Saturday, 26 October 2013

Tagged Under:

போய் வா தலைவா!

By: Unknown On: 14:22
  • Share The Gag

  • 24 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற நட்சத்திரமாக ஒளிர்ந்த  சச்சின் தெண்டுல்கர், விரைவில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறார்.  அவரது பயணத்தின் சில தடங்கள்

    துவங்கியது டென்னிஸ் பந்தில்

    மும்பையின் முன்னணி கோச்  அச்ரேக்கரிடம் கிரிக்கெட் பயிற்சியில் குட்டிப்பையன்  சச்சினை சேர்த்துவிட அழைத்துச்சென்றார் அண்ணன் அஜித். பவ்யமாக கையைக் கட்டிக்கொண்டு பம்மிப் பம்மி நின்ற சச்சினிடம் அச்ரேக்கர் கேட்ட முதல் கேள்வி. ‘நீ கிரிக்கெட் பால்ல விளையாடிருக்கியா பையா?’

    ‘விளையாடியதில்லை சார். டென்னிஸ் பந்தில் மட்டும்தான் தெருவோரம் விளையாடியிருக்கேன்’ என்றான் குட்டிப்பையன். அவ்வளவுதான் போச்சு என அண்ணன் உள்ளுக்குள் உதறிக் கொண்டிருக்க
    ‘அப்படீனா நாளைலருந்து பயிற்சிக்கு வந்துடு’ என்றார் அச்ரேக்கர்.

    அடுத்த நாள்...

    அச்ரேக்கரை அசத்த வேண்டும், அதற்கு  எப்படியெல்லாம் ஷாட்கள் அடிக்க வேண்டும் என்று இரவெல்லாம் தூங்காமல் யோசித்துக்கொண்டிருந்தான் குட்டிப்பையன் சச்சின். முதன்முதலாக பயிற்சிக்குச் செல்லும்போது அண்ணன் அஜித்திடம் ‘அண்ணா! அச்ரேக்கர் சாருக்கு எந்த ஷாட் ரொம்பப் பிடிக்கும், நான் தூக்கி அடிக்கவா... ஸ்ட்ரைட்டா அடிக்கவா?’ எனக் கேட்டுக் கேட்டு ஒரே தொல்லை.

    முதல் நாள் பயிற்சி தொடங்கியது. சச்சினால் சரியாக பேட் பண்ண முடியவில்லை. சச்சினுக்கு கண்ணீரே வந்துவிட்டது. அச்ரேக்கர், ‘இந்தப் பையன் சரியா வரமாட்டானு தோணுதேப்பா’ என்று அண்ணன் அஜித்திடம் தயங்கித் தயங்கிக் கூறினார்.

    ஆனால் அண்ணன் அஜித்தோ, ‘சார்! நிச்சயமா அவன் நல்லா விளையாடுவான்.  ப்ளீஸ்!  அவனுக்கு இன்னொரு வாய்ப்புக் குடுங்க. ஏதோ பதட்டம் ப்ளீஸ் ப்ளீஸ்’ எனக் கெஞ்சினார். மீண்டும் சச்சினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இம்முறை பட்டையைக் கிளப்பினான் பையன். சச்சின் ஆடிய விதம் அச்ரேக்கருக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது. சச்சின், அச்ரேக்கரின் ஆஸ்தான சிஷ்யனானான்.

    அதுவரை பொழுதுபோக்கு விஷயமாக இருந்த கிரிக்கெட், சச்சினுக்கு முழுநேர விஷயமாக மாறியது.

    படிப்பா? பயிற்சியா?

    தினமும் காலை ஆறு மணிமுதல் எட்டு வரை கிரிக்கெட் வலைப்பயிற்சி. பிறகு பள்ளி. மீண்டும் மூன்று முதல் ஏழு வரை பயிற்சி. பிஞ்சுக் கால்கள் சோர்வடைந்து எட்டு மணிக்கே உணவுகூட எடுத்துக்கொள்ளாமல் உறங்கிவிடுவான் சிறுவன் சச்சின். அதோடு தினமும் வெகுதூரத்தில் இருந்த பள்ளிக்குச் சென்று திரும்புவது வேறு பிரச்சினையாக இருந்தது. அது மட்டுமன்றி,  பயிற்சிபெறும் கிரிக்கெட் மைதானத்திலிருந்து பள்ளி வெகுதொலைவில் இருந்தது. எத்தனை அலைச்சல்?

