Thursday, 10 October 2013

Tagged Under: ,

லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!

By: Unknown On: 22:51
  • Share The Gag
  •  


    உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் செட்டானதோ இல்லையோ தோழர்கள் பலபேருக்கு அந்தக் காலத்தில் லைஃப் செட்டானது இங்குதானே ! 


    ஹென்றி மில் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார். அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது. நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம். மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று…இன்று நாம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களுக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.


    ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட டைப்ரைட்டர்களில் சிலிண்டர்கள் நட்டுக்குத்தலாக இருந்தன. இதனால், மேட்டரை டைப் செய்து பேப்பரை வெளியில் எடுத்துத்தான் மேட்டரை படிக்கமுடியும். முப்பதாண்டுகள் பழக்கத்துக்கு பிறகுதான், இப்போதுள்ள டைப்ரைட்டரை வடிவமைத்தார் ஹென்றி மில். 


    கீ- போர்டும் முதலில் அல்ஃபபெட்டிக்கல் ஆர்டரில் தான் இருந்தது. பின்னர், ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துக்களை 'ஹோம் கீஸ்' என்றழைக்கப்படும் நடுவரிசைக்கு கொண்டுவந்தனர். அப்புறம் தான், டைப்ரைட்டர்கள் சரளமாக தடதடக்க ஆரம்பித்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2-வுக்கு மேல் கல்வியை தொடர முடியாத ஏழைகளுக்கு டைப்ரைட்டிங் கோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஆனால், இப்போது? 


    அன்று ஹவுஸ் ஃபுல்லாய் இருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் இன்று பழைய படங்கள் ஓடும் சினிமா கொட்டகைகள் கணக்காய் காத்தாடுகின்றன. பல ஊர்களில் இன்ஸ்டிடியூட்டுகள் மூடப்பட்டு கம்ப்யூட்டர் சென்டர்களாக மறு அவதாரம் எடுத்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் டைப்ரைட்டர்களை கம்ப்யூட்டர்கள் கபளீகரம் செய்துவிட்டன. ஒருசில அரசு அலுவலகங்களில் மட்டும் இன்னமும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை கக்கிக் கொண்டிருக்கின்றன டைப்ரைட்டர்கள் .இப்படியே போனால், அடுத்த சில ஆண்டுகளில் டைப்ரைட்டர்களை தொல்லியல் துறை சொந்தம் கொண்டாடி விடும் போலிருக்கிறது. 


    டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்களை கேட்டால், ‘’ஸ்ட்ரென்த் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லை’’ என்று டைப்ரைட்டரைவிட வேகமாக தடக்கிறார்கள். விடுமுறையை வீணடிக்க இந்தக் காலத்து குழந்தைகளுக்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவர்கள் எப்படி டைப் இன்ஸ்டிடியூட்களை தேடி வருவார்கள்? முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பாஸாகி இருந்தால் தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளை எழுத முடியும். அப்புறம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலானவர்களும் என்றாகி… இப்போது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தமிழ்நாடு அரசின் ஜூனியர், சீனியர் தட்டச்சு தேர்வுகளை எழுதலாம் என்றாகிவிட்டது. அதிலும் ஒரு அதிரடி சலுகையாக 6-ம் வகுப்பு பாஸானவர்கள் தமிழ்நாடு அரசின் ஸ்பீடு டெஸ்ட் மட்டும் எழுதலாம், இரண்டாம் தாள் கிடையாது என்கிற அளவுக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்களுக்கு அடிமாட்டு ரேஞ்சுக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 


    இத்தனை சலுகைகளை வாரித் தெளித்தாலும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களில் '’தட்தடா தட்தடா' என டைப் அடித்துக் கொண்டிருந்த தாவணி பெண்களைப் போல இப்போது டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களும் அரிதாகி விட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்ஸ்டிடியூட்களிலும் ஸ்ட்ரென்த் இல்லை. தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளால் மட்டுமே இன்ஸ்டிடியூட்டுகள் ஓரளவு தள்ளாட்டத்திலாவது ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய டைப்ரைட்டர்கள் விற்பனை இல்லை என்கிறார்கள். 


    இன்ஸ்டிடியூட்டுகளில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்ல முடியும். பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இபோதே ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து, ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ? 


    டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!

     
    அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்களை பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா. இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்களை வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புட்டின்! 


    0 comments:

    Post a Comment