Friday, 18 July 2014

Tagged Under: ,

இவ்வளவுதாங்க இப்போதைய சினிமா!

By: Unknown On: 08:13
  • Share The Gag
  • நம் ஊரில் கதை இருக்கோ இல்லையோ கெட்டப், செட் ப்ராப்பர்ட்டி, ஃபார்முலா கதைனு வெச்சுப் படம் எடுத்து ரிலீஸ் பண்ணிடுறாங்க. அதை மீறி படம் எடுத்தால் தெய்வகுத்தம் ஆயிடும்னு பயத்துல அதே மாதிரி தொடர்ச்சியா எடுத்துட்டு இருக்காங்க. அதெல்லாம் என்னன்னு பார்ப்போமா?

     80’-ஸ் பார்முலா படம்: ஹிப்பி வெச்ச விஜயகாந்த் மாதிரி ஒருத்தர் இருக்கணும். தாடி வெச்ச சந்திரசேகர் மாதிரியும் ஒருத்தர் இருக்கணும். கூலிங்கிளாஸ் மாட்டின பாக்யராஜ் மாதிரி இன்னொருத்தர் இருக்கணும். இல்லைனா இந்த மூணு பேர் மாதிரியும் ஒருத்தரே இருக்கலாம்.

    செட் ப்ராப்பர்ட்டி: அலேக் வண்டி, டிரான்சிஸ்டர், குழாய் ஸ்பீக்கர் திருவிழா, பழைய புல்லட், ரஜினி/கமல் பட ரிலீஸ் தியேட்டர்!

    பேக்ரவுண்டில் 'பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’ 'டார்லிங் டார்லிங் டார்லிங்... ஐ லவ் யூ’ங்கிற மாதிரி 80’-ஸ் பாட்டு அடிக்கடி ஒலிச்சுக்கிட்டே இருக்கணும். அதுவும் ஹீரோயின்கூட லவ்வாகிறப்போ, கண்டிப்பா இருக்கணும்.

    ஊருக்குள்ளே டாக்டராகவோ, நர்ஸாகவோ, அல்லது பஞ்சாயத்து ஸ்கூல் வாத்தியாராகவோ ஒரே ஒரு படிச்ச மனுஷன் இருக்கணும். கண்டிப்பா அந்த மனுஷன் மட்டும்தான் படிச்சவனா இருக்கணும்!

    ஐ.டி கம்பெனி படம்: சரக்கடிக்கணும்... சரக்கடிக்கணும்... சரக்கடிச்சுக்கிட்டே இருக்கணும்!

    லேப்டாப் வெச்சுக்கணும். ஹீரோயினைப் பார்க்கணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும். ஹீரோயின்கிட்ட புரபோஸ் பண்ணணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும். ஹீரோயின் ஓகே சொல்லணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும். ஹீரோயின் கெட் லாஸ்ட் சொல்லணும். உடனே ஃப்ரெண்ட்ஸோட சரக்கடிக்கணும்.

    பேய் படம்: ஒரே ஒரு பங்களா வேணும். அந்த பங்களாவுல எக்கச்சக்கமான ஜன்னல்கள் வேணும். அந்தக் கதை முழுக்க இருட்டுலேயே நடக்கணும், பங்களாவுல எக்கச்சக்கமான லைட்டு இருந்தாலும் சுவிட்ச் போர்டு அப்படிங்கிற ஒன்றையே அங்கே இருக்கிற எல்லோரும் மறந்திடணும். டார்ச் லைட்டை அடிச்சுக்கிட்டு பங்களா படிக்கட்டுல அடிக்கடி மேலேயும் கீழேயும் நடக்கணும்.

    குல்லா போட்டுக்கிட்டோ, தாடியோட கோரமாவோ ஒரு வேலைக்காரன்/காரி இருக்கணும். எல்லோரும் தூங்கின பிறகும் இவங்க மட்டும் தூங்காம சுத்தணும். ஆளே இல்லாத அந்த பங்களாவில் கறுப்பு பூனை சுத்தணும். பூனைக்கு சீன் வெச்சீங் களே, பால் வெச்சீங்களா?

    ஹைஃபை பிரமாண்ட படம்: 'கலக்கப்போவது யாரு’ காமெடியன்ஸ் மாதிரி ஹீரோ, வில்லன், வில்லனோட அல்லக்கைகள்னு எல்லோருக்கும் கோட் சூட் தான்!

    டூ பீஸ், சிங்கிள் பீஸ், அரை பீஸ், கால் பீஸ் டிரெஸ் போட்டுத்தான் அத்தனை பொண்ணுங்களும் திரியணும். ஹீரோவுக்கு ஏதாவது பெயர் தெரியாத நோய் இருக்கலாம். தெரு முக்குல இருக்கிற பெட்டிக் கடைக்குப் போறதா இருந்தாலும் ஹீரோ ஹெலிகாப்டர்லதான் போவார்.

    கிராஃபிக்ஸ்ல  இரட்டையர் ஹீரோனு உருவாக்கணும். ஜோடியா சண்டை போடவோ, டூயட் பாடவோ விடணும். படம் முழுக்க கிராஃபிக்ஸ்ல சுண்டு விரலைச் சுண்டி கண்ணாடி உடையுறதும் விமானத்துலேர்ந்து ஜம்ப் பண்ணி மொட்டை மாடியில் நிற்கிற மாதிரி கிராஃபிக்ஸில் சாகசங்கள் பண்ணிக் காட்டணும்.

    ரிவால்வர், ஏகே 47 துப்பாக்கிகளை வைத்து டப்பு டப்புனு குருவி சுடுற மாதிரி அநியாயத்தைத் தட்டிக் கேட்ட ஹீரோ, கடைசியா சரண்டர் ஆகுறப்ப டி.வி-க்காரங்க, பொதுமக்கள்கிட்ட கருத்து கேட்பாங்க. கண்டிப்பா ஒரு ஆட்டோ டிரைவரும் பூ விற்கும் அம்மாவும் அந்த மகராசனை விடுதலை பண்ணணும்னு கருத்து சொல்வாங்க.

    சாமி படம்: 'வேப்பிலை கட்டுற அம்மன்’ என்பதுபோல் அம்மன் பெயரைத்தான் படத்துக்கு வைக்கணும். அம்மனை நம்பாத ஹீரோ, தெய்வ பக்தியில் ஊறிப்போன ஹீரோயின், சாமியாடும் பூசாரி இருக்கணும். அம்மன் கோவில் உண்டியல், நகைகளைக் கொள்ளையடிக்கும் வில்லனை அம்மனே சூலாயுதத்தால போட்டுத்தள்ளணும். கிராஃபிக்ஸ் கம்பெனிக்கு நிறையவே வேலை இருக்கு.

    பூமி பிளக்குறது, தீ வட்டமா எரியுறது, கிளைமாக்ஸில் அம்மன் சிலை எழுந்து வர்றதுனு வழக்கமான கிராஃபிக்ஸ் ஒர்க்கைப் புதுமையா செய்யத் தெரிஞ்சுக்கணும்.

    சாமி படத்துலதான் பாம்பு, நாய், குரங்கு, பல்லி, பூரான்னு அத்தனையும் நடிக்க முடியும். கடைக்குப் போய் காய்கறி வாங்குறதுல இருந்தும் தீ மிதிக்கிற வரைக்கும் வளர்ப்பு விலங்குகள் பண்ணலாம்!

    0 comments:

    Post a Comment