Sunday, 29 December 2013

Tagged Under: ,

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு

By: Unknown On: 18:43
  • Share The Gag
  • 2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு





     ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை, பொதுநலவாய மாநாடுகள், வடக்கு மாகாண தேர்தல், இந்து- இஸ்லாமிய மத மார்க்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையின் அரசியல்- ஊடக தளத்தில் தொடர்ந்தும் பரபரப்பும், அதிர்வுகளும், மாற்றங்களும் இடம்பெற்றே வந்திருந்தது. 2013ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை வழங்கியது. அது, சர்வதேச ரீதியில் இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத அழுத்தமாக இருந்தது. இலங்கை ஊடக பரப்பில் அதிகம் பேசப்பட்ட விடயங்களின் செய்தி தொகுப்பு இது. 4tamilmedia-வுக்காக இலங்கையிலிருந்து சிறப்பு செய்தியாளர்களினால் தொகுக்கப்பட்டது.
    ஜனவரி: 09


    ரிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

    சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய திருகோணமலையின் மூதூரைச் சேர்ந்த ரிஷானா நபீக் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு நீதித்துறையினால் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
    இச்சம்பவம் குறித்து 4தமிழ்மீடியாவில் வெளிவந்த சிறப்புப் பதிவு : 'ரிஷானாவை கொன்று எழுதிய தீர்ப்பு : கடவுளிடம் சிரிக்கிறது!'

    ஜனவரி: 13

    பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம்

    ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பாராளுமன்ற குழுவின் விசாரணைகளை எதிர்கொண்டிருந்த பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்காக பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டார்.
    பதிவு : எமது அரசியல் : எமது உரிமை 09

    ஜனவரி: 15

    புதிய நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமனம்

    பிரதம நீதியரசராக பணியாற்றிய ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவான் மொஹான் பீரிஸ் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

    பெப்ரவரி: 04

    இலங்கையின் 65வது சுதந்திர தினம்

    சுதந்திரத்தை உண்மையாக அர்த்தப்படுத்தும் வகையில் நாடு அபிவிருத்திப் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது என்று தன்னுடைய சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

    பெப்ரவரி: 12

    இலங்கை மீது ஐக்கிய நாடுகள் குற்றச்சாட்டு

    இறுதி மோதல்களின் போது பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்ட அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டது.

    பெப்ரவரி: 19

    பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 ஆதாரங்களை வெளியிட்டது

    தமிழீழ விடுதலைப் புலிகளின் இளைய மகன் பலாச்சந்திரன் இறுதி மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக சனல் 4 ஆதார படங்களை வெளியிட்டது. (அதனை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்தது)

    மார்ச்: 10

    ஹலால் தரப்படுத்தல் நிறுத்தம்
    பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் (இஸ்லாமிய சட்டங்களுக்கு அமைய உணவுகளை தரப்படுத்தப்படும்) ஹலால் முறையை தடை செய்ய வேண்டும் என்ற கோரி போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளையடுத்து உள்ளுரில் இனி ஹலால் தரப்படுத்தல் கிடையாது என்று முஸ்லிம் அமைப்புக்கள் அறிவித்தன.

    மார்ச்: 18

    மத்தள சர்வதேச விமான நிலையம் திறப்பு
    இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பந்தோட்டையின் மத்தளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

    மார்ச்: 21


    ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் வருடாந்த மார்ச் மாத கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் வாக்களித்தன. (இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது)

    ஏப்ரல்: 09

    இலங்கை தமிழக சினிமாக்களுக்கு தடை வேண்டும்: ராவண சக்தி
    இலங்கையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் சினிமா படங்கள் வெளியிடக்கூடாது என்று ராவண சக்தி என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

    ஏப்ரல்: 10

    இலங்கையின் ஆயுத மோதல்களுக்கு இந்தியா பொறுப்பு: கோத்தபாய ராஜபக்ஷ

    இலங்கையில் 30 வருடங்களாக ஆயுத மோதல்கள் தொடர்ந்தமைக்கு இந்தியாவே பொறுப்பு என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டார். அந்தக் கருத்தை இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் நிகாரித்திருந்தார்.

    ஏப்ரல்: 13

    உதயன் அலுவலகம் எரிப்பு

    யாழ்ப்பாணத்தின் முன்னணி பத்திரிகையான உதயனின் பிரதான அலுவலகம் இனந்தெரியாத ஆயுத குழுவொன்றினால் எரியூட்டப்பட்டது.

