன்னார்.

    0 comments:

    Post a Comment