Friday, 11 October 2013

Tagged Under: ,

ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!

By: Unknown On: 16:14
  • Share The Gag

  • தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


    11 - erode one rs hotel.Main

     


    இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள் மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு 10% தள்ளுபடி, கண் பார்வையற்றவர்களுக்கு 20% தள்ளுபடி என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது. இன்னொரு பக்க சுவற்றில் கரும்பலகை சீட்டில் எழுதியிருந்து இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஒரு ரூபாய் விலையில் மதிய உணவை வழங்குவதாகவும், அதற்கு நல்லெண்ணத்தோடு நிதியுதவி செய்தவர்கள் பெயரை நன்றியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.


    இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டபோது, ”ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகவும், கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் வழங்கப்படும். அதே சமயம் நோயாளிகளுக்கு துணையாக ஒருவர் உடன் இருப்பர், அவர்களுக்கான உணவிற்கு அவர்கள் வெளியில்தான் செல்ல வேண்டும். 


    சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி 108மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அடுத்த நாள் உணவு என்பதே கேள்விக்குறிதானே!? ஒருவேளை உணவிற்கான செலவு என்பது பலருக்கு இயலாத ஒன்று. அதை மனதில் கொண்டு தினமும் மருத்துவமனையில் 20 பேருக்காக ஒரு ரூபாயில் உணவு வழங்க, அதற்கான டோக்கன்களை மருத்துவமனையில் தருகிறோம். மருத்துவமனையில் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் 20 பேருக்கு ஒரு ரூபாயில் மதிய சாப்பாட்டை அளிக்கிறோம்” என்றார்.


    ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் என பார்சல் சாப்பாடு தயாராக மதிய நேரங்களில் டோக்கனோடு வருபவர்களின் பசியாற்ற காத்திருக்கிறது.


    கையில் டோக்கனோடு சாப்பாடு வாங்க வரும் நபர்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் காண முடிந்தது. ஒரு ரூபாய்க்கு சாப்பாடு குறித்து அவர்களிடம் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, உணவு எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் தங்கள் உறவுக்காரரான நோயாளியோடு பகிந்துகொள்வதாக நெகிழ்ந்து கூறுகின்றனர்.


    சாதாரணமாக தங்கள் மெஸ்ஸில் 25 ரூபாய்க்கு விற்கும் சாப்பாட்டை 24 ரூபாய் தள்ளி வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் நல்ல மனதினரை நினைக்கும் போது வணங்கத் தோன்றுகிறது.


    ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நபர்களிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டு, நன்கொடையளிக்கும் நல்லவர்களின் பெயர்களை தினமும் பெயர்பலகையில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


    நன்கொடை அளிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி Mr.N.Venkataraman, Srii AMV Mess, Near Nallasamy Hospital, Power House Road, ERODE-638001 Cell: 99443-80076. நேரிடையாக வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு…. V.Venkataraman ING Vysya Bank, Erode Branch SB A/c. 405010065939 / IndusInd Bank Erode SB A/c.0034-B75420-050.


    எல்லோரும் தொழில் செய்வது லாபம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்தே என்ற போதிலும், லாபத்தைத் தாண்டி தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதே தொழில் மூலம் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்களை வாழ்த்துவதும், ஊக்குவிப்பதும் மனித நேயமுள்ள அனைவருமே அடிப்படையாக செய்ய வேண்டிய ஒன்று.

    0 comments:

    Post a Comment