    ஏப்ரல்: 22

    வலிகாமத்தில் 6000 ஏக்கர் காணி சுவீகரிப்புக்கு அரசு பணிப்பு

    நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் இராணுவ தேவைகளுக்காக 6000 ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதற்கான ஆணையை இலங்கை அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்தும் மக்களின் வீடுகள், கோவிகள் அழிப்பு அங்கு தொடர்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    மே: 10

    அசாத் சாலி விடுதலை

    ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பொலிஸாரல் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் கொழும்பு மாநாகர சபையின் பிரதி மேயரும், எதிர்த்தரப்பு அரசியல்வாதியுமான அசாத் சாலி 8 நாட்களின் பின் விடுதலையானர்.

    மே: 29

    பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மறைவு

    ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வைத்தியருமான ஜயலத் ஜயவர்த்தன உடல் நலக் குறைபாட்டினால் மரணமடைந்தார்.

    ஜூன்: 08

    ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஷில் வாழ்கிறார்(?) சர்ச்சை

    மோதல்கள் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் கொழும்பில் காணாமற்போயிருந்த முன்னணி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்து வாழ்கிறார் என்று அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். அத்தோடு, நீதிமன்ற விசாரணைகளையும் எதிர்கொண்டு, இறுதியில் அப்படியில்லை என்று கூறி சர்ச்சைகளை முடித்து வைத்தார்.

    ஜூன்: 09

    13வது திருத்த சட்டத்தின் மீதான திருத்தங்களுக்கான அரசின் முயற்சி

    இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்த சட்டத்தில் திருத்தங்களை செய்யும் அவசரம் அரசாங்கத்தின் காணப்பட்டது. அது, பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமே அதை வெளிப்படையாக அறிவித்திருந்தார். பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

    ஜூன்: 24

    வடக்கு மாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு

    வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பெரும்பாலும் செப்டம்பர் 21 அல்லது 28ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார். இறுதியில் செப்டம்பர் 21ஆத் திகதியே தேர்தல் நடைபெற்றது.

    ஜூலை: 15

    வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே.கூ அறிவித்தது

    வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொது முதவமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நீண்ட இழுபறிகளுக்குப் பின், கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அதிகாரபூர்வமான அறிவித்தார்.

    ஜூலை: 24

    ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவு

    ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்தார். பின்னர் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.

    ஜூலை: 25

    வடக்கு உள்ளிட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

    வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் ஆரம்பித்தது
     
    ஆகஸ்ட்: 01

    வெலிவேரிய வன்முறை: இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

    கம்பஹா மாவட்டம் வெலிவேரிய பகுதியில் தமது குடிநீர் உரிமையைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது. இதன்போது, மூவர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    ஆகஸ்ட்: 13

    மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்குவாதி: லீ குவான் யூ விமர்சனம்

    இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்கு எண்ணங்களைக் கொண்டவர் என்று சிங்கப்பூரின் தந்தையும், அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ விமர்சனத்தை முன்வைத்தமை ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றிருந்தது.

    ஆகஸ்ட்: 25

    ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருகை

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார். மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நேரடியாக பார்வையிடும் நோக்கில் வந்த அவர், இதன்போது அரசாங்க- எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் சந்தித்து பேசினார்.

    ஆகஸ்ட்: 31

    இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் அவசியம்; நவநீதம்பிள்ளை அறிவிப்பு

    இலங்கைக்கான தனது பயண முடிவின் போது நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இறுதி மோதல்களின் போது என்ன நடந்தது என்பது பற்றி நம்பிக்கைக்குரிய உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளது என்று அறிவித்தார்.

    செப்டம்பர்: 02

    நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை; அரசாங்கம் நிராகரிப்பு

    இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பயணத்தின் இறுதியின் போது இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை என்று தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவற்றை நிராகரித்தார்.

    செப்டம்பர்: 07

    காணாமற்போனவர்கள்; கொல்லப்பட்டவர்களே: சரத் பொன்சேகா அறிவிப்பு

    இறுதி மோதல்களின்போது காணாமற்போனவர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. அப்படி காணாமற்போனவர்கள் என்று கருதப்பட்டால், அவர்கள் கொல்லப்பட்டவர்கள் என்றே உணரப்பட வேண்டும் என்று இறுதி மோதற்காலங்களில் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர்: 09


    சமூக செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர மறைவு

    சர்வதேச விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனிலா அபேசேகர காலமானார். சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.

    செப்டம்பர்: 15


    ‘யாழ்தேவி’ கிளிநொச்சி சென்றது

    கிளிநொச்சிக்கான யாழ்தேவி ரயிலின் உத்தியோகபூர்வ பயணத்தை வவுனியாவின் ஓமந்தையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அத்தோடு, யாழ்தேவியின் கிளிநொச்சிக்கான முதற்பயணியாக தன்னை பதிவு செய்து கொண்டு பயணத்தையும் மேற்கொண்டார்.

