Thursday, 10 October 2013

Tagged Under: ,

200-வது டெஸ்டுக்குப் பின் ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு!

By: Unknown On: 18:13
  • Share The Gag


  • இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
    இதனால், கடந்த சில மாதங்களாக, கிரிக்கெட் உலகில் நிலவி வந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


    சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் பட்டியல்களை மலைக்க வைத்தவரான 40 வயது சச்சின், சமீப காலமாக முழுமையான ஃபார்மில் இல்லை. இந்தச் சூழலில், தனது ஓய்வு முடிவை, பிசிசிஐ-க்குத் தெரிவித்திருக்கிறார். இதனால், 24 ஆண்டுகால அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 


    சச்சின் உருக்கம்

     
    "இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என் வாழ்க்கையின் கனவு. இந்தக் கனவுடன் 24 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருக்கிறேன். 11 வயதில் இருந்து விளையாடிவரும் நிலையில், கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட கடினமாக இருக்கிறது" என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். 


    "இந்தியாவுக்காக விளையாடியதையும், உலகம் முழுவதும் விளையாடியதையும் மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். என் சொந்த மண்ணில் 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்காகக் காத்திருக்கிறேன். 


    என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ-க்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். என்னைப் புரிந்துகொண்டும் பொறுத்துக்கொண்டும் இருந்த என் குடும்பத்தினரும் நன்றி. 


    எல்லாவற்றையும்விட, தங்களது வாழ்த்துகளாலும் பிரார்த்தனைகளாலும் என்னை மிகச் சிறப்பாக விளையாடும் வகையில் என்னை வலுவாக்கிய என் ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 


    சச்சின் டெண்டுலகரின் இந்தச் செய்திக் குறிப்பை, பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ளார். 


    ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின் இப்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணிக்கு எதிராக இரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனை படைப்பார். 


    சச்சின் டெண்டுலகரின் கடைசி மற்றும் 200-வது டெஸ்ட் போட்டி, நவம்பர் 14-ல் தொடங்கி, அவரது சொந்த ஆடுகளமான மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சச்சின்தான். இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் உள்ளனர். இருவரும் தலா 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்தியாவின் ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 


    முன்னதாக, 200-வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமென்று பிசிசிஐ வலியுறுத்தியதாக வெளியான தகவல்களை, அண்மையில் கிரிக்கெட் வாரியம் முழுமையாக மறுத்தது என்று குறிப்பிடத்தக்கது. 


    அதேநேரத்தில், சச்சின் டெண்டுல்கர் அணியில் நீடிப்பதால், இளம் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்ற சர்ச்சையும் நீடித்து வந்தது கவனத்துக்குரியது. 


    0 comments:

    Post a Comment