Sunday, 10 August 2014

Tagged Under: ,

பூனை ரோமம் போயே போச்சு!

By: Unknown On: 08:53
  • Share The Gag
  •  பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம்... ஆனால், அதுதான் பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும். கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை. என்னதான் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக்கொண்டே வாழும் பெண்கள் அநேகம்பேர் இருக்கிறார்கள். பூனை ரோமங்கள் வெளியே தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பலர் குட்டைக் கை வைத்த சுடிதாரோ பிளவுஸோ அணியத் தயங்குகிறார்கள். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டே வெளியே போக யோசிப்பார்கள். இதற்காக கடைகளில் விற்கிற ‘ஹேர் ரிமூவிங் க்ரீம்’களைப் பயன்படுத்தினாலும் சில நாட்களில் முன்பைவிட வேகமாகவும் முரடாகவும் ரோமங்கள் வளர்ந்துவிடும். அவற்றின் அடர்த்தியும் கூடியதுபோல இருக்கும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்கிறார் சித்தமருத்துவர் செல்வ சுப்பிரமணியன்.

    “கெமிக்கல் கலந்த் க்ரீம்களைப் பூசி பூனை ரோமத்தை நீக்குவதால் அப்போதைக்கு மட்டும்தான் தீர்வு கிடைக்கும். அதிலும் இந்தக் க்ரீம்கள் சிலருக்கு ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்குப் பதிலாக, உங்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் பக்க விளைவுகள் இல்லாமல் பூனை ரோமங்களை நீக்கலாம்.

    வழிமுறை - 1

    குப்பை மேனி இலையையும் வேப்பந்துளிரையும் கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதோடு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைக்கவும். அந்தக் கலவையில் சிறிது பன்னீர் ஊற்றிக் குழைத்துக்கொள்ள வேண்டும். இரவு தூங்கும் முன் பூனை ரோமங்கள் இருக்கும் இடத்தில் இந்தப் பேஸ்டைத் தடவி மறுநாள் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்துவந்தால் நாளடைவில் பூனை ரோமங்கள் காணாமல் போகும்.

    வழிமுறை - 2

    கருந்துளசி கைப்பிடி அளவு, மாதுளம் பழத் தோல் இரண்டையும் இரண்டு நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும் இவற்றுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துப் பொடியாக்கி டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இரவு தூங்கும் முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, இந்தப் பொடியை அதில் குழைத்து ரோமப் பகுதிகளில் தடவி மறுநாள் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால், பூனை ரோமங்கள் நீங்கும். தோலும் பளபளவென்று ஆகிவிடும்.

    வழிமுறை - 3

    கடலை மாவு, பயத்த மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் இரண்டு எலுமிச்சம் பழத் தோல், வேப்பங்கொழுந்து கைப்பிடி அளவு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் மூன்றில் ஒருபங்கு கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து, தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பூசி ஊறவைத்துக் குளித்தால், பூனை ரோமம் படிப்படியாகக் குறையும். தோலும் மென்மையாகும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். எந்தத் தோல் நோயும் வராது.”

    0 comments:

    Post a Comment