Wednesday, 10 September 2014

Tagged Under:

கவலைகள் கைக்குழந்தைகள் அல்ல!

By: Unknown On: 01:24
  • Share The Gag
  • கவலைக்குள் இருக்கின்றது ஒரு வலை. அதுதான் சின்னச் சின்ன நூல் இழைகளால் சிலந்தி கட்டும் வலை. அந்த வலைக்குள் வந்து வண்டுகளும், பூச்சிகளும் வீழ்ந்துவிடுவதைப் போல், கவலை என்னும் வலைக்குள்ளும் பலர் சிக்கி வீழ்ந்து விடுகிறார்கள்.

    முன்பு இருந்தது போல் இப்போது இல்லை வாழ்க்கை. உணர்ச்சி, வேகம், பரபரப்பு, பகைமை, மோதல்கள் இப்படி எத்தனை எத்தனையோ பிரச்சினைகள். இதனால் பல கவலைகள். இந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி கொள்வதற்குப் பதிலாக, பெரும்பாலானவர்கள் 'கவலை'க்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

    வாழ்க்கை நமக்குக் கணக்கற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கையில் துன்பமும் உண்டுதான். அந்த துன்பமும் இணைந்த வாழ்க்கைப் பயணத்தில் இன்பம் காண்பவரே வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவர்.

    கண்கள் காணும் காட்சிகள் பலவிதம். ஒரு தெரு, அந்தத் தெருவில் இரண்டு விதமான காட்சிகள். ஒரு வீட்டில் சாவுமணி அடிக்கிறது. இன்னொரு வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கிறது. ஒரு வீட்டில் கணவனோடு சேர்ந்திருக்கின்ற மனைவி, மலர்களைச் சூடி மகிழ்ச்சியோடு இருக்கின்றாள். இன்னொரு வீட்டில் பிரிந்திருக்கின்ற ஒருத்தி கண்ணீர் சிந்துகிறாள். இதுதான் வாழ்க்கை. இந்த இரண்டும் கலந்த வாழ்க்கையில் இன்பத்தைக் காண்பவரே வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவர். இதைத்தான்,

    ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
    ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண் கண் பனிவார் புறைப்பப்
    படைத்தோன் மன்ற அப்பண்பிலான்
    இன்னாது அம்ம இவ்வுலகம்
    இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே

    என்கிறது ஒரு புறநானூற்றுப்பாடல்.

    கவலை எல்லோருக்கும் சொந்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கவலை. கல்லுக்குள் தேரையை வைத்த இறைவன் அதற்கான உணவையும் வைத்திருக்கிறான். நமக்கான உணவை, நமக்கான பதிலை, நமக்கான தீர்வைக் கண்டறிய வேண்டியது நாம்தான். படைப்பின் நோக்கமே வாழ்வதுதானே தவிர, கவலைகளால் மடிவது அல்ல.

    காலம் எழுதுகிற கணக்குப் பேரேட்டில் துன்பத்தை அடையாதவர் யார்? தனிமையில் அமர்ந்து சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய துன்பங்கள் தூரப் போய்விடும்.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    என்றார் கவியரசர் கண்ணதாசன்.

    இந்த உலகத்திலே நிலையாக சுகத்தை மட்டுமே அனுபவித்தவர்கள் உண்டா? மருத்துவரிடம் போகிறோம். அவர் பெரும்பாலும் கசப்பான மருந்துகளையே தருவார். கசப்பாக இருக்கிறதே என்று சாப்பிட மறுத்தால் நோய் குணமாகாது. அதைப் போலத்தான் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் சில நேரங்களில் கவலைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    சுழன்று கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டேதானிருக்கும். இது நியதி. இது கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கைப் பாடம்.

    எதிர்ப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் நாம் எதையும் சாதிக்க முடியாது. வானத்தில் பட்டங்கள் பறப்பதைப் பார்க்கின்றோம். அது பூமியிலிருந்து பறக்க விட்டதும் உடனே மேலே போய் விடுவதில்லை. மெதுவாக மேல்நோக்கிச் செல்கிறது. அப்போது காற்று எதிர்க்கின்றது. எதிர்ப்பைத் தாங்கிக் கொண்டு அது மேலே பறக்கின்றது. மேலே பறப்பதற்கு கீழே இருக்கின்ற கைகள் உதவி செய்கின்றன. முயற்சி செய்தால் துயரங்களைத் துரத்தி உயரத்தை எட்டலாம். இதைத்தானே பறக்கின்ற பட்டங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன!

    வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முதல் எதிரி கவலைதான். அதனால் எந்தக் காரணம் கொண்டும் கவலையை நம் அருகிலேயே அனுமதிக்கக் கூடாது. அப்படியானால் அதை எப்படி விரட்டுவது என்கிறீர்களா? இதோ, இளைஞர்களின் விடிவெள்ளி விவேகானந்தர் சொன்னதைச் சொல்லுகிறேன்...

    ஒருநாள் ஒரு துறவி மலை மேல் ஏறிக் கொண்டிருந்தார். திடீரெனப் பல குரங்குகள் அவரைத் துரத்தத் தொடங்கின. துறவி மிகவும் அச்சமடைந்தார். ஓட்டமாய் ஓடலானார். ஓட ஓடக் குரங்குகள் பாய்ந்து விரட்டின. துறவி களைப்படைந்தார், தப்பிக்க வழியில்லாமல் திகைத்தார்.

    அப்போது அவர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒருவர் திரும்பிப் பார்த்தார். துறவியின் நிலையைப் புரிந்து கொண்டார். அவரைப் பார்த்து, 'அப்படியே நில்லுங்கள்!' என கட்டளையிட்டார். சிறிதுநேரம் கழித்து, 'எதிர்த்துச் செல்லுங்கள்' என அறிவுறுத்தினார். துறவி அவர் சொன்னபடியே செய்தார். குரங்குகள் திகைத்தன. பயந்து பின்வாங்கின. பின்னர் ஓடி ஒளிந்து கொண்டன. வாழ்க்கையில் வரும் கவலைகளும், இந்தக் குரங்குகளைப் போலத்தான். பயந்தால் நம்மைத் துரத்தும். எதிர்த்து நின்றால் ஓடி ஒளிந்து கொள்ளும்.

    கவலைகளுக்குக் காரணம் பயம்தான். நாளைக்கு என்ன நடக்குமோ, இதைச் செய்தால் இப்படி ஆகி விடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் கவலைகளை அதிகரிக்கின்றன. நாளை நடக்கப்போவதை இன்றே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட இன்றைக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மன உறுதியுடன் ஈடுபட்டால் வாழ்க்கையில் வரும் கவலைகள் காணாமல் போய் விடும்.

    ஆழ்ந்த அர்ப்பணிப்போடு ஒரு வேலையில் ஈடுபடுவதை பணிப் பண்பாடு என்பார் சிந்தனையாளர் இறையன்பு. இந்தப் பணிப் பண்பாடு ஒவ்வொருவருக்கும் வாய்த்து விட்டால் கவலை எப்படி வரும்? எனவே, கவலைகள் தாக்கும்போது ஆக்கபூர்வமான ஒரு பணியில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.

    சுறுசுறுப்புடன் இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். தேங்கி நிற்கிற நீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அது போல் சோம்பி நிற்கின்றவர்களிடத்தில்தான் கவலைகள் உற்பத்தியாகின்றன. ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். சோர்வு, கவலைகளை உண்டாக்கும். கவலைகள் முகத்தின் அழகை அழித்து விடுகின்றன. கண்களின் ஒளியைக் குறைத்து விடுகின்றன. நெற்றியில் சுருக்கங்களை உண்டாக்கிவிடுகின்றன. ஏன், மதிப்புமிக்க இளமைப் பருவத்தையே இல்லாமல் செய்து விடுகின்றன!

    'இலேசான இதயம் நெடுநாள் வாழும்!' என்றார் ஷேக்ஸ்பியர். கவலைகளை வெற்றி கொள்ள, 'போதும்' என்கிற மனதைப் போற்றுவோம். இதயத்தை மென்மையாக்குவோம்.

    0 comments:

    Post a Comment