Tuesday, 31 December 2013

Tagged Under: , , ,

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்!

By: Unknown On: 00:35
  • Share The Gag



  • மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில்  மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர  விரும்பும்  மெக்கானிக்கல், கெமிக்கல்  என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.

    நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதற்கு உதவும் தேர்வு கேட் (GATE). அண்மைக் காலமாக இந்த கேட் தேர்வின் மூலமாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் (BPCL) மேனேஜ்மெண்ட் ட்ரெயினி பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தப் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் முதல் தடவையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுப் படிப்புகள் அல்லது அதற்கு மேல் காலவரையறை உள்ள படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

    பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி  பிரிவினர் (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில், அனைத்து செமஸ்டர்களின் சராசரி மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும். சிஜிபிஏ, ஓஜிபிஏ, டிஜிபிஏ போன்ற கிரேடுகளில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு நிகரான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

    பொதுப் பிரிவு மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் முதல் தேதி நிலவரப்படி, 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. மாற்றுத் திறனாளிகளுக்கு (40 சதவீத உடற்குறைபாடு) வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும். இதேபோல, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

    கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியுடைய மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரிகள், குழு விவாதத்திற்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதையடுத்து, மேனேஜ்மெண்ட் டிரெயினி நிலையில் வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொடக்க நிலையிலேயே ஊதியம் மற்றும் இதர சலுகைகளைச் சேர்த்து ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஓராண்டு புரபேஷனரி காலம். அதன்பிறகு எக்ஸிகியூட்டிவ் ஆக நியமிக்கப்படுவர். 

    இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் கேட் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு குறித்த விவரங்கள் ஏற்கெனவே, ‘புதிய தலைமுறை கல்வி’ யில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உரிய தகவல்களை முன்னதாகவே வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிகளில் இருந்தால் அவர்கள் தங்களது துறையிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பாரத் பெட்ரோலிய நிறுவன இணையதளத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.01.2014.



    0 comments:

    Post a Comment