Wednesday, 1 January 2014

Tagged Under: , , ,

``இன்பமே துன்பம்`` - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

By: Unknown On: 09:57
  • Share The Gag



  •    
    இன்பமே துன்பம்:-

    நாம் நினைப்பது நடக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை; சொல்லியவைகளை மற்றவர்கள் செய்து முடிக்கவில்லை. அப்போது உண்டாகும் மனநிலை கோபம், ஏமாற்றம்தான். அதன் தொடர்ச்சியாய் துன்பம். விரும்பிய உணவைச் சாப்பிடுகிறோம். இன்பமாக உள்ளது. அளவு முறை தெரியாமல் சாப்பிட்டால் அஜீர்ணம். வயிற்றுவலி, மலச்சிக்கல் எனத் துன்பப்படுகிறோம். தட்ப வெப்ப நிலை மாறுகிறது! உடல் நலம் குறைகிறது; துன்பமடைகிறோம். மற்றவர்களது பேச்சும், செயலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத போது பெறும் மனநிலை துன்பம்.

    மிக அரிதான ஒரு பொருளைத் தேடிப்பிடித்து, பெரும் விலை கொடுது வாங்கி உபயோகித்து வருவோம். அதுபோன்ற பொருள் திடீரென விலை குறைந்து விட்டால், அடடா நாம் அதிகம் கொடுத்து ஏமாந்து விட்டோமே அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே? எனப் பலவாறு எண்ணுவோம். வாங்கியபின் இதுவரை அதை உபயோகித்ததை மறந்துவிடுவோம். வைத்திருந்த பணம் அல்லது பொருள் நம்மிடம் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராவிட்டாலும் வருத்தப்பட்டு துன்பமடைகிறோம். பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்கிறோம். வெற்றி பெற்றால் இன்பம் அடைகிறோம். இல்லையென்றால் துன்பப்படுகிறோம்.

    ஆராய்ந்து பார்த்தால் அளவுமுறை அதிகமானால் பெறும் உணர்வே துன்பம் என்று அறியலாம். அளவுக்குள் இருந்தால் இன்பம் சிறு உதாரணம் மூலம் பார்ப்போம். நியாயமான தேவைகளை நிறைவேற்றுமளவு பொருளாதார வசதியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இன்பம் அடைகிறோம். அளவுக்கு மீறிய சொத்து அல்லது பொருளாதார வசதி உள்ளது என்றால், அவைகளைப் பாதுகாத்தல் ஒருபுறம்; பராமரித்தல் மறுபுறம் என சிரமப்படும் நிலை உண்டாகும். நியாயமான வழிகளில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

    பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்களில் விமானநிலைய விரிவாக்கத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றனர். வங்கியில் டெபாசிட் செய்தால், வரி செலுத்த வேண்டும் என்பதால், வீடுகளிலேயே பல இடங்களில் வைத்து பாதுகாத்தனர். வருமான வரித்துறையினர் சோதனையிட்டு, கண்டுபிடித்து, வரி வசூலித்து, மீதித் தொகையை எப்படி பாதுகாப்பதென ஆலோசனை கூறிய செய்தி நாளிதழ்களில் வந்தது. பணத்தை வீட்டில் வைத்து பாதுகாத்து துன்பமடைந்தனர். பணமும் இருந்தது. பயமும் இருந்தது. நடந்தது நடந்தது தான். ஒரு செயல் செய்கிறோம். அதனால் ஒரு பலன் கிடைக்கிறது. அது நாம் விரும்பியவாறு இருந்தால் மகிழ்கிறோம். இல்லாவிட்டால் வருத்தப்படுகிறோம். இதை நினைவில் கொண்டால் இனிவரும் காலங்களில் செய்யும் இது போன்ற செயல்களில் உஷாராக இருந்து நமக்கு எந்தவிதமான முடிவு வேண்டுமோ அதற்கேற்ப செயல்படுவோம். முன்னர் செய்த செயலையோ அதனால் பெற்றபலனையோ மாற்ற முடியாது. அதை ஒரு படிப்பினையாக கொள்ளலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள், நடந்ததை நினைத்து வருத்தப்பட்டே துன்பம் அடைகிறோம். சுயபச்சாதாபம், கழிவிரக்கம் எனப்பலவாறு இதைக் கூறலாம். இந்த மனநிலை நம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு, நம்மையும் பலவீனமாக்கிவிடும். நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள், நல்லவையாக நடக்கட்டும். எனப் பெரியவர்கள் கூறியதை நினைவில கொள்ள வேண்டும், இல்லாவிட்டால, புலம்பல் மன்னர்களாகி விடுவோம்.

    நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நிகழ்காலத்திலும் வீட்டில் உள்ளோரிடம் சுமூகமான உறவு இருக்காது; ஏதாவது குறை கண்டு எரிந்து விழுவோம். நல்ல கண்ணாடி என்றால் உருவத்தை உள்ளவாறு பிரதிபலிக்கும். தரமில்லாத கண்ணாடி எனில், கோணல் மாணலாக உருவத்தை பிரதிபலிக்கும். ஆக, நாம் நடந்ததை நினைத்து நீண்ட காலம் வருந்தினால் தரமில்லாத மனிதர்களாகிவிடுவோம்.

    தரமுள்ள மனிதன்

    இதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? ஆடு, மாடு போன்றவைகளைச் சந்தைகளில் வாங்குபவர்கள் ஒரு சில சோதனைகளை செய்து திருப்தியடைந்த பின், அதற்கேற்றவாறு விலை கூறி வாங்குவர். அதுபோல, நம் மனித வாழ்வில் ஒவ்வொருவரையும் எப்படித் தரம் பிடிப்பது? திருவள்ளுவர் கை கொடுக்கிறார்.

    தக்கார் தகவிலார் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப் படும்.


    எச்சம் என்பது நமது வாரிசுகளல்ல. நமக்குப் பின், அதாவது நமது மறைவுக்குப் பின் என்றும் கூறலாம். நம்மிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டு நாம் ஓரிடத்திலிருந்து அகன்றபின் நம்மைப் பற்றிப் புகழ்ந்தோ, பழித்தோ கூறுவது ஒவ்வொருவரைப் பற்றியும் பலரும் பலவிதமாகக் கணித்து வைத்திருப்பர்.

    இவர் கஞ்சன், பரோபகாரி, நியாயமான நபர், அடாவடித்தனத்துக்கு பெயர் பெற்றவர். சோம்பேறி, சிடுமூஞ்சி, சுறுசுறுப்பானவர், நேரம் தவறாதவர், சொன்னதைச் செய்பவர். கறார் மனிதர் எனப்பல பெயர்களை ஒருவரே கூடப் பலரிடம் பெறுமளவு நடவடிக்கைகளை இருக்கும். ஆனாலும் நாம் அதிகம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் யார்? நம் குடும்ப உறுப்பினர்களும உடன் வேலை பார்ப்பவர்களும்தானே! இவர்களிடம் நம் அணுகுமுறை, பழக்கம எப்படி உள்ளது என்பதுதான் முக்கியம்.

    ஒவ்வொரு பொருளுக்கும் தரத்தை சோதனை செய்து ISI முத்திரை இடுகின்றனர். மனிதனின் தரத்துக்கு சோதனை உண்டா? உண்டு. இதோ தரத்துக்கான சில சோதனைகள்.

    திட்டமிட்ட செயல்பாடுகள்
    அன்பான அணுகுமுறை
    மற்றவர்கட்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது
    அனுசரித்து விட்டுக் கொடுப்பது
    பிறர் மனம் புண்படாமல் பேசுதல்
    பிறர் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும்
    என எண்ணுகிறாரோ, அதே போல்
    மற்றவர்களிடம இருப்பது

    இதுபோல் பல கூறலாம்.

    தேவை மாற்றம்
    மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், மிருக உணர்வுகளில் இருந்து மனித நேயத்தை உணரவே பெரியோர்கள் தோன்றி உபதேசிக்க வேண்டியிருந்தது என்பதை அறியலாம். அவர்கள் மனிதருள் மாணிக்கமாய் ஒளி வீசுகின்றனர். தம் சேவையில் என்றும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கைமுறைகளைப் படித்துப் பார்த்தால், அவர்கள் அடைந்த துன்பங்கள், அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் போன்றவைகள் தெரியவரும். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என பிரமிப்போம். உடல் குறைபாடுகளுடன் சாதனை புரிந்த ஹெலன் கெல்லர், வறுமையிலும் சாதனை புரிந்த பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பலரைக் கூறலாம். நம் வாழ்நாளில் பலரையும் பார்த்திருப்போம்.