    அதனால் அப்போது படித்துக்கொண்டிருந்த பாந்த்ரா பள்ளியை விட்டு  சாராதாஷ்ரமம் பள்ளியில் சேரும் யோசனை தோன்றியது சச்சினுக்கு. சாராதாஷ்ரமம் பள்ளி, கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் பள்ளியாக வேறு இருந்தது. ஆனால் சச்சினின் தந்தை ரமேஷுக்கோ சச்சின் என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆகவேண்டும் என்பதே ஆசை. பாந்த்ரா பள்ளியே அதற்கேற்ற தரமான கல்வியை அளித்து வந்தது. கிரிக்கெட்டா, படிப்பா என்பதை சச்சினும் அவனுடைய தந்தையும் முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டான தருணம்.

    தன்னுடைய ஆசையைவிட கிரிக்கெட் வீரனாக ஆகவேண்டும் என்கிற மகனுடைய கனவே அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதனால் சச்சின் விருப்பப்படியே சாராதாஷ்ரமம் பள்ளியில் சேர ஏற்பாடு செய்தார். சிக்கல் அத்தோடு தீரவில்லை. சாராதாஷ்ரமம் பள்ளியோ சச்சினின் வீட்டிலிருந்து வெகுதொலைவில் இருந்தது. தினமும் அங்கே போய்வருவது சிரமம் என்பதால் அண்ணன் அஜித் ஒரு ஏற்பாடு பண்ணினார். சச்சின், பள்ளிக்கு அருகில் இருக்கிற மாமா ஒருவரின் வீட்டில் தங்கிப் படிப்பது. விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவது, இதன்மூலம் ஏரியா நண்பர்களோடு சேர்ந்து வெட்டித் தனமாக சுட்டித்தனம் பண்ணாமல் இருப்பான். அதோடு, கிரிக்கெட் மற்றும் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவான் என்பது அவருடைய திட்டம். அது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம்.

    பட்டம் பணால்

    பாகிஸ்தானில் விளையாட இருந்த பத்தொன்பது வயதுக்கு உட்பட் டோருக்கான அணியில் தானும் இடம்பெறுவோம் என்று ஆர்வமாகக் காத்திருந்தார் சச்சின். பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் அதே தேதியில் சச்சினுக்கு பத்தாம்வகுப்பு இறுதித் தேர்வும் நடைபெற இருந்தது. படிப்பா, விளையாட்டா என்று மீண்டும் ஒருமுறை முடிவெடுக்க வேண்டிய நிலை. என்னதான் மகன் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரனாக வரவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தந்தை ரமேஷூக்கும் அம்மா ரஜினிக்கும் பையன் பரீட்சையை விட்டுவிட்டு பாகிஸ்தானில் போய் கிரிக்கெட் ஆடுவதில் விருப்பமில்லை. காரணம், கல்லூரிப்  பேராசிரியரான ரமேஷுக்கு தன்னுடைய மகன் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவன் என்கிற அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற பயம். குழப்பமான மனநிலையில் இருந்த அவர், இறுதியாக மகனுடைய விருப்பமே தன் விருப்பம் என்று சச்சின் பாகிஸ்தான் செல்ல  சம்மதித்தார். அந்தப் பத்தாம் வகுப்புத் தேர்வில் மற்ற எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்த சச்சின், ஆங்கிலத் தேர்வில், ‘கோட்’ அடித்தார். பின் தனித் தேர்வராக எழுதி அதிலும் தேறினார். ஆனால்  இன்றுவரை அவரது அப்பாவின் ஆசையான பட்டப் படிப்பை முடிக்கவே இல்லை.

    அப்பா,  ஆட்டோ கிராஃப் போடுங்க

    மிகக் குறைந்த வயதில் (16) டெஸ்ட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட வீரர் சச்சின். இதற்கான பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி இருந்தபோது சச்சினால் கையெழுத்திட முடியாத சூழல். ஏனெனில், இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமென்றால் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆனால் சச்சினுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான பாகிஸ்தான் சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் சச்சினுடைய அப்பா ரமேஷ்தான் கையெழுத்திட்டார்.

    மூக்கு உடைந்தாலும்...

