Thursday, 10 October 2013

Tagged Under:

சந்தேகம் - குட்டிக்கதைகள்!

By: Unknown On: 12:57
  • Share The Gag



  • Image hosted by Photobucket.com


    ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.


    அப்போது இறைவன், ""தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்'' என்றார்.
    உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

    ஒருவன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,'' என்றான்.

    அடுத்தவன், ""நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,'' என்றான்.

    மற்றவன், ""நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,'' என்றான்.

    இன்னொருவன், ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,'' என்றான்.

    இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

    அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ""அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

    அதற்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

    தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
    எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

    ""தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.

    ""கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

    ""யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.

    கடவுள் புன்னகைத்தபடியே, ""இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

    உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

    0 comments:

    Post a Comment