    எளிமையாக வாழ்ந்து, பொது சொத்துக்கு ஆசைப்படாமல் நல்லாட்சி செய்த கர்மவீரர் காமராஜர், கடும் உழைப்பால் முன்னேறிய G.D. நாயுடு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பளித்து அகில உலக அளவில் தங்கள் உறபத்திப் பொருட்களை விநியோகிக்கும் சக்தி மசாலா துரைசாமி சாந்தி போன்ற பலரைக் கூறலாம்.

    நமது ஒவ்வொரு எண்ணமும், பேச்சும் செயலும் நம்முள் உறைந்துள்ள இறைநிலையான உள்ளுணர் அறிவால் தரம் பிரித்து நமக்கு அறிவிக்கப்படுகின்றன. அதனை ஏற்று செயல்பட்டால் துன்பமே கிடையாது. ஆனால், குறுகிய நோக்கத்தில், தற்காலிக இன்பத்துக்காக, விரைவில் வசதிகளைப் பெருக்க வேண்டுமென இந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி செயல்படுகிறோம். அதனால், பலர் உடனே இன்பமும் அடைவர்; ஆனால், அவை நீடித்த இன்பமல்ல. கடுமையான குளிரில் சிறு நெருப்பு கதகதப்பைத் தரும்; நெருப்பு அதிகரித்தால் வெப்பம் தாங்கமுடியாது; ஒரு தொலைவுக்கு அப்புறம் இருப்பதே பாதுகாப்பு. ஆனால், பணம், புகழ், புலன் இன்பம் இவற்றுக்கு நாம் எவ்விதமான தூரத்தையும் நிர்ணயிக்க மறந்து விடுகிறோம்.

    தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்; அதேபோல், பிறருக்கு துன்பம தரும் செயல்களை மறந்துகூட நினைக்கக்கூடாது. அப்படி எண்ணினாலே, எண்ணியவை அந்தத் துன்பமானது பிடித்துக்கொள்ளும் என பொய்யாமொழி மொழிந்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

    சில குறிப்புகள்

    பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம்; முழுமையான தகவல் தெரியாமலேயே ஒரு செயலைச் செய்வது; அல்லது பிறருடன் பழகுவது. எனவே, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும், அச்செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான தகவல்கள், இடையில் சந்தேகம் ஏற்பட்டால் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் போன்றவைகளை அறிந்தபின் செயல்பட்டால் நம் வாழ்க்கை துன்பமில்லாததாக அமையும்.

    புதிய நபர்களுடன் பழகும்முன் நம் ஆழ் மனதில் அவர்களுடன் பழகலாமா, வேண்டாமா என ஒரு கேள்வியைப் போட்டு விடை பெற்றபின் பழக்கத்தை நட்பாக மாற்றுவது துன்பம் தராது. தேவையெனில் நம் நலனில் அக்கறையுள்ளவர்களுடன் கலந்து பேசி, கருத்தறிந்து முடிவு செய்யலாம்.

    எல்லோரையும், எல்லா நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெறவேண்டும். எந்தப் பொது நிகழ்வும் நமக்காக மட்டுமே நடப்பதில்லை. (உ-ம்) மழை, வீட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தடை, மின்தடை, பஸ் ஓடாத நிலை, விலைவாசி உயர்வு போன்றவை. ஆனால், நம் வீட்டில் மட்டும் தடையென்றால், உடனே செயல்பட்டு, புகார் செய்து சரிசெய்ய வேண்டும். நம் வீட்டுக் குழாய் பழுதானால் நமக்கு மட்டும் குடிநீர் வரவில்லையென்றால், உடனே சரிசெய்ய வேண்டும். பொதுவாக மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கை முழுவதும் நம்முடன் இணைந்து பயணிப்போர்களை நமது மனமாற்றத்தால் நாம் விரும்பியவாறு மாற்றமுடியும். அதற்கு அடிப்படைத் தேவை நமது மாற்றமே. இவ்வாறு செயல்பட்டால் இனி, எஞ்சிய காலத்தில் வாழ்க்கையைத துன்பமில்லாமல் வாழ முடியும். இன்பம் பெற தேவையான வசதிகள், அதன் அளவு முறைகள் இயற்கை வழங்கிய வாய்ப்புகளை இனி காண்போம். வாழ்க வளமுடன்!

    0 comments:

    Post a Comment