     1989-ஆம் ஆண்டு, சியால்கோட்டில் பாகிஸ்தானுடனான நான்காவது டெஸ்ட் போட்டி. இந்தியாவின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டுபோல சரிந்துகொண்டிருந்தது. ஆக்ரோஷமாக பந்து வீசிக்கொண்டிருந்தனர் புயல்வேகப் பந்துவீச்சாளர்களான இம்ரான்கான், வாக்கர் யூனுஸ் மற்றும் வாசிம் அக்ரம். ஸ்கோர் 38 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள். பரிதாப நிலை. 16 வயதுப் பையன் சச்சினும் கொஞ்சம் அனுபவம் வாய்ந்த நவ்ஜோத் சிங் சித்துவும் நிலைத்து நின்று ஆடி ஸ்கோரை 104-க்கு உயர்த்தினர். அந்த நேரத்தில் வக்கார் யூனிஸ் வீசிய பந்து, சச்சினின் முகத்தை பதம் பார்த்தது (அந்தக் காலத்தில் ஹெல்மெட்டில் முகத்தை மூடும் வலைக்கம்பி பயன்படுத்துவது அரிது). பலமான அடி. மூக்கிலிருந்து கொடகொடவென ரத்தம் கொட்டுகிறது. மைதானத்தில் அப்படியே தடுமாறி விழுகிறார் சச்சின். ஸ்ட்ரெச்சர் வந்தது. முதலுதவி அளிக்கப்பட்டது. ‘நீ பெவிலியனுக்குப் போ’ என்றார்கள் டாக்டர்கள். அணி தள்ளாடிக் கொண்டிருந்தாலும் கேப்டனாக இருந்த ஸ்ரீகாந்த்தும் அதையே கூறினார். ஆனால் சச்சின் மறுத்துவிட்டார். விளையாடியே தீருவேன் என்று,  ஒரு கர்ச்சீப்பை நனைத்து மூக்கில் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார்.  ‘ஐயாம் ஆல்ரைட் ஐகேன் ப்ளே’ என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தை எதிர்கொள்ள ஆயத்தமானார். வந்தது பந்து... மீண்டும் வாக்கார் யூனூஸ்... எதிரில் நிற்கும் சிறுவன் அடிபட்டதைக் கண்டும் அவருக்கு இரக்கம் தோன்றவில்லை. இரக்கப்படும் இடமும் நேரமும் அதுவல்ல. சீற்றம் குறையாமல் பாய்ந்து வந்தது பந்து.  அற்புதமான ஒரு ஸ்கொயர் ட்ரைவ். பவுண்ட்ரி! அடுத்த பந்து இம்முறை இலக்கணமாக எழுதி வைக்கப்பட வேண்டிய கவர் ட்ரைவ். இன்னொரு பவுண்ட்ரி... அதற்குப் பிறகு அற்புதமாக ஆடி 57 ரன்களை எடுத்துவிட்டுத்தான் அவுட்டானார் சச்சின்.

    காதல் ரோஜா

    அப்போது சச்சினுக்கு 19 வயது. சச்சினின் உருவமும் புகழும் அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகளை பெற்றுத் தந்திருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இளம் பெண்கள் ரகசியமாக இதயத்திற்குள் சச்சினை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த காலம்.

    ஆனால் விழாவொன்றில் ஏதேச்சையாகப் பார்த்த அஞ்சலி மீது சச்சினுக்கு காதல் அரும்பியது. சச்சின் கல்லூரிப் படிப்பைக் காணாதவர். அஞ்சலி மும்பை மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அதுவும் போக. அஞ்சலிக்கு சச்சினைவிட நான்கு வயது அதிகம்! தேசம் முழுக்க தொலைக்காட்சியில் பார்த்த முகம் என்பதால் எங்கே போனாலும் யாராவது ஐந்து பேர் ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டிக்கொண்டு நிற்பார்கள். பிரைவசி என்பதே கிடையாது. இதில் எப்படி சந்தித்துக் கொள்வது? தலையில் தொப்பி போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் காதலியோடு வீட்டுக்குத் தெரியாமல், ‘ரோஜா’ படம் பார்த்ததை பேட்டிகளில் குறிப்பிடுகிறார் சச்சின். தொப்பி மட்டுமல்ல, கறுப்புக் கண்ணாடி, விக் என்று மாறுவேடங்கள் போட்டுக்கொண்டு அஞ்சலியைப் பார்க்கப் போவார். 1995-இல் இருவீட்டாரும் பச்சைச்கொடி காட்ட... 22 வயதேயான சச்சினுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

    ஐஸ்கட்டிகளோடு ஆட்டம்

    1999. சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான  டெஸ்ட் போட்டி. இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. சச்சின் மட்டும் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் வீழ்ந்தால் ஆட்டம் குளோஸ். அந்த நேரம் பார்த்து பல நாட்களாக தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்த முதுகு வலி உச்சமடைகிறது. நிற்கக்கூட முடியவில்லை.