    செப்டம்பர்: 21

    வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்; 80 வீத வாக்குப் பதிவு

    மோதல்கள் முடிவுக்கு வந்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபை தன்னுடைய முதலாவது தேர்தலை எதிர்கொண்டது. வடக்கில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு 80 வீதத்துக்கும் அண்மித்த வாக்குகள் பதிவாகின.

    செப்டம்பர்: 22

    வடக்கு மாகாண சபையை 2/3 பெரும்பான்மையோடு த.தே.கூ கைப்பற்றியது

    வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகுளில் 80 வீதத்துக்கும் அண்மித்த அளவில் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருபெற்றி பெற்றது. சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்பது உறுதியானது.

    ஒக்டோபர்: 07


    வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு

    வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

    ஒக்டோபர்: 08

    இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ் விஜயம்

    இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேசினார்.

    ஒக்டோபர்: 14

    பயங்கரவாத செயற்பாடுகளை அடக்குவது மனித உரிமை மீறல் அல்ல; பிரதம நீதியரசர் அறிவிப்பு

    பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் போது மரணங்கள் நிகழ்வதனை தவிர்க்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களை மனித உரிமை மீறல் என்று அர்த்தப்படுத்த வேண்டாம் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தான் வழங்கிய தீர்பொன்றில் தெரிவித்தார்.

    நவம்பர்: 10

    பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013; இணை அமர்வுகள் ஆரம்பம்

    இலங்கையில் இம்முறை நடைபெறும் 23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப வைபவம் அம்பாந்தோட்டையின் ஆரம்பித்தது.

    நவம்பர்: 11


    ‘சனல் 4’ குழு இலங்கை வருகை

    பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பு உள்ளிட்ட ஊடகப் பணிகளில் ஈடுபடுவதற்காக கெலம் மக்ரே தலைமையிலான பிரித்தானியாவின் சனல் 4  தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு இலங்கை வந்தது.

    நவம்பர்: 15

    பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கிடையிலான மாநாடு கொழும்பில் ஆரம்பம்

    23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரவேற்புரையுடன் ஆரம்பித்தது. பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புறத்தணித்தார்.


    பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ் விஜயம்

    பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து பேசினார்.

    நவம்பர்: 16

    இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை: டேவிட் கமரூன் எச்சரிக்கை

    இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் இலங்கை நடத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளை எதி்ர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரித்தார்.

    நவம்பர்: 17


    பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: கொழும்பு பிரகடனத்துடன் நிறைவு

    இலங்கையின் தலைநகர் கொழும்பில் நவம்பர் 10ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடுகள் கொழும்பு பிரகாடன வெளியீட்டுடன் நிறைவுக்கு வந்தது.
    இச்சம்பவம் குறித்து 4தமிழ்மீடியாவில் வெளிவந்த சிறப்புப் பதிவு : பொதுநலவாய மாநாடு 2013: இலங்கையை பொறுப்புக்கூற பணித்த களம்!
    நவம்பர்: 21

    2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

    2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பித்தார். அதனை, ஐ.தே.க புறக்கணித்தது.

    நவம்பர்: 22

    நடிகரும், கவிஞருமான வ.ஐ.ச.ஜெயபாலன் மாங்குளத்தில் கைது

    வீசா விதிமுறைகளை மீறினால் என்கிற குற்றச்சாட்டில் ஈழத்தின் கவிஞரும், தமிழ்த் திரைப்பட நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை இராணுவத்தினரால் மாங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சில நாட்கள் விசாரணையின் பின் அவர் நாடு கடத்தப்பட்டார்.

    டிசம்பர்: 03

    ஐ.நா.களின் விசேட பிரதிநிதி சலோக பெயானி யாழ் விஜயம்

    இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்தோரின் நலன்சார் விசேட பிரதிநிதி சலோக பெயானி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துபேசினார். இறுதி மோதல்களமான முள்ளிவாய்க்காலையும் பார்வையிட்டார்.

    டிசம்பர்: 11

    இலங்கையில் 2009இல் இடம்பெற்றது ‘மனித படுகொலைகளே’:  நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

    இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது, மனித படுகொலைகளே என்று உரோம் நகரை தலைமையகமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தன்னுடைய தீர்ப்பொன்றில் தெரிவித்தது.

    டிசம்பர்: 14

    இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் அடையாள அட்டைகளுக்கு அனுமதி மறுப்பு

    இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான படங்களுடன் யாரும் எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பித்தாலும், அவை நிராகரிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியது.

    டிசம்பர்: 20

    2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றியது.

    டிசம்பர்: 25


    கிளிநொச்சியில் இந்திய ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கைது

    வீசா விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்கான இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கிளிநொச்சியில் வைத்து இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணைகளை கொழும்பில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட பின் (டிசம்பர் 28) நாடு கடத்தப்பட்டார்.

    0 comments:

    Post a Comment