Tuesday, 31 December 2013

Tagged Under: , ,

தமிழ் சினிமா 2013 : நெஞ்சுக்குள்ள குடியேறிய ரஹ்மான்

By: Unknown On: 19:46
  • Share The Gag


  •  2013ம் ஆண்டை பொருத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களே ஜொலித்திருக்கிறார்கள். மற்றவர்கள் மக்களின் மனதை வருடும் இசையை அளிக்கவில்லை.


    மிகவும் குறைவான படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 2013ல் 'கடல்', 'மரியான்' ஆகிய இரண்டு படங்களின் பாடல்கள் மூலம் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அப்பாடல்கள் மக்களால் இப்போதும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது.


    அதிலும், 'மரியான்' படத்தின் பாடல்கள் 'சிறந்த தமிழ் ஆல்பம்' என்று ஐ-டியூன்ஸ் தளத்தில் தேர்வாகி இருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.


    ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து அனிருத் இசைக்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'எதிர்நீச்சல்', 'வணக்கம் சென்னை' ஆகிய இரண்டு படங்களின் இசை இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. 'எதிர்நீச்சல்' படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், "படத்திற்கு மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்ததிற்கு அனிருத் இசை முக்கியமான காரணம்" என்று உளமாற பாராட்டினார். உண்மை நிலவரமும் அதுவே.


    அது போலவே, 'வணக்கம் சென்னை' படத்திற்கும் பெரிய பலமாக அமைந்தது அனிருத் துள்ளல் மிகுந்த இசை. ஒரு டி.வி நிகழ்ச்சியில் “இசைக்கு இறையருள் தேவை என்பார்கள். என்னை பொருத்தவரை பாடலுக்கான களத்தினை கேட்டு விட்டு நான் அந்த மூடுற்கு போய் விடுவேன். அதான் இசை அதற்கு ஏற்றார் போல் இருக்கிறது” என்று அனிருத் கூறினார்.


    'எதிர் நீச்சல்' படத்தில் இடம்பெற்ற "பூமி என்னை சுத்துதே" என்ற பாடல் எஃப்.எம்களில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றது. 4000 முறைக்கும் மேல் அப்பாடல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    'தங்கமீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்', 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் 'மெல்ல சிரித்தால்' உள்ளிட்ட சில பாடல்கள் மட்டுமே யுவன் இசையில் வரவேற்பை பெற்றன. 'தலைவா' படத்தில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா', 'உதயம் NH4' படத்தின் 'யாரோ இவன்' உள்ளிட்ட சில பாடல்கள் மட்டுமே ஜி.வி.பிரகாஷ் இசையில் வரவேற்பை பெற்றன. படத்தின் மொத்த பாடல்களுக்கும் வரவேற்பு கிடைக்கும் வாய்ப்பு இருவருக்குமே அமையவில்லை. 'என்றென்றும் புன்னகை' படத்தின் இசை மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டார்.


    சந்தோஷ் நாராயணன் இசையில் 'சூது கவ்வும்' படத்தின் 'காசு பணம் துட்டு மணி மணி' பாடல் வரவேற்பை பெற்றது. அவரது பின்னணி இசை பலரது கவனத்தை ஈர்த்தாலும், பாடல்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு இன்னும் அவர் இசையமைக்கவில்லை.


    2013ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ஆகியோருக்கு முக்கியமான ஆண்டாகவும், யுவன், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களுக்கு பேர் சொல்லும் ஆண்டாக அமையவில்லை.

    0 comments:

    Post a Comment