    ஆனாலும் முதுகில் ஐஸ்கட்டிகளை கட்டிக்கொண்டு ஆட ஆரம்பித்தார். 273 பந்துகள், 407 நிமிடங்கள் தாக்குப்பிடித்து விளையாடி சதமடித்தார். சதமல்ல முக்கியம்,  இந்திய அணியை எப்படியாவது தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற வேகமே அவரை வலியையும் பொறுத்துக்கொண்டு களத்தில் நிற்க வைத்தது. இறுதியில் வலி வென்றது. இந்தியா தோற்றது. ஒரு கட்டத்தில் தவறான ஷாட் அடித்து அவுட்ஆனார்.  சச்சினின் அர்ப்பணிப்பை பாகிஸ்தான் பத்திரிகைகளே பாராட்டின. இரண்டு முறை காயங்களால் அவதிப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து மீண்டும் மீண்டும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் சச்சின்.

    தந்தையா? தாய்நாடா?

     1999 மே மாதம். இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாம் உலகக் கோப்பையை வென்று 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்தியா மீண்டும் வெல்ல வேண்டும் என்று நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நேரம். அந்தப் பதினாறு ஆண்டு காலத்தில் மற்ற நாடுகளும் வலுவடைந்திருந்தன. குறிப்பாக ஸ்ரீலங்கா. தகுதிப் போட்டிகளிலேயே அழுத்தம் ஆரம்பித்து விட்டது. சச்சின் களம் இறங்க வேண்டிய வேளை.  சச்சினின் அப்பா ரமேஷ் டெண்டுல்கர்,  மும்பையில் ஹார்ட் அட்டாக்கில் காலமாகிவிட்டார் எனச் செய்தி வருகிறது. அவர் சச்சினுக்கு அப்பா மட்டுமல்ல, நண்பரும் கூட. சச்சினுடைய அப்பாவிற்கு கிரிக்கெட் மீது பெரிய ஆர்வம் கிடையாது. அவர் கவிஞர். ஆனாலும் தன் கனவுகளை முறித்துப் போடாமல் அதற்கு உரமிட்டு வளர்த்தவரின் நினைவுகளால் நெஞ்சம் கனமேற கண்ணீரை விழுங்கிக்கொண்டு ஆடுகிறார் சச்சின். காரணம், தேசத்தின் மானம் அவர் கைகளில். பத்து மணி நேரப் பயணத்திற்குப் பின் இந்தியா வருகிறார். பயணக் களைப்பு. துக்கம். விதவையாகிவிட்ட  தாயைப் பார்க்கும்போது மனம் ரணமாகிறது. வாய்விட்டு அழக்கூட முடியாமல் மீடியா துரத்துகிறது. அப்போது சச்சினுக்கு வயது 26.

    இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்கிறார். அடுத்த போட்டி இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. இரண்டே நாட்கள் இருந்து விட்டு  அடுத்த போட்டியில் ஆட வந்து விடுகிறார். அந்தப் போட்டியில் இந்தியா எதிர்கொள்ள இருந்த அணி கென்யா. அப்படி ஒன்றும் வலுவான அணி அல்ல. ஆனால் தகுதிப் போட்டியில் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம். அப்பாவின் நினைவுகளோடு ஆடினார் சச்சின். அன்று அவர் எடுத்த ரன்கள் 140 (101 பந்துகளில்) .

    அதைப் பற்றி பின்னாளில் சச்சின் ஒருமுறை சொன்னார்: ‘அம்மா சொன்னார்... போ, போய் விளையாடு. தாய் முக்கியம்தான். ஆனால் தாய்நாடு அதைவிடப் பெரிது. அதைவிட முக்கியம்’.

    தேசம் பெரிது. அதை மறக்காத அந்தக் குள்ள மனிதன் உண்மையில் உயரமானவன்.

    இவை வெறும் எண்கள் அல்ல;24 ஆண்டுகால உழைப்பு

    50024    எல்லாவித உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அடித்த ரன்கள்
     
    34273    எல்லாவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அடித்த ரன்கள்

    18426    ஒருநாள்  போட்டிகளில் அடித்தவை (உலகிலேயே இதுதான் அதிகம்)
     
    15837     டெஸ்ட் போட்டிகளில் அடித்த ரன்கள்

    15310   ஒருநாள் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அடித்த ரன்கள் (45 சதம் மற்றும் 75 அரைசதங்கள் இதில் அடங்கும்)
     
    13408    டெஸ்ட் போட்டிகளில் 4-ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி விளாசியவை

      8705     வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அடித்தவை (உலகிலேயே அதிகம்)
     
      6707     ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே (ஒருநாள் மற்றும் டெஸ்ட்) அடித்த ரன்கள். சராசரி 49.68
     
      3113     இலங்கைக்கு எதிராக அடித்த ரன்கள்

      2278     உலகக் கோப்பை போட்டிகளில் குவித்த ரன்கள்

      1894     1998-ஆம் ஆண்டு மட்டுமே அடித்த ரன்களின் எண்ணிக்கை. இதுவரை ஒரே ஆண்டில் அடிக்கப்பட்டவற்றில் இதுவே அதிகம்

      1562     2010-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே   அடித்த ரன்கள்

        866     ஒருநாள் போட்டிகளில் சச்சினோடு விளையாடிய வீரர்களின் எண்ணிக்கை  (தன்னுடைய மற்றும் எதிரணி இரண்டும் சேர்த்து)
     
        673    2003 உலகக் கோப்பையில் குவித்த ரன்கள் (உலகக் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச  ரன்கள் இதுவே)
     
        593    டெஸ்ட் போட்டிகளில் சச்சினோடு விளையாடிய வீரர்கள் எண்ணிக்கை (எதிரணி சேர்த்து)
     
        463     சச்சின் ஆடிய ஒருதினப் போட்டிகளின் எண்ணிக்கை

        264     சிக்ஸர்கள் எண்ணிக்கை

        185     ஏப்ரல் 1990 தொடங்கி ஏப்ரல் 1998 வரை ஓய்வின்றி தொடர்ச்சியாக கலந்துகொண்ட ஒருதினப்  போட்டிகளின் எண்ணிக்கை

        118     டெஸ்ட் போட்டிகளில் அடித்த 50 ப்ளஸ் ஸ்கோர்கள் (உலக சாதனை)
     
        100     அடித்த சதங்கள்

          96     ஒருதினப் போட்டிகளுக்காக ஆடிய மைதானங்களின் எண்ணிக்கை

          70     சச்சின் விளையாட இந்தியா வென்ற டெஸ்ட் வெற்றிகள்

          62     ஒருநாள் போட்டிகளில் பெற்ற ஆட்டநாயகன் விருதுகள்

          51     டெஸ்ட்போட்டிகளில் அடித்த சதங்கள்

          49     ஒரு நாள் போட்டிகளில் அடித்த சதங்கள்

          15     ஒரு நாள் போட்டிகளில் வென்ற தொடர் நாயகன் விருதுகள்
     
          14     டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆட்ட நாயகன் விருதுகள்

          14     ஆஸ்திரேலியாவின் ப்ரெட்லீ சச்சினை அவுட்டாகியதன் எண்ணிக்கை

            7     நாடுகளுக்கு எதிராக சச்சின் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்

            6     முறை சிக்ஸ்ர்கள் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்துள்ளார்

            6     முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருமுறை வெற்றி.
     
            5     முறை ஒரு நாள் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்

            3     முறை 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்

            2     சதங்களாவது எல்லா டெஸ்ட் அந்தஸ்து பெற்ற எல்லா நாடுகளுடனும் அடித்துள்ளார்
     
            1     ஒரு நாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர்

           1     ரஞ்சிப் போட்டி, துலிப்ட் ராபி,ஈரானி டிராபி என மூன்றிலும் தன் முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை புரிந்தவர்

            0     தன்னுடைய  முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் எடுத்த ரன்கள்!

    0 comments:

    Post